வருதார் தாங்கி அமர்மிகல் யாவது

புறநானூறு

வருதார் தாங்கி அமர்மிகல் யாவது
பொருது ஆண்டொழிந்த மைந்தர் புண்தொட்டுக்
குருதிச் செங்கைக் கூந்தல் தீட்டி
நிறம்கிளர் உருவின் பேஎய்ப் பெண்டிர்
எடுத்துஎறி அனந்தற் பறைச்சீர் தூங்கப்
பருந்து அருந்துற்ற தானையடு செருமுனிந்து
அறத்தின் மண்டிய மறப்போர் வேந்தர்
தாம்மாய்ந் தனரே குடைதுளங் கினவே
உரைசால் சிறப்பின் முரசு ஒழிந்தனவே
பன்னூறு அடுக்கிய வேறுபடு பைஞ்ஞிலம்
இடம்கெட ஈண்டிய வியன்கண் பாசறைக்
களங்கொளற்கு உரியோர் இன்றித் தெறுவர
உடன்வீழ்ந் தன்றால் அமரே பெண்டிரும்
பாசடகு மிசையார் பனிநீர் மூழ்கார்
மார்பகம் பொருந்தி ஆங்கமைந் தன்றே
வாடாப் பூவின் இமையா நாட்டத்து
நாற்ற உணவினோரும் ஆற்ற
அரும்பெறல் உலகம் நிறைய
விருந்துபெற் றனரால் பொலிக நும் புகழே

கழாத் தலையார்

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *