புறநானூறு
நீயே, தண்புனற் காவிரிக் கிழவனை யிவனே
முழுமுத றொலைந்த கோளி யாலத்துக்
கொழுநிழ னெடுஞ்சினை வீழ்பொறுத் தாங்குத்
தொல்லோர் மாய்ந்தெனத் துளங்கல் செல்லாது
நல்லிசை முதுகுடி நடுக்கறத் தழீஇ
இளைய தாயினுங் கிளையரா வெறியும்
அருநரை யுருமிற் பொருநரைப் பொறாஅச்
செருமாண் பஞ்சவ ரேறே நீயே
அறந்துஞ் சுறந்தைப் பொருநனை யிவனே
நெல்லு நீரு மெல்லார்க்கு மெளியவென
வரைய சாந்தமுந் திரைய முத்தமும்
இமிழ்குரன் முரச மூன்றுட னாளும்
தமிழ்கெழு கூடற் றண்கோல் வேந்தே
பானிற வுருவிற் பனைக்கொடி யோனும்
நீனிற வுருவி னேமி யோனுமென்
றிருபெருந் தெய்வமு முடனின் றாஅங்
குருகெழு தோற்றமொ டுட்குவர விளங்கி
இன்னீ ராகலி னினியவு முளவோ
இன்னுங் கேண்மினும் மிசைவா ழியவே
ஒருவீ ரொருவீர்க் காற்றுதி ரிருவீரும்
உடனிலை திரியீ ராயி னிமிழ்திரைப்
பௌவ முடுத்தவிப் பயங்கெழு மாநிலம்
கையகப் படுவது பொய்யா காதே
அதனால், நல்ல போலவு நயவ போலவும்
தொல்லோர் சென்ற நெறிய போலவும்
காத னெஞ்சினும் மிடைபுகற் கலமரும்
ஏதின் மாக்கள் பொதுமொழி கொள்ளா
தின்றே போல்கநும் புணர்ச்சி வென்றுவென்
றடுகளத் துயர்கநும் வேலே கொடுவரிக்
கோண்மாக் குயின்ற சேண்விளங்கு தொடுபொறி
நெடுநீர்க் கெண்டையொடு பொறித்த
குடுமிய வாகபிறர் குன்றுகெழு நாடே
காரிக்கண்ணனார்
Leave a Reply Cancel reply