Author: Pulan

  • கடந்து அடு தானை மூவிரும் கூடி

    புறநானூறு

    கடந்து அடு தானை மூவிரும் கூடி
    உடன்றனிர் ஆயினும் பறம்பு கொள்ற்கு அரிதே
    முந்நூறு ஊர்த்தே தண்பறம்பு நல்நாடு
    முந்நூறு ஊரும் பரிசிலர் பெற்றனர்
    யாமும் பாரியும் உளமே
    குன்றும் உண்டு நீர் பாடினிர் செலினே

    கபிலர்

  • அளிதோ தானே பாரியது பறம்பே

    புறநானூறு

    அளிதோ தானே பாரியது பறம்பே
    நளி கொள் முரசின் மூவிரும் முற்றினும்
    உழவர் உழாதன நான்கு பயன் உடைத்தே
    ஒன்றே சிறியிலை வெதிரின் நெல்விளை யும்மே
    இரண்டே தீஞ்சுளைப் பலவின் பழம்ஊழ்க் கும்மே
    மூன்றே கொழுங்கொடி வள்ளிக் கிழங்கு லீழ்க்கும்மே
    நான்கே அணிநிற ஒரி பாய்தலின் மீது அழிந்து
    திணி நெடுங் குன்றம் தேன்சொரி யும்மே
    வான் கண் அற்று அதன் மலையே வானத்து
    மீன் கண் அற்று அதன் சுனையே ஆங்கு
    மரந்தொறும் பிணித்த களிற்றினிர் ஆயினும்
    புலந்தொறும் பரப்பிய தேரினிர் ஆயினும்
    தாளின் கொள்ளலிர் வாளின் தாரலன்
    யான்அறி குவென் அது கொள்ளும் ஆறே
    சுகிர்புரி நரம்பின் சீறியாழ் பண்ணி
    விரையலி கூந்தல் நும் விறலியர் பின் வர
    ஆடினிர் பாடினிர் செலினே
    நாடும் குன்றும் ஒருங்குஈ யும்மே

    கபிலர்

  • குறத்தி மாட்டிய வறற்கடைக் கொள்ளி

    புறநானூறு

    குறத்தி மாட்டிய வறற்கடைக் கொள்ளி
    ஆரம் ஆதலின் அம் புகை அயலது
    சாரல் வேங்கைப் பூஞ்சினைத் தவழும்
    பறம்பு பாடினர் அதுவே அறம்பூண்டு
    பாரியும் பரிசிலர் இரப்பின்
    வாரேன் என்னான் அவர் வரை யன்னே

    கபிலர்

  • நல்லவும் தீயவும் அல்ல குவி இணர்ப்

    புறநானூறு

    நல்லவும் தீயவும் அல்ல குவி இணர்ப்
    புல்லிலை எருக்கம் ஆயினும் உடையவை
    கடவுள் பேணேம் என்னா ஆங்கு
    மடவர் மெல்லியர் செல்லினும்
    கடவன் பாரி கை வண்மையே

    கபிலர்

  • பாரி பாரி என்றுபல ஏத்தி

    புறநானூறு

    பாரி பாரி என்றுபல ஏத்தி
    ஒருவர்ப் புகழ்வர் செந்நாப் புலவர்
    பாரி ஒருவனும் அல்லன்
    மாரியும் உண்டு ஈண்டு உலகுபுரப் பதுவே

    கபிலர்

  • போற்றுமின் மறவீர் சாற்றுதும் நும்மை

    புறநானூறு

    போற்றுமின் மறவீர் சாற்றுதும் நும்மை
    ஊர்க்குறு மாக்கள் ஆடக் கலங்கும்
    தாள்படு சின்னீர் களிறு அட்டு வீழ்க்கும்
    ஈர்ப்புடைக் கராஅத்து அன்ன என்ஐ
    நுண்பல் கருமம் நினையாது
    இளையன் என்று இகழின் பெறல் அரிது ஆடே

    ஔவையார்

  • ஒருதலைப் பதலை தூங்க ஒருதலைத்

    புறநானூறு

    ஒருதலைப் பதலை தூங்க ஒருதலைத்
    தூம்புஅகச் சிறுமுழாத் தூங்கத் தூக்கிக்
    கவிழ்ந்த மண்டை மலர்க்குநர் யார் எனச்
    சுரன்முதல் இருந்த சில்வளை விறலி
    செல்வை யாயின் சேணோன் அல்லன்
    முனைசுட வெழுந்த மங்குல் மாப்புகை
    மலைசூழ் மஞ்சின் மழ களிறு அணியும்
    பகைப்புலத் தோனே பல் வேல் அஞ்சி
    பொழுது இடைப் படாஅப் புலரா மண்டை
    மெழுகுமெல் அடையிற் கொழுநிணம் பெருப்ப
    வறத்தற் காலை யாயினும்
    புரத்தல் வல்லன் வாழ்க அவன் தாளே

    ஔவையார்

  • எருதே இளைய நுகம் உணராவே

    புறநானூறு

    எருதே இளைய நுகம் உணராவே
    சகடம் பண்டம் பெரிதுபெய் தன்றே
    அவல் இழியினும் மிசை ஏறினும்
    அவணது அறியுநர் யார் என உமணர்
    கீழ்மரத்து யாத்த சேமஅச்சு அன்ன
    இசை விளங்கு கவிகை நெடியோய் திங்கள்
    நாள்நிறை மதியத்து அனையை இருள்
    யாவண தோ நின் நிழல்வாழ் வோர்க்கே

    ஔவையார்

  • ஒருநாள் செல்லலம் இருநாட் செல்லலம்

    புறநானூறு

    ஒருநாள் செல்லலம் இருநாட் செல்லலம்
    பன்னாள் பயின்று பலரொடு செல்லினும்
    தலைநாள் பொன்ற விருப்பினன் மாதோ
    அணிபூண் அணிந்த யானை இயல்தேர்
    அதியமான் பரிசில் பெறூஉங் காலம்
    நீட்டினும் நீட்டா தாயினும் யானைதன்
    கோட்டிடை வைத்த கவளம் போலக்
    கையகத் தது அது பொய்யா காதே
    அருந்தே மாந்த நெஞ்சம்
    வருந்த வேண்டா வாழ்க அவன் தாளே

    ஔவையார்

  • அறுகுளத்து உகுத்தும் அகல்வயல் பொழிந்தும்

    புறநானூறு

    அறுகுளத்து உகுத்தும் அகல்வயல் பொழிந்தும்
    உறுமிடத்து உதவாது உவர்நிலம் ஊட்டியும்
    வரையா மரபின் மாரி போலக்
    கடாஅ யானைக் கழற்கால் பேகன்
    கொடைமடம் படுதல் அல்லது
    படைமடம் படான் பிறர் படைமயக் குறினே

    பரணர்