Tag: புறநானூறு

  • கடுந்தேர் குழித்த ஞெள்ளல் ஆங்கண்

    புறநானூறு

    கடுந்தேர் குழித்த ஞெள்ளல் ஆங்கண்
    வெள்வாய்க் கழுதைப் புல்லினப் பூட்டிப்
    பாழ்செய் தனை அவர் நனந்தலை நல்லெயில்
    புள்ளினம் இமிழும் புகழ்சால் விளைவயல்
    வெள்ளுளைக் கலிமான் கவிகுளம்பு உகளத்
    தேர்வழங் கினைநின் தெவ்வர் தேஎத்துத்
    துளங்கு இயலாற் பணை எருத்தின்
    பா வடியாற்செறல் நோக்கின்
    ஒளிறு மருப்பின் களிறு அவர
    காப் புடைய கயம் படியினை
    அன்ன சீற்றத்து அனையை ஆகலின்
    விளங்கு பொன் எறிந்த நலங்கிளர் பலகையடு
    நிழல்படு நெடுவேல் ஏந்தி ஒன்னார்
    ஒண்படைக் கடுந்தார் முன்புதலைக் கொண்மார்
    நசைதர வந்தோர் நசைபிறக்கு ஒழிய
    வசைபட வாழ்ந்தோர் பலர்கொல் புரையில்
    நற் பனுவல் நால் வேதத்து
    அருஞ் சீர்த்திப் பெருங் கண்ணுறை
    நெய்ம் மலி ஆவுதி பொங்கப் பன்மாண்
    வீயாச் சிறப்பின் வேள்வி முற்றி
    யூபம் நட்ட வியன்களம் பலகொல்
    யாபல கொல்லோ பெரும வார் உற்று
    விசிபிணிக் கொண்ட மண்கனை முழவின்
    பாடினி பாடும் வஞ்சிக்கு
    நாடல் சான்ற மைந்தினோய் நினக்கே

    கபிலர்

  • வினை மாட்சிய விரை புரவியடு

    புறநானூறு

    வினை மாட்சிய விரை புரவியடு
    மழை யுருவின தோல் பரப்பி
    முனை முருங்கத் தலைச்சென்று அவர்
    விளை வயல் கவர்பு ஊட்டி
    மனை மரம் விறகு ஆகக்
    கடி துறைநீர்க் களிறு படீஇ
    எல்லுப்பட இட்ட சுடுதீ விளக்கம்
    செல்சுடர் ஞாயிற்றுச் செக்கரின் தோன்றப்
    புலம்கெட இறுக்கும் வரம்பில் தானைத்
    துணை வேண்டாச் செரு வென்றிப்
    புலவு வாள் புலர் சாந்தின்
    முருகன் சீற்றத்து உருகெழு குருசில்
    மயங்கு வள்ளை மலர் ஆம்பல்
    பனிப் பகன்றைக் சுனிப் பாகல்
    கரும்பு அல்லது காடு அறியாப்
    பெருந் தண்பணை பாழ் ஆக
    ஏமநன் னாடு ஒள்எரி ஊட்டினை
    நாம நல்லமர் செய்ய
    ஒராங்கு மலைந்தன பெரும நின் களிறே

    பாண்டரங் கண்ணனார்

  • தென் குமரி வட பெருங்கல்

    புறநானூறு

    தென் குமரி வட பெருங்கல்
    குண குட கடலா வெல்லை
    குன்று மலை காடு நாடு
    ஒன்று பட்டு வழி மொழியக்
    கொடிது கடிந்து கோல் திருத்திப்
    படுவது உண்டு பகல் ஆற்றி
    இனிது உருண்ட சுடர் நேமி
    முழுது ஆண்டோர் வழி காவல
    குலை இறைஞ்சிய கோள் தாழை
    அகல் வயல் மலை வேலி
    நிலவு மணல் வியன் கானல்
    தெண் கழிமிசைச் சுடர்ப் பூவின்
    தண் தொண்டியோர் அடு பொருந
    மாப் பயம்பின் பொறை போற்றாது
    நீடு குழி அகப் பட்ட
    பீடு உடைய எறுழ் முன்பின்
    கோடு முற்றிய கொல் களிறு
    நிலை கலங்கக் குழி கொன்று
    கிளை புகலத் தலைக்கூடி யாங்கு
    நீ பட்ட அரு முன்பின்
    பெருந் தளர்ச்சி பலர் உவப்பப்
    பிறிது சென்று மலர் தாயத்துப்
    பலர் நாப்பண் மீக் கூறலின்
    உண் டாகிய உயர் மண்ணும்
    சென்று பட்ட விழுக் கலனும்
    பெறல் கூடும் இவன்நெஞ்சு உறப்பெறின்எனவும்
    ஏந்து கொடி இறைப் புரிசை
    வீங்கு சிறை வியல் அருப்பம்
    இழந்து வைகுதும்.இனிநாம் இவன்
    உடன்று நோக்கினன் பெரிது எனவும்
    வேற்று அரசு பணி தொடங்குநின்
    ஆற்ற லொடு புகழ் ஏத்திக்
    காண்கு வந்திசின் பெரும ஈண்டிய
    மழையென மருளும் பல் தோல் மலையெனத்
    தேன்இறை கொள்ளும் இரும்பல் யானை
    உடலுநர் உட்க வீங்கிக் கடலென
    வான்நீர்க்கு ஊக்கும் தானை ஆனாது
    கடுஒடுங்கு எயிற்ற அரவுத்தலை பனிப்ப
    இடியென முழங்கு முரசின்
    வரையா ஈகைக் குடவர் கோவே

    குறுங்கோழியூர் கிழார்

  • முழங்கு முந்நீர் முழுவதும் வளைஇப்

    புறநானூறு

    முழங்கு முந்நீர் முழுவதும் வளைஇப்
    பரந்து பட்ட வியன் ஞாலம்
    தாளின் தந்து தம்புகழ் நிறீஇ
    ஒருதாம் ஆகிய உரவோர் உம்பல்
    ஒன்றுபத்து அடுக்கிய கோடிகடை இரீஇய
    பெருமைத்து ஆக நின் ஆயுள் தானே
    நீர்த் தாழ்ந்த குறுங் காஞ்சிப்
    பூக் கதூஉம் இன வாளை
    நுண் ஆரல் பரு வரால்
    குரூஉக் கெடிற்ற குண்டு அகழி
    வான் உட்கும் வடிநீண் மதில்
    மல்லல் மூதூர் வய வேந்தே
    செல்லும் உலகத்துச் செல்வம் வேண்டினும்
    ஞாலம் காவலர் தோள்வலி முருக்கி
    ஒருநீ ஆகல் வேண்டினும் சிறந்த
    நல்இசை நிறுத்தல் வேண்டினும் மற்றதன்
    தகுதி கேள் இனி மிகுதியாள
    நீர்இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்
    உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே
    உண்டி முதற்றே உணவின் பிண்டம்
    உணவெனப் படுவது நிலத்தோடு நீரே
    நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு
    உடம்பும் உயிரும் படைத்திசி னோரே
    வித்திவான் நோக்கும் புன்புலம் கண்ணகன்
    வைப்புற்று ஆயினும் நண்ணி ஆளும்
    இறைவன் தாட்குஉத வாதே அதனால்
    அடுபோர்ச் செழிய இகழாது வல்லே
    நிலன்நெளி மருங்கின் நீர்நிலை பெருகத்
    தட்டோர் அம்ம இவண்தட் டோரே
    தள்ளா தோர்இவண் தள்ளா தோரே

    குடபுலவியனார்

  • இமிழ்கடல் வளைஇய ஈண்டுஅகல் கிடக்கைத்

    புறநானூறு

    இமிழ்கடல் வளைஇய ஈண்டுஅகல் கிடக்கைத்
    தமிழ்தலை மயங்கிய தலையாலங் கானத்து
    மன்உயிர்ப் பன்மையும் கூற்றத்து ஒருமையும்
    நின்னொடு தூக்கிய வென்வேற் செழிய
    இரும்புலி வேட்டுவன் பொறிஅறிந்து மாட்டிய
    பெருங்கல் அடாரும் போன்ம் என விரும்பி
    முயங்கினேன் அல்லனோ யானே மயங்கிக்
    குன்றத்து இறுத்த குரீஇஇனம் போல
    அம்புசென்று இறுத்த அறும்புண் யானைத்
    தூம்புஉடைத் தடக்கை வாயடு துமிந்து
    நாஞ்சில் ஒப்ப நிலமிசைப் புரள
    எறிந்துகளம் படுத்த ஏந்துவாள் வலத்தர்
    எந்தையோடு கிடந்தோர் எம்புன் தலைப்புதல்வர்
    இன்ன விறலும் உளகொல் நமக்கு என
    மூதில் பெண்டிர் கசிந்து அழ நாணிக்
    கூற்றுக்கண் ஓடிய வெருவரு பறந்தலை
    எழுவர் நல்வலங் கடந்தோய் நின்
    கழூஉ விளங்கு ஆரம் கவைஇய மார்பே

    குடபுலவியனார்

  • வாள் வலந்தர மறுப் பட்டன

    புறநானூறு

    வாள்வலந்தர மறுப் பட்டன
    செவ் வானத்து வனப்புப் போன்றன
    தாள் களங்கொளக் கழல் பறைந்தன
    கொல் ஏற்றின் மருப்புப் போன்றன
    தோல் துவைத்து அம்பின் துனைதோன்றுவ
    நிலைக்கு ஒராஅ இலக்கம் போன்றன
    மாவே எறிபதத்தான் இடங் காட்டக்
    கறுழ் பொருத செவ் வாயான்
    எருத்து வவ்விய புலி போன்றன
    களிறே கதவு எறியாச் சிவந்து உராஅய்
    நுதி மழுங்கிய வெண் கோட்டான்
    உயிர் உண்ணும் கூற்றுப் போன்றன
    நீயே அலங்கு உளைப் பரீஇ இவுளிப்
    பொலந் தேர்மிசைப் பொலிவு தோன்றி
    மாக் கடல் நிவந் தெழுதரும்
    செஞ் ஞாயிற்றுக் கவினை மாதோ
    அனையை ஆகன் மாறே
    தாயில் தூவாக் குழவி போல
    ஓவாது கூஉம் நின் உடற்றியோர் நாடே

    பரணர்

  • இரு முந்நீர்க் குட்டமும்

    புறநானூறு

    இரு முந்நீர்க் குட்டமும்
    வியன் ஞாலத்து அகலமும்
    வளி வழங்கு திசையும்
    வறிது நிலைஇய காயமும் என்றாங்கு
    அவை அளந்து அறியினும் அளத்தற்கு அரியை
    அறிவும் ஈரமும் பெருங்க ணோட்டமும்
    சோறு படுக்கும் தீயோடு
    செஞ் ஞாயிற்றுத் தெறல் அல்லது
    பிறிது தெறல் அறியார் நின் நிழல்வாழ் வோரே
    திருவில் அல்லது கொலைவில் அறியார்
    நாஞ்சில் அல்லது படையும் அறியார்
    திறனறி வயவரொடு தெவ்வர் தேய அப்
    பிறர்மண் உண்ணும் செம்மல் நின் நாட்டு
    வயவுறு மகளிர் வேட்டு உணின் அல்லது
    பகைவர் உண்ணா அருமண் ணினையே
    அம்பு துஞ்சும்கடி அரணால்
    அறம் துஞ்சும் செங்கோலையே
    புதுப்புள் வரினும் பழம்புள் போகினும்
    விதுப்புற அறியா ஏமக் காப்பினை
    அனையை ஆகல் மாறே
    மன்னுயிர் எல்லாம் நின்அஞ் சும்மே

    குறுங்கோழியூர்கிழார்

  • எருமை அன்ன கருங்கல் இடை தோறு

    புறநானூறு

    எருமை அன்ன கருங்கல் இடை தோறு
    ஆனிற் பரக்கும் யானைய முன்பின்
    கானக நாடனைநீயோ பெரும
    நீயோர் ஆகலின் நின் ஒன்று மொழிவல்
    அருளும் அன்பும் நீக்கி நீங்கா
    நிரயங் கொள்பவரொடு ஒன்றாது காவல்
    குழவி கொள் பவரின் ஓம்புமதி
    அளிதோ தானே அது பெறல்அருங் குரைத்தே

    நரிவெரூஉத் தலையார்

  • புலவரை இறந்த புகழ்சால் தோன்றல்

    புறநானூறு

    புலவரை இறந்த புகழ்சால் தோன்றல்
    நிலவரை இறந்த குண்டுகண் அகழி
    வான்தோய் வன்ன புரிசை விசும்பின்
    மீன்பூத் தன்ன உருவ ஞாயில்
    கதிர்நுழை கல்லா மரம்பயில் கடிமிளை
    அருங் குறும்பு உடுத்த கானப்பேர் எயில்
    கருங்கைக் கொல்லன் செந்தீ மாட்டிய
    இரும்புஉண் நீரினும் மீட்டற்கு அரிதுஎன
    வேங்கை மார்பின் இரங்க வைகலும்
    ஆடுகொளக் குழைந்த தும்பைப் புலவர்
    பாடுதுறை முற்றிய கொற்ற வேந்தே
    இகழுநர் இசையடு மாயப்
    புகழொடு விளங்கிப் பூக்க நின் வேலே

    ஐயூர் மூலங்கிழார்

  • கடும்பின் அடுகலம் நிறையாக நெடுங் கொடிப்

    புறநானூறு

    கடும்பின் அடுகலம் நிறையாக நெடுங் கொடிப்
    பூவா வஞ்சியும் தருகுவன் ஒன்றோ
    வண்ணம் நீவிய வணங்குஇறைப் பணைத்தோள்
    ஒண்ணுதல் விறலியர் பூவிலை பெறுக என
    மாட மதுரையும் தருகுவன் எல்லாம்
    பாடுகம் வம்மினோ பரிசில் மாக்கள்
    தொன்னிலக் கிழமை சுட்டின் நன்மதி
    வேட்கோச் சிறாஅர் தேர்க்கால் வைத்த
    பசுமண் குரூஉத்திரள் போல அவன்
    கொண்ட குடுமித்தும் இத் தண்பணை நாடே

    கோவூர்கிழார்