Tag: புறநானூறு

  • வெளிறில் நோன்காழ்ப் பணைநிலை முனைஇக்

    புறநானூறு

    வெளிறில் நோன்காழ்ப் பணைநிலை முனைஇக்
    களிறுபடிந்து உண்டெனக் கலங்கிய துறையும்
    கார்நறுங் கடம்பின் பாசிலைத் தெரியல்
    சூர்நவை முருகன் சுற்றத்து அன்ன நின்
    கூர்நல் அம்பின் கொடுவில் கூளியர்
    கொள்வது கொண்டு கொள்ளா மிச்சில்
    கொள்பதம் ஒழிய வீசிய புலனும்
    வடிநவில் நவியம் பாய்தலின் ஊர்தொறும்
    கடிமரம் துளங்கிய காவும் நெடுநகர்
    வினைபுனை நல்லில் வெவ்வெரி நைப்பக்
    கனைஎரி உரறிய மருங்கும் நோக்கி
    நண்ணார் நாண நாள்தொறும் தலைச்சென்று
    இன்னும் இன்னபல செய்குவன் யாவரும்
    துன்னல் போகிய துணிவினோன் என
    ஞாலம் நெளிய ஈண்டிய வியன்படை
    ஆலங் கானத்து அமர்கடந்து அட்ட
    கால முன்ப நின் கண்டனென் வருவல்
    அறுமருப்பு எழிற்கலை புலிப்பால் பட்டெனச்
    சிறுமறி தழீஇய தெறிநடை மடப்பிணை
    பூளை நீடிய வெருவரு பறந்தலை
    வேளை வெண்பூக் கறிக்கும்
    ஆளில் அத்தம் ஆகிய காடே

    கல்லாடனார்

  • வரை புரையும் மழகளிற்றின் மிசை

    புறநானூறு

    வரை புரையும் மழகளிற்றின் மிசை
    வான் துடைக்கும் வகைய போல
    விரவு உருவின கொடி நுடங்கும்
    வியன் தானை விறல் வேந்தே
    நீ உடன்று நோக்கும்வாய் எரிதவழ
    நீ நயந்து நோக்கும்வாய் பொன்பூப்பச்
    செஞ் ஞாயிற்று நிலவு வேண்டினும்
    வெண் திங்களுள் வெயில் வேண்டினும்
    வேண்டியது விளைக்கும் ஆற்றலை ஆகலின்
    நின்நிழல் பிறந்து நின்நிழல் வளர்ந்த
    எம் அளவு எவனோ மற்றே இன்நிலைப்
    பொலம்பூங் காவின் நன்னாட் டோரும்
    செய்வினை மருங்கின் எய்தல் அல்லதை
    உடையோர் ஈதலும் இல்லோர் இரத்தலும்
    கடவ தன்மையின் கையறவு உடைத்து என
    ஆண்டுச் செய் நுகர்ச்சி ஈண்டும் கூடலின்
    நின்நாடு உள்ளுவர் பரிசிலர்
    ஒன்னார் தேஎத்தும் நின்னுடைத் தெனவே

    ஆவூர் மூலங் கிழார்

  • யாதும் ஊரே யாவரும் கேளிர்

    புறநானூறு

    யாதும் ஊரே யாவரும் கேளிர்
    தீதும் நன்றும் பிறர்தர வாரா
    நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
    சாதலும் புதுவ தன்றே வாழ்தல்
    இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
    இன்னாது என்றலும் இலமே மின்னொடு
    வானம் தண்துளி தலைஇ ஆனாது
    கல்பொருது இரங்கும் அல்லல் பேர்யாற்று
    நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
    முறைவழிப் படூஉம் என்பது திறவோர்
    காட்சியில் தெளிந்தனம் ஆகலின் மாட்சியிற்
    பெரியோரை வியத்தலும் இலமே
    சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே

    கணியன் பூங்குன்றன்

  • நஞ்சுடை வால் எயிற்று ஐந்தலை சுமந்த

    புறநானூறு

    நஞ்சுடை வால் எயிற்று ஐந்தலை சுமந்த
    வேக வெந்திறல் நாகம் புக்கென
    விசும்புதீப் பிறப்பத் திருகிப் பசுங்கொடிப்
    பெருமலை விடரகத்து உரும்எறிந் தாங்குப்
    புள்ளுறு புன்கண் தீர்த்த வெள் வேல்
    சினங்கெழு தானைச் செம்பியன் மருக
    கராஅம் கலித்த குண்டுகண் அகழி
    இடம்கருங் குட்டத்து உடந்தொக்கு ஓடி
    யாமம் கொள்பவர் சுடர்நிழல் கதூஉம்
    கடுமுரண் முதலைய நெடுநீர் இலஞ்சிச்
    செம்புஉறழ் புரிசைச் செம்மல் மூதூர்
    வம்புஅணி யானை வேந்துஅகத் துண்மையின்
    நல்ல என்னாது சிதைத்தல்
    வல்லையால் நெடுந்தகை செருவத் தானே

    மாறோக்கத்து நப்பசலையார்

  • கண்ணி கார் நறுங்கொன்றை காமர்

    புறநானூறு

    கண்ணி கார் நறுங்கொன்றை காமர்
    வண்ண மார்பின் தாருங் கொன்றை
    ஊர்தி வால் வெள் ஏறே சிறந்த
    சீர் கெழு கொடியும் அவ்வேறு என்ப
    கறை மிடறு அணியலும் அணிந்தன்று அக்கறை
    மறை நவில் அந்தணர் நுவலவும் படுமே
    பெண்ணுரு ஒரு திறன் ஆகின்று அவ்வுருத்
    தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்
    பிறை நுதல் வண்ணம் ஆகின்று அப் பிறை
    பதினெண் கணனும் ஏத்தவும் படுமே
    எல்லா உயிர்க்கும் ஏமம் ஆகிய
    நீரறவு அறியாக் கரகத்துத்
    தாழ் சடைப் பொலிந்த அருந்தவத்தோற்கே

    பெருந்தேவனார்

  • அடுநை யாயினும் விடுநை யாயினும்

    புறநானூறு

    அடுநை யாயினும் விடுநை யாயினும்
    நீ அளந் தறிதி நின் புரைமை வார்தோல்
    செயறியரிச் சிலம்பின் குறுந்தொடி மகளிர்
    பொலஞ்செய் கழங்கின் தெற்றி யாடும்
    தண்ணான் பொருநை வெண்மணல் சிதையக்
    கருங்கைக் கொல்லன் அரஞ்செய் அவ்வாய்
    நெடுங்கை நவியம் பாய்தலின் நிலையழிந்து
    வீகமழ் நெடுஞ்சினை புலம்பக் காவுதொறும்
    கடிமரம் தடியும் ஓசை தன்ஊர்
    நெடுமதில் வரைப்பின் கடிமனை இயம்ப
    ஆங்குஇனி திருந்த வேந்தனொடு ஈங்குநின்
    சிலைத்தார் முரசும் கறங்க
    மலைத்தனை எண்பது நாணுத்தகவு உடைத்தே

    ஆலத்தூர் கிழார்

  • மண் திணிந்த நிலனும்

    புறநானூறு

    மண் திணிந்த நிலனும்
    நிலம் ஏந்திய விசும்பும்
    விசும்பு தைவரு வளியும்
    வளித் தலைஇய தீயும்
    தீ முரணிய நீரும் என்றாங்கு
    ஐம்பெரும் பூதத்து இயற்கை போலப்
    போற்றார்ப் பொறுத்தலும் சூழ்ச்சியது அகலமும்
    வலியும் தெறலும் அணியும் உடையோய்
    நின்கடற் பிறந்த ஞாயிறு பெயர்த்தும்நின்
    வெண்தலைப் புணரிக் குடகடல் குளிக்கும்
    யாணர் வைப்பின் நன்னாட்டுப் பொருந
    வான வரம்பனை நீயோ பெரும
    அலங்குளைப் புரவி ஐவரோடு சினைஇ
    நிலந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை
    ஈரைம்பதின் மரும்பொருது களத்து ஒழியப்
    பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்
    பாஅல் புளிப்பினும் பகல்இருளினும்
    நாஅல் வேதநெறி திரியினும்
    திரியாச் சுற்றமொடு முழுதுசேண் விளங்கி
    நடுக்கின்றி நிலியரோ வத்தை அடுக்கத்துச்
    சிறுதலை நவ்விப் பெருங்கண் மாப்பிணை
    அந்தி அந்தணர் அருங்கடன் இறுக்கும்
    முத்தீ விளக்கிற் றுஞ்சும்
    பொற்கோட்டு இமயமும் பொதியமும் போன்றே

    முரஞ்சியூர் முடிநாகராயர்

  • நளிஇரு முந்நீர் ஏணி யாக

    புறநானூறு

    நளிஇரு முந்நீர் ஏணி யாக
    வளிஇடை வழங்கா வானம் சூடிய
    மண்திணி கிடக்கைத் தண்தமிழ்க் கிழவர்
    முரசு முழங்கு தானை மூவர் உள்ளும்
    அரசுஎனப் படுவது நினதே பெரும
    அலங்குகதிர்க் கனலி நால்வயின் தோன்றினும்
    இலங்குகதிர் வெள்ளி தென்புலம் படரினும்
    அந்தண் காவிரி வந்து கவர்பு ஊட்டத்
    தோடு கொள் வேலின் தோற்றம் போல
    ஆடுகண் கரும்பின் வெண்பூ நுடங்கும்
    நாடுஎனப் படுவது நினதே அத்தை ஆங்க
    நாடுகெழு செல்வத்துப் பீடுகெழு வேந்தே
    நினவ கூறுவல் எனவ கேண்மதி
    அறம்புரிந் தன்ன செங்கோல் நாட்டத்து
    முறைவெண்டு பொழுதின் பதன் எளியோர் ஈண்டு
    உறைவேண்டு பொழுதில் பெயல்பெற் றோறே
    ஞாயிறு சுமந்த கோடுதிரள் கொண்டுமூ
    மாக விசும்பின் நடுவுநின் றாங்குக்
    கண்பொர விளங்கும்நின் விண்பொரு வியன்குடை
    வெயில்மறைக் கொண்டன்றோ அன்றே வருந்திய
    குடிமறைப் பதுவே கூர்வேல் வளவ
    வெளிற்றுப்பனந் துணியின் வீற்றுவீற்றுக் கிடப்பக்
    களிற்றுக் கணம் பொருத கண்ணகன் பறந்தலை
    வருபடை தாங்கிப் பெயர்புறத் தார்த்துப்
    பொருபடை தரூஉங் கொற்றமும் உழுபடை
    ஊன்றுசால் மருங்கின் ஈன்றதன் பயனே
    மாரி பொய்ப்பினும் வாரி குன்றினும்
    இயற்கை அல்லன செயற்கையில் தோன்றினும்
    காவலர்ப் பழிக்கும் இக் கண்ணகன் ஞாலம்
    அதுநற்கு அறிந்தனை யாயின் நீயும்
    நொதும லாளர் பொதுமொழி கொள்ளாது
    பகடுபுறந் தருநர் பாரம் ஓம்பிக்
    குடிபுறம் தருகுவை யாயின் நின்
    அடிபுறம் தருகுவர் அடங்கா தேரே

    வெள்ளைக்குடி நாகனார்

  • உவவுமதி உருவின் ஓங்கல் வெண்குடை

    புறநானூறு

    உவவுமதி உருவின் ஓங்கல் வெண்குடை
    நிலவுக்கடல் வரைப்பின் மண்ணகம் நிழற்ற
    ஏம முரசம் இழுமென முழங்க
    நேமி யுய்த்த நேஎ நெஞ்சின்
    தவிரா ஈகைக் கவுரியர் மருக
    செயிர்தீர் கற்பின் சேயிழை கணவ
    பொன் னோடைப் புகர் அணிநுதல்
    துன்னருந் திறல் கமழ்கடா அத்து
    எயிரு படையாக எயிற்கதவு இடாஅக்
    கயிறுபிணிக் கொண்ட கவிழ்மணி மருங்கில்
    பெருங்கை யானை இரும்பிடர்த் தலையிருந்து
    மருந்தில் கூற்றத்து அருந்தொழில் சாயாக்
    கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி
    நிலம் பெயரினும் நின்சொற் பெயரல்
    பொலங் கழற்காற்புலர் சாந்தின்
    விலங் ககன்ற வியன் மார்ப
    ஊர் இல்ல உயவு அரிய
    நீர் இல்ல நீள் இடைய
    பார்வல் இருக்கைக் கவிகண் நோக்கிற்
    செந்தொடை பிழையா வன்கண் ஆடவர்
    அம்புவிட வீழ்ந்தோர் வம்பப் பதுக்கைத்
    திருந்துசிறை வளைவாய்ப் பருந்திருந்து உயவும்
    உன்ன மரத்த துன்னருங் கவலை
    நின்நசை வேட்கையின் இரவலர் வருவர் அது
    முன்னம் முகத்தின் உணர்ந்து அவர்
    இன்மை தீர்த்தல் வன்மை யானே

    இரும்பிடர்த் தலையார்

  • ஆன்முலை அறுத்த அறனி லோர்க்கும்

    புறநானூறு

    ஆன்முலை அறுத்த அறனி லோர்க்கும்
    மாண்இழை மகளிர் கருச்சிதைத் தோர்க்கும்
    குரவர்த் தப்பிய கொடுமை யோர்க்கும்
    வழுவாய் மருங்கின் கழுவாயும் உள என
    நிலம்புடை பெயர்வ தாயினும் ஒருவன்
    செய்தி கொன்றோர்க்கு உய்தி இல் என
    அறம் பாடின்றே ஆயிழை கணவ
    காலை அந்தியும் மாலை அந்தியும்
    புறவுக் கருவன்ன புன்புல வரகின்
    பாற்பெய் புன்கம் தேனொடு மயக்கிக்
    குறுமுயற் கொழுஞ்சூடு கிழித்த ஒக்கலொடு
    இரத்தி நீடிய அகன்தலை மன்றத்துக்
    கரப்பில் உள்ளமொடு வேண்டுமொழி பயிற்றி
    அமலைக் கொழுஞ்சோறு ஆர்ந்த பாணர்க்கு
    அகலாச் செல்வம் முழுவதும் செய்தோன்
    எங்கோன்வளவன் வாழ்கஎன்று நின்
    பீடுகெழு நோன்தாள் பாடேன் ஆயின்
    படுபறி யலனே பல்கதிர்ச் செல்வன்
    யானோ தஞ்சம் பெரும இவ் வுலகத்துச்
    சான்றோர் செய்த நன்றுண் டாயின்
    இமையத்து ஈண்டி இன்குரல் பயிற்றிக்
    கொண்டல் மாமழை பொழிந்த
    நுண்பல் துளியினும் வாழிய பலவே

    ஆலத்தூர் கிழார்