Tag: புறநானூறு

  • நீயே பிறர் ஓம்புறு மறமன் னெயில்

    புறநானூறு

    நீயே பிறர் ஓம்புறு மறமன் னெயில்
    ஓம்பாது கடந்தட்டு அவர்
    முடி புனைந்த பசும் பொன்னின்
    அடி பொலியக் கழல் தைஇய
    வல் லாளனை வய வேந்தே
    யாமே நின் இகழ் பாடுவோர் எருத்தடங்கப்
    புகழ் பாடுவோர் பொலிவு தோன்ற
    இன்றுகண் டாங்குக் காண்குவம் என்றும்
    இன்சொல் எண்பதத்தை ஆகுமதி பெரும
    ஒருபிடி படியுஞ் சீறிடம்
    எழுகளிறு புரக்கும் நாடுகிழ வோயே

    ஆவூர் மூலங்கிழார்

  • ஏற்றுவல னுயரிய வெரிமரு ளவிர்சடை

    புறநானூறு

    ஏற்றுவல னுயரிய வெரிமரு ளவிர்சடை
    மாற்றருங் கணிச்சி மணிமிடற் றோனும்
    கடல்வளர் புரிவளை புரையு மேனி
    அடல்வெந் நாஞ்சிற் பனைக்கொடி யோனும்
    மண்ணுறு திருமணி புரையு மேனி
    விண்ணுயர் புட்கொடி விறல்வெய் யோனும்
    மணிமயி லுயரிய மாறா வென்றிப்
    பிணிமுக வூர்தி யொண்செய் யோனுமென
    ஞாலங் காக்குங் கால முன்பிற்
    றோலா நல்லிசை நால்வ ருள்ளும்
    கூற்றொத் தீயே மாற்றருஞ் சீற்றம்
    வலியொத் தீயே வாலி யோனைப்
    புகழொத் தீயே முன்னியது முடித்தலின்
    முருகொத் தீயே முன்னியது முடித்தலின்
    ஆங்காங் கவரவ ரொத்தலின் யாங்கும்
    அரியவு முளவோ நினக்கே யதனால்
    இரவலர்க் கருங்கல மருகா தீயா
    யவனர் நன்கலந் தந்த தண்கமழ் தேறல்
    பொன்செய் புனைகலத் தேந்தி நாளும்
    ஒண்டொடி மகளிர் மடுப்ப மகிழ்சிறந்
    தாங்கினி தொழுகுமதி யோங்குவாண் மாற
    அங்கண் விசும்பி னாரிரு ளகற்றும்
    வெங்கதிர்ச் செல்வன் போலவுங் குடதிசைத்
    தண்கதிர் மதியம் போலவும்
    நின்று நிலைஇய ருலகமோ டுடனே

    நக்கீரனார்

  • புறவின் அல்லல் சொல்லிய கறையடி

    புறநானூறு

    புறவின் அல்லல் சொல்லிய கறையடி
    யானை வான்மருப் பெறிந்த வெண்கடைக்
    கோல்நிறை துலாஅம் புக்கோன் மருக
    ஈதல்நின் புகழும் அன்றே சார்தல்
    ஒன்னார் உட்கும் துன்னரும் கடுந்திறல்
    தூங்கெயில் எறிந்தநின் ஊங்கணோர் நினைப்பின்
    அடுதல்நின் புகழும் அன்றே கெடுவின்று
    மறங்கெழு சோழர் உறந்தை அவையத்து
    அறம்நின்று நிலையிற் றாகலின் அதனால்
    முறைமைநின் புகழும் அன்றே மறம்மிக்கு
    எழுசமம் கடந்த எழுஉறழ் திணிதோள்
    கண்ணார் கண்ணிக் கலிமான் வளவ
    யாங்கனம் மொழிகோ யானே ஓங்கிய
    வரையளந் தறியாப் பொன்படு நெடுங்கோட்டு
    இமையம் சூட்டியஏம விற்பொறி
    மாண்வினை நெடுந்தேர் வானவன் தொலைய
    வாடா வஞ்சி வாட்டும்நின்
    பீடுகெழு நோன்தாள் பாடுங் காலே

    மாறோக்கத்து நப்பசலையார்

  • எங்கோ னிருந்த கம்பலை மூதூர்

    புறநானூறு

    எங்கோ னிருந்த கம்பலை மூதூர்
    உடையோர் போல விடையின்று குறுகிச்
    செம்ம னாளவை யண்ணாந்து புகுதல்
    எம்மன வாழ்க்கை யிரவலர்க் கெளிதே
    5இரவலர்க் கெண்மை யல்லது புரவெதிர்ந்து
    வான நாண வரையாது சென்றோர்க்
    கானா தீயுங் கவிகை வண்மைக்
    கடுமான் கோதை துப்பெதிர்ந் தெழுந்த
    நெடுமொழி மன்னர் நினைக்குங் காலைப்
    பாசிலைத் தொடுத்த வுவலைக் கண்ணி
    மாசு ணுடுக்கை மடிவா யிடையன்
    சிறுதலை யாயமொடு குறுகல் செல்லாப்
    புலிதுஞ்சு வியன்புலத் தற்றே
    வலிதுஞ்சு தடக்கை யவனுடை நாடே

    மதுரைக்குமரன்

  • முதிர்வா ரிப்பி முத்த வார்மணற்

    புறநானூறு

    முதிர்வா ரிப்பி முத்த வார்மணற்
    கதிர்விடு மணியிற் கண்பொரு மாடத்
    திலங்குவளை மகளிர் தெற்றி யாடும்
    விளங்குசீர் விளங்கில் விழுமங் கொன்ற
    களங்கொள் யானைக் கடுமான் பொறைய
    விரிப்பி னகலுந் தொகுப்பி னெஞ்சும்
    மம்மர் நெஞ்சத் தெம்மனோர்க் கொருதலை
    கைம்முற் றலநின் புகழே யென்றும்
    ஒளியோர் பிறந்தவிம் மலர்தலை யுலகத்து
    வாழே மென்றலு மரிதே தாழாது
    செறுத்த செய்யுட் செய்செந் நாவின்
    வெறுத்த கேள்வி விளங்குபுகழ்க் கபிலன்
    இன்றுள னாயி னன்றும னென்றநின்
    ஆடுகொள் வரிசைக் கொப்பப்
    பாடுவன் மன்னாற் பகைவரைக் கடப்பே

    பொருந்திலிளங்கீரனார்

  • அணங்குடை நெடுங்கோட் டளையக முனைஇ

    புறநானூறு

    அணங்குடை நெடுங்கோட் டளையக முனைஇ
    முணங்குநிமிர் வயமான் முழுவலி யொருத்தல்
    ஊனசை யுள்ளந் துரப்ப விரைகுறித்துத்
    தான்வேண்டு மருங்கின் வேட்டெழுந் தாங்கு
    வடபுல மன்னர் வாட வடல்குறித்
    தின்னா வெம்போ ரியறேர் வழுதி
    இதுநீ கண்ணிய தாயி னிருநிலத்
    தியார்கொ லளியர் தாமே யூர்தொறும்
    மீன்சுடு புகையின் புலவுநாறு நெடுங்கொடி
    வயலுழை மருதின் வாங்குசினை வலக்கும்
    பெருநல் யாணரி னொரீஇ யினியே
    கலிகெழு கடவுள் கந்தங் கைவிடப்
    பலிகண் மாறிய பாழ்படு பொதியில்
    நரைமூ தாளர் நாயிடக் குழிந்த
    வல்லி னல்லக நிறையப் பல்பொறிக்
    கான வாரண மீனும்
    காடாகி விளியு நாடுடை யோரே

    மருதினிள நாகனார்

  • நீர்மிகிற் சிறையு மில்லை தீமிகின்

    புறநானூறு

    நீர்மிகிற் சிறையு மில்லை தீமிகின்
    மன்னுயிர் நிழற்று நிழலு மில்லை
    வளிமிகின் வலியு மில்லை யொளிமிக்
    கவற்றோ ரன்ன சினப்போர் வழுதி
    தண்டமிழ் பொதுவெனப் பொறாஅன் போரெதிர்ந்து
    கொண்டி வேண்டுவ னாயிற் கொள்கெனக்
    கொடுத்த மன்னர் நடுக்கற் றனரே
    அளியரோ வளியரவ னிளியிழந் தோரே
    நுண்பல சிதலை யரிதுமுயன் றெடுத்த
    செம்புற் றீயல் போல
    ஒருபகல் வாழ்க்கைக் குலமரு வோரே

    ஐயூர் முடவனார்

  • மாசற விசித்த வார்புஉறு வள்பின்

    புறநானூறு

    மாசற விசித்த வார்புஉறு வள்பின்
    மைபடு மருங்குல் பொலிய மஞ்ஞை
    ஒலிநெடும் பீலி ஒண்பொறி மணித்தார்
    பொலங்குழை உழிஞையடு பொலியச் சூட்டிக்
    குருதி வேட்கை உருகெழு முரசம்
    மண்ணி வாரா அளவை எண்ணெய்
    நுரைமுகந் தன்ன மென்பூஞ் சேக்கை
    அறியாது ஏறிய என்னைத் தெறுவர
    இருபாற் படுக்குநின் வாள்வாய் ஒழித்ததை
    அதூஉம் சாலும் நற் றமிழ்முழுது அறிதல்
    அதனொடும் அமையாது அணுக வந்து நின்
    மதனுடை முழவுத்தோள் ஓச்சித் தண்ணென
    வீசி யோயே வியலிடம் கமழ
    இவன்இசை உடையோர்க்கு அல்லது அவணது
    உயர்நிலை உலகத்து உறையுள் இன்மை
    விளங்கக் கேட்ட மாறுகொல்
    வலம்படு குருசில் நீ ஈங்குஇது செயலே

    மோசிகீரனார்

  • நாடன் என்கோ ஊரன் என்கோ

    புறநானூறு

    நாடன் என்கோ ஊரன் என்கோ
    பாடிமிழ் பனிக்கடற் சேர்ப்பன் என்கோ
    யாங்கனம் மொழிகோ ஓங்குவாள் கோதையை
    புனவர் தட்டை புடைப்பின் அயலது
    இறங்குகதிர் அலமரு கழனியும்
    பிறங்குநீர்ச் சேர்ப்பினும் புள் ஒருங்கு எழுமே

    பொய்கையார்

  • மண்முழா மறப்பப் பண் யாழ் மறப்ப

    புறநானூறு

    மண்முழா மறப்பப் பண் யாழ் மறப்ப
    இருங்கண் குழிசி கவிழ்ந்து இழுது பறப்பச்
    சுரும்பூஆர் தேறல் சுற்றம் மறப்ப
    உழவர் ஓதை மறப்ப விழவும்
    அகலுள் ஆங்கண் சீறூர் மறப்ப
    உவவுத் தலைவந்த பெருநாள் அமையத்து
    இருசுடர் தம்முள் நோக்கி ஒரு சுடர்
    புன்கண் மாலை மலைமறைந் தாங்குத்
    தன்போல் வேந்தன் முன்பு குறித்து எறிந்த
    புறப்புண் நாணி மறத்தகை மன்னன்
    வாள் வடக்கு இருந்தனன் ஈங்கு
    நாள்போல் கழியல ஞாயிற்றுப் பகலே

    கழாஅத் தலையார்