Tag: எட்டுத்தொகை

  • உடும்பு உரித்து அன்ன என்பு எழு மருங்கின்

    புறநானூறு

    உடும்பு உரித்து அன்ன என்பு எழு மருங்கின்
    கடும்பின் கடும்பசி களையுநர்க் காணாது
    சில்செவித்து ஆகிய கேள்வி நொந்து நொந்து
    ஈங்குஎவன் செய்தியோ பாண பூண்சுமந்து
    அம் பகட்டு எழிலிய செம் பொறி ஆகத்து
    மென்மையின் மகளிர்க்கு வணங்கிவன்மையின்
    ஆடவர்ப் பிணிக்கும் பீடுகெழு நெடுந்தகை
    புனிறு தீர் குழவிக்கு இலிற்றுமுலை போலச்
    சுரந்த காவிரி மரங்கொல் மலிநீர்
    மன்பதை புரக்கும் நன்னாட்டுப் பொருநன்
    உட்பகை ஒருதிறம் பட்டெனப் புட்பகைக்கு
    ஏவான் ஆகலின் சாவோம் யாம் என
    நீங்கா மறவர் வீங்குதோள் புடைப்பத்
    தணிபறை அறையும் அணிகொள் தேர்வழிக்
    கடுங்கண் பருகுநர் நடுங்குகை உகத்த
    நறுஞ்சேறு ஆடிய வறுந்தலை யானை
    நெடுனகர் வரைப்பின் படுமுழா ஓர்க்கும்
    உறந்தை யோனே குருசில்
    பிறன்கடை மறப்ப நல்குவன் செலினே

    கோவூர் கிழார்

  • அன்னச் சேவல் அன்னச் சேவல்

    புறநானூறு

    அன்னச் சேவல் அன்னச் சேவல்
    ஆடுகொள் வென்றி அடுபோர் அண்ணல்
    நாடு தலை அளிக்கும் ஒண்முகம் போலக்
    கோடுகூடு மதியம் முகிழ்நிலா விளங்கும்
    மையல் மாலை யாம் கையறுபு இனையக்
    குமரிஅம் பெருந்துறை அயிரை மாந்தி
    வடமலைப் பெயர்குவை ஆயின் இடையது
    சோழ நன்னாட்டுப் படினே கோழி
    உயர் நிலை மாடத்துக் குறும்பறை அசைஇ
    வாயில் விடாது கோயில் புக்கு எம்
    பெருங் கோக் கிள்ளி கேட்க இரும்பிசிர்
    ஆந்தை அடியுறை எனினே மாண்ட நின்
    இன்புறு பேடை அணியத் தன்
    அன்புறு நன்கலம் நல்குவன் நினக்கே

    பிசிராந்தையார்

  • நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி

    புறநானூறு

    நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி
    வளிதொழில் ஆண்ட உரவோன் மருக
    களி இயல் யானைக் கரிகால் வளவ
    சென்று அமர்க் கடந்த நின் ஆற்றல் தோன்ற
    வென்றோய் நின்னினும் நல்லன் அன்றே
    கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை
    மிகப் புகழ் உலகம் எய்திப்
    புறப்புண் நாணி வடக் கிருந்தோனே

    வெண்ணிற் குயத்தியார்

  • மண்முழா மறப்பப் பண் யாழ் மறப்ப

    புறநானூறு

    மண்முழா மறப்பப் பண் யாழ் மறப்ப
    இருங்கண் குழிசி கவிழ்ந்து இழுது பறப்பச்
    சுரும்பூஆர் தேறல் சுற்றம் மறப்ப
    உழவர் ஓதை மறப்ப விழவும்
    அகலுள் ஆங்கண் சீறூர் மறப்ப
    உவவுத் தலைவந்த பெருநாள் அமையத்து
    இருசுடர் தம்முள் நோக்கி ஒரு சுடர்
    புன்கண் மாலை மலைமறைந் தாங்குத்
    தன்போல் வேந்தன் முன்பு குறித்து எறிந்த
    புறப்புண் நாணி மறத்தகை மன்னன்
    வாள் வடக்கு இருந்தனன் ஈங்கு
    நாள்போல் கழியல ஞாயிற்றுப் பகலே

    கழாஅத் தலையார்

  • அருமிளை இருக்கை யதுவே மனைவியும்

    புறநானூறு

    அருமிளை இருக்கை யதுவே-மனைவியும்
    வேட்டச் சிறா அர் சேட்புலம் படராது
    படைமடைக் கொண்ட குறுந்தாள் உடும்பின்
    விழுக்குநிணம் பெய்த தயிர்க்கண் மிதவை
    யாணர் நல்லவை பாணரொடு ஓராங்கு
    வருவிருந்து அயரும் விருப்பினள் கிழவனும்
    அருஞ்சமம் ததையத் தாக்கிப் பெருஞ்சமத்து
    அண்ணல் யானை அணிந்த
    பொன்செய் ஓடைப் பெரும்பரி சிலனே
    நல்யாழ்ஆகுளி பதலையடு சுருக்கிச்
    செல்லா மோதில் சில்வளை விறலி
    களிற்றுக் கணம் பொருத கண்ணகன் பறந்தலை
    விசும்புஆடு எருவை புசுந்தடி தடுப்பப்
    பகைப்புலம் மரீஇய தகைப்பெருஞ் சிறப்பின்
    குடுமிக் கோமாற் கண்டு
    நெடுநீர்ப் புற்கை நீத்தனம் வரற்கே

    நெடும்பல்லியத்தனார்

  • மூதூர் வாயில் பனிக் கயம் மண்ணி

    புறநானூறு

    மூதூர் வாயில் பனிக் கயம் மண்ணி
    மன்ற வேம்பின் ஒண்குழை மிலைந்து
    தெண்கிணை முன்னர்க் களிற்றின் இயலி
    வெம்போர்ச் செழியனும் வந்தனன் எதிர்ந்த
    வம்ப மள்ளரோ பலரே
    எஞ்சுவர் கொல்லோ பகல்தவச் சிறிதே

    இடைக்குன்றூர் கிழார்

  • எனைப்பல் யானையும் அம்பொடு துளங்கி

    புறநானூறு

    எனைப்பல் யானையும் அம்பொடு துளங்கி
    விளைக்கும் வினையின்றிப் படைஒழிந் தனவே
    விறற் புகழ் மாண்ட புரவி எல்லாம்
    மறத் தகை மைந்தரொடு ஆண்டுப்பட் டனவே
    தேர்தர வந்த சான்றோர் எல்லாம்
    தோல் கண் மறைப்ப ஒருங்கு மாய்ந்தனரே
    விசித்து வினை மாண்ட மயிர்க்கண் முரசம்
    பொறுக்குநர் இன்மையின் இருந்துவிளிந் தனவே
    சாந்தமை மார்பின் நெடுவேல் பாய்ந்தென
    வேந்தரும் பொருது களத்து ஒழிந்தனர் இனியே
    என்னா வதுகொல் தானே கழனி
    ஆம்பல் வள்ளித் தொடிக்கை மகளிர்
    பாசவல் முக்கித் தண்புனல் பாயும்
    யாணர் அறாஅ வைப்பின்
    காமர் கிடக்கை அவர் அகன்றலை நாடே

    பரணர்

  • வணங்கு தொடைப் பொலிந்த வலிகெழுநோன்தாள்

    புறநானூறு

    வணங்கு தொடைப் பொலிந்த வலிகெழுநோன்தாள்
    அணங்குஅருங் கடுந்திறல் என்ஐ முணங்கு நிமிர்ந்து
    அளைச்செறி உழுவை இரைக்குவந் தன்ன
    மலைப்பரும் அகலம் மதியார் சிலைத்தெழுந்து
    விழுமியம் பெரியம் யாமே நம்மிற்
    பொருநனும் இளையன் கொண்டியும் பெரிது என
    எள்ளி வந்த வம்ப மள்ளர்
    புல்லென் கண்ணர் புறத்திற் பெயர
    ஈண்டுஅவர் அடுதலும் ஒல்லான் ஆண்டுஅவர்
    மாண்இழை மகளிர் நாணினர் கழியத்
    தந்தை தம்மூர் ஆங்கண்
    தெண்கிணை கறங்கச்சென்று ஆண்டு அட்டனனே

    இடைக்குன்றூர் கிழார்

  • வருதார் தாங்கி அமர்மிகல் யாவது

    புறநானூறு

    வருதார் தாங்கி அமர்மிகல் யாவது
    பொருது ஆண்டொழிந்த மைந்தர் புண்தொட்டுக்
    குருதிச் செங்கைக் கூந்தல் தீட்டி
    நிறம்கிளர் உருவின் பேஎய்ப் பெண்டிர்
    எடுத்துஎறி அனந்தற் பறைச்சீர் தூங்கப்
    பருந்து அருந்துற்ற தானையடு செருமுனிந்து
    அறத்தின் மண்டிய மறப்போர் வேந்தர்
    தாம்மாய்ந் தனரே குடைதுளங் கினவே
    உரைசால் சிறப்பின் முரசு ஒழிந்தனவே
    பன்னூறு அடுக்கிய வேறுபடு பைஞ்ஞிலம்
    இடம்கெட ஈண்டிய வியன்கண் பாசறைக்
    களங்கொளற்கு உரியோர் இன்றித் தெறுவர
    உடன்வீழ்ந் தன்றால் அமரே பெண்டிரும்
    பாசடகு மிசையார் பனிநீர் மூழ்கார்
    மார்பகம் பொருந்தி ஆங்கமைந் தன்றே
    வாடாப் பூவின் இமையா நாட்டத்து
    நாற்ற உணவினோரும் ஆற்ற
    அரும்பெறல் உலகம் நிறைய
    விருந்துபெற் றனரால் பொலிக நும் புகழே

    கழாத் தலையார்

  • கிண்கிணி களைந்த கால் ஒண் கழல்தொட்டுக்

    புறநானூறு

    கிண்கிணி களைந்த கால் ஒண் கழல்தொட்டுக்
    குடுமி களைந்து நுதல்வேம்பின் ஒண்தளிர்
    நெடுங்கொடி உழிஞைப் பவரொடு மிலைந்து
    குறுந்தொடி கழித்தகைச் சாபம் பற்றி
    நெடுந்தேர்க் கொடிஞ்சி பொலிய நின்றோன்
    யார்கொல் வாழ்க அவன் கண்ணி தார்பூண்டு
    தாலி களைந்தன்றும் இலனே பால்விட்டு
    அயினியும் இன்று அயின்றனனே வயின் வயின்
    உடன்றுமேல் வந்த வம்ப மள்ளரை
    வியந்தன்றும் இழிந்தன்றும் இலனே அவரை
    அழுந்தப்பற்றி அகல்விசும்பு ஆர்ப்புஎழக்
    கவிழ்ந்து நிலம் சேர அட்டதை
    மகிழ்ந்தன்றும் மலிந்தன்றும் அதனினும் இலனே

    இடைக்குன்றூர் கிழார்