புறநானூறு
கான் உறை வாழ்க்கைக் கதநாய் வேட்டுவன்
மான்தசை சொரிந்த வட்டியும் ஆய்மகள்
தயிர்கொடு வந்த தசும்பும் நிறைய
ஏரின் வாழ்நர் பேரில் அரிவையர்
குளக்கீழ் விளைந்த களக்கொள் வெண்ணெல்
முகந்தனர் கொடுப்ப உகந்தனர் பெயரும்
தென்னம் பொருப்பன் புன்னாட்டுள்ளும்
ஏழெயில் கதவம் எறிந்து கைக்கொண்டு நின்
பேழ்வாய் உழுவை பொறிக்கும் ஆற்றலை
பாடுநர் வஞ்சி பாடப் படையோர்
தாதுஎரு மறுகின் பாசறை பொலியப்
புலராப் பச்சிலை இடையிடுபு தொடுத்த
மலரா மாலைப் பந்துகண் டன்ன
ஊன்சோற் றமலை பான்கடும்பு அருத்தும்
செம்மற்று அம்மநின் வெம்முனை இருக்கை
வல்லோன் தைஇய வரிவனப்பு உற்ற
அல்லிப் பாவை ஆடுவனப்பு ஏய்ப்பக்
காம இருவர் அல்லது யாமத்துத்
தனிமகன் வழங்காப் பனிமலர்க் காவின்
ஒதுக்குஇன் திணிமணல் புதுப்பூம் பள்ளி
வாயின் மாடந்தொறும் மைவிடை வீழ்ப்ப
நீஆங்குக் கொண்ட விழவினும் பலவே
கோவூர்கிழார்
Leave a Reply Cancel reply