Author: Pulan

  • வணங்கு தொடைப் பொலிந்த வலிகெழுநோன்தாள்

    புறநானூறு

    வணங்கு தொடைப் பொலிந்த வலிகெழுநோன்தாள்
    அணங்குஅருங் கடுந்திறல் என்ஐ முணங்கு நிமிர்ந்து
    அளைச்செறி உழுவை இரைக்குவந் தன்ன
    மலைப்பரும் அகலம் மதியார் சிலைத்தெழுந்து
    விழுமியம் பெரியம் யாமே நம்மிற்
    பொருநனும் இளையன் கொண்டியும் பெரிது என
    எள்ளி வந்த வம்ப மள்ளர்
    புல்லென் கண்ணர் புறத்திற் பெயர
    ஈண்டுஅவர் அடுதலும் ஒல்லான் ஆண்டுஅவர்
    மாண்இழை மகளிர் நாணினர் கழியத்
    தந்தை தம்மூர் ஆங்கண்
    தெண்கிணை கறங்கச்சென்று ஆண்டு அட்டனனே

    இடைக்குன்றூர் கிழார்

  • ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும்

    புறநானூறு

    ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும்
    புதுவது அன்று இவ் உலகத்து இயற்கை
    இன்றின் ஊங்கோ கேளலம் திரளரை
    மன்ற வேம்பின் மாச்சினை ஒண்தளிர்
    நெடுங்கொடி உழிஞைப் பவரொடு மிடைந்து
    செறியத் தொடுத்த தேம்பாய் கண்ணி
    ஒலியல் மாலையடு பொலியச் சூடிப்
    பாடின் தெண்கிணை கறங்கக் காண்தக
    நாடுகெழு திருவிற் பசும்பூட் செழியன்
    பீடும் செம்மலும் அறியார் கூடிப்
    பொருதும் என்று தன்தலை வந்த
    புனைகழல் எழுவர் நல்வலம் அடங்க
    ஒருதான் ஆகிப் பொருது களத்து அடலே

    இடைக்குன்றூர் கிழார்

  • மூத்தோர் மூத்தோர்க் கூற்றம் உய்த்தெனப்

    புறநானூறு

    மூத்தோர் மூத்தோர்க் கூற்றம் உய்த்தெனப்
    பால்தர வந்த பழவிறல் தாயம்
    எய்தினம் ஆயின் எய்தினம் சிறப்பு என
    குடிபுரவு இரக்கும் கூரில் ஆண்மைச்
    சிறியோன் பெறின்அது சிறந்தன்று மன்னே
    மண்டுஅமர்ப் பரிக்கும் மதனுடை நோன்தாள்
    விழுமியோன் பெறுகுவன் ஆயின் தாழ்நீர்
    அறுகய மருங்கின் சிறுகோல் வெண்கிடை
    என்றூழ் வாடுவறல் போல நன்றும்
    நொய்தால் அம்ம தானே-மையற்று
    விசும்புஉற ஓங்கிய வெண்குடை
    முரசுகெழு வேந்தர் அரசுகெழு திருவே

    நலங்கிள்ளி

  • குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும்

    புறநானூறு

    குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும்
    ஆள் அன்று என்று வாளின் தப்பார்
    தொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய
    கேளல் கேளிர் வேளாண் சிறுபதம்
    மதுகை இன்றி வயிற்றுத் தீத் தணியத்
    தாம் இரந்து உண்ணும் அளவை
    ஈன்ம ரோ இவ் உலகத் தானே

    சேரமான் கணைக்கா லிரும்பொறை

  • மெல்ல வந்து என் நல்லடி பொருந்தி

    புறநானூறு

    மெல்ல வந்து என் நல்லடி பொருந்தி
    ஈயென இரக்குவர் ஆயின் சீருடை
    முரசுகெழு தாயத்து அரசோ தஞ்சம்
    இன்னுயிர்ஆயினும்கொடுக்குவென் இந்நிலத்து
    ஆற்றல் உடையோர் ஆற்றல் போற்றாது என்
    உள்ளம் எள்ளிய மடவோன் தெள்ளிதின்
    துஞ்சு புலி இடறிய சிதடன் போல
    உய்ந்தனன் பெயர்தலோ அரிதே மைந்துடைக்
    கழைதின் யானைக் கால் அகப் பட்ட
    வன்றிணி நீண்முளை போலச் சென்று அவண்
    வருந்தப் பொரேஎன் ஆயின் பொருந்திய
    தீது இல் நெஞ்சத்துக் காதல் கொள்ளாப்
    பல்லிருங் கூந்தல் மகளிர்
    ஒல்லா முயக்கிடைக் குழைக என் தாரே

    நலங்கிள்ளி

  • நகுதத் கனரே நாடு மீக் கூறுநர்

    புறநானூறு

    நகுதத் கனரே நாடு மீக் கூறுநர்
    இளையன் இவன் என உளையக் கூறிப்
    படுமணி இரட்டும் பாவடிப் பணைத்தாள்
    நெடுநல் யானையும் தேரும் மாவும்
    படைஅமை மறவரும் உடையும் யாம் என்று
    உறுதுப்பு அஞ்சாது உடல்சினம் செருக்கிச்
    சிறுசொல் சொல்லிய சினங்கெழு வேந்தரை
    அருஞ்சமஞ் சிதையத் தாக்கி முரசமொடு
    ஒருங்கு அகப் படேஎன் ஆயின் பொருந்திய
    என் நிழல் வாழ்நர் சென்னிழல் காணாது
    கொடியன்எம் இறை எனக் கண்ணீர் பரப்பிக்
    குடிபழி தூற்றும் கோலேன் ஆகுக
    ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி
    மாங்குடி மருதன் தலைவன் ஆக
    உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பின்
    புலவர் பாடாது வரைக என் நிலவரை
    புரப்போர் புன்கண் கூர
    இரப்போர்க்கு ஈயா இன்மை யான் உறவே

    நெடுஞ்செழியன்

  • மடங்கலின் சினைஇ மடங்கா உள்ளத்து

    புறநானூறு

    மடங்கலின் சினைஇ மடங்கா உள்ளத்து
    அடங்காத் தானை வேந்தர் உடங்கு இயைந்து
    என்னொடு பொருந்தும் என்ப அவரை
    ஆரமர் அலறத் தாக்கித் தேரொடு
    அவர்ப்புறம் காணேன் ஆயின் – சிறந்த
    பேரமர் உண்கண் இவளினும் பிரிக
    அறன்நிலை திரிய அன்பின் அவையத்துத்
    திறன்இல் ஒருவனை நாட்டி முறை திரிந்து
    மெலிகோல் செய்தேன் ஆகுக மலி புகழ்
    வையை சூழ்ந்த வலங்கெழு வைப்பின்
    பொய்யா யாணர் மையற் கோமான்
    மாவனும் மன்எயில் ஆந்தையும் உரைசால்
    அந்துவஞ் சாத்தனும் ஆதன் அழிசியும்
    வெஞ்சின இயக்கனும் உளப்படப் பிறரும்
    கண்போல் நண்பிற் கேளிரொடு கலந்த
    இன்களி மகிழ்நகை இழுக்கிய யான் ஒன்றோ
    மன்பதை காக்கும் நீள்குடிச் சிறந்த
    தென்புலம் காவலின் ஒரிஇப் பிறர்
    வன்புலங் காவலின் மாறி யான் பிறக்கே

    பூதப்பாண்டியன்

  • தேஎம் தீந்தொடைச் சீறியாழ்ப் பாண

    புறநானூறு

    தேஎம் தீந்தொடைச் சீறியாழ்ப் பாண
    கயத்து வாழ் யாமை காழ்கோத் தன்ன
    நுண்கோல் தகைத்த தெண்கண் மாக்கிணை
    இனிய காண்க இவண் தணிக எனக் கூறி
    வினவல் ஆனா முதுவாய் இரவல
    தைத் திங்கள் தண்கயம் போலக்
    கொளக்கொளக் குறைபடாக் கூழுடை வியனகர்
    அடுதீ அல்லது சுடுதீ அறியாது
    இருமருந்து விளைக்கும் நன்னாட்டுப் பொருநன்
    கிள்ளி வளவன் நல்லிசை யுள்ளி
    நாற்ற நாட்டத்து அறுகாற் பறவை
    சிறுவெள் ளாம்பல் ஞாங்கர்ஊதும்
    கைவள் ஈகைப் பண்ணன் சிறுகுடிப்
    பாதிரி கமழும் ஓதி ஒண்ணுதல்
    இன்னகை விறலியடு மென்மெல இயலிச்
    செல்வை ஆயின் செல்வை ஆகுவை
    விறகுஒய் மாக்கள் பொன்பெற் றன்னதோர்
    தலைப்பாடு அன்று அவன் ஈகை
    நினைக்க வேண்டா வாழ்க அவன் தாளே

    கோவூர் கிழார்

  • மண்முழா மறப்பப் பண் யாழ் மறப்ப

    புறநானூறு

    மண்முழா மறப்பப் பண் யாழ் மறப்ப
    இருங்கண் குழிசி கவிழ்ந்து இழுது பறப்பச்
    சுரும்பூஆர் தேறல் சுற்றம் மறப்ப
    உழவர் ஓதை மறப்ப விழவும்
    அகலுள் ஆங்கண் சீறூர் மறப்ப
    உவவுத் தலைவந்த பெருநாள் அமையத்து
    இருசுடர் தம்முள் நோக்கி ஒரு சுடர்
    புன்கண் மாலை மலைமறைந் தாங்குத்
    தன்போல் வேந்தன் முன்பு குறித்து எறிந்த
    புறப்புண் நாணி மறத்தகை மன்னன்
    வாள் வடக்கு இருந்தனன் ஈங்கு
    நாள்போல் கழியல ஞாயிற்றுப் பகலே

    கழாஅத் தலையார்

  • அருமிளை இருக்கை யதுவே மனைவியும்

    புறநானூறு

    அருமிளை இருக்கை யதுவே-மனைவியும்
    வேட்டச் சிறா அர் சேட்புலம் படராது
    படைமடைக் கொண்ட குறுந்தாள் உடும்பின்
    விழுக்குநிணம் பெய்த தயிர்க்கண் மிதவை
    யாணர் நல்லவை பாணரொடு ஓராங்கு
    வருவிருந்து அயரும் விருப்பினள் கிழவனும்
    அருஞ்சமம் ததையத் தாக்கிப் பெருஞ்சமத்து
    அண்ணல் யானை அணிந்த
    பொன்செய் ஓடைப் பெரும்பரி சிலனே
    நல்யாழ்ஆகுளி பதலையடு சுருக்கிச்
    செல்லா மோதில் சில்வளை விறலி
    களிற்றுக் கணம் பொருத கண்ணகன் பறந்தலை
    விசும்புஆடு எருவை புசுந்தடி தடுப்பப்
    பகைப்புலம் மரீஇய தகைப்பெருஞ் சிறப்பின்
    குடுமிக் கோமாற் கண்டு
    நெடுநீர்ப் புற்கை நீத்தனம் வரற்கே

    நெடும்பல்லியத்தனார்