Author: Pulan

  • வாள் வலந்தர மறுப் பட்டன

    புறநானூறு

    வாள்வலந்தர மறுப் பட்டன
    செவ் வானத்து வனப்புப் போன்றன
    தாள் களங்கொளக் கழல் பறைந்தன
    கொல் ஏற்றின் மருப்புப் போன்றன
    தோல் துவைத்து அம்பின் துனைதோன்றுவ
    நிலைக்கு ஒராஅ இலக்கம் போன்றன
    மாவே எறிபதத்தான் இடங் காட்டக்
    கறுழ் பொருத செவ் வாயான்
    எருத்து வவ்விய புலி போன்றன
    களிறே கதவு எறியாச் சிவந்து உராஅய்
    நுதி மழுங்கிய வெண் கோட்டான்
    உயிர் உண்ணும் கூற்றுப் போன்றன
    நீயே அலங்கு உளைப் பரீஇ இவுளிப்
    பொலந் தேர்மிசைப் பொலிவு தோன்றி
    மாக் கடல் நிவந் தெழுதரும்
    செஞ் ஞாயிற்றுக் கவினை மாதோ
    அனையை ஆகன் மாறே
    தாயில் தூவாக் குழவி போல
    ஓவாது கூஉம் நின் உடற்றியோர் நாடே

    பரணர்

  • எருமை அன்ன கருங்கல் இடை தோறு

    புறநானூறு

    எருமை அன்ன கருங்கல் இடை தோறு
    ஆனிற் பரக்கும் யானைய முன்பின்
    கானக நாடனைநீயோ பெரும
    நீயோர் ஆகலின் நின் ஒன்று மொழிவல்
    அருளும் அன்பும் நீக்கி நீங்கா
    நிரயங் கொள்பவரொடு ஒன்றாது காவல்
    குழவி கொள் பவரின் ஓம்புமதி
    அளிதோ தானே அது பெறல்அருங் குரைத்தே

    நரிவெரூஉத் தலையார்

  • வாடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்

    புறநானூறு

    வாடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்
    தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும்
    குணாஅது கரைபொரு தொடுகடல் குணக்கும்
    குடாஅது தொன்றுமுதிர் பொளவத்தின் குடக்கும்
    கீழது முப்புணர் அடுக்கிய முறைமுதற் கட்டின்
    நீர்நிலை நிவப்பின் கீழும் மேலது
    ஆனிலை உலகத் தானும் ஆனாது
    உருவும் புகழும் ஆகி விரிசீர்த்
    தெரிகோல் ஞமன்ன் போல ஒரு திறம்
    பற்றல் இலியரோ நின் திறம் சிறக்க
    செய்வினைக்கு எதிர்ந்த தெவ்வர் தேஎத்துக்
    கடற்படை குளிப்ப மண்டி அடர்ப் புகர்ச்
    சிறுகண் யானை செவ்விதின் ஏவிப்
    பாசவற் படப்பை ஆர்எயில் பலதந்து
    அவ்வெயில் கொண்ட செய்வுறு நன்கலம்
    பரிசின் மாக்கட்கு வரிசையின் நல்கிப்
    பணியியர் அத்தை நின் குடையே முனிவர்
    முக்கண் செல்வர் நகர்வலஞ் செயற்கே
    இறைஞ்சுக பெரும நின் சென்னி சிறந்த
    நான்மறை முனிவர் ஏந்துகை எதிரே
    வாடுக இறைவ நின் கண்ணி ஒன்னார்
    நாடுசுடு கமழ்புகை எறித்த லானே
    செலிஇயர் அத்தை நின் வெகுளி வால்இழை
    மங்கையர் துனித்த வாள்முகத்து எதிரே
    ஆங்க வென்றி எல்லாம் வென்றுஅகத்துஅடக்கிய
    தண்டா ஈகைத் தகைமாண் குடுமி
    தண்கதிர் மதியம் போலவும் தெறுசுடர்
    ஒண்கதிர் ஞாயிறு போலவும்
    மன்னிய பெரும நீ நிலமிசை யானே

    காரிகிழார்

  • களிறு கடைஇய தாள்

    புறநானூறு

    களிறு கடைஇய தாள்
    கழல் உரீஇய திருந்துஅடிக்
    கணை பொருது கவிவண் கையால்
    கண் ஒளிர்வரூஉம் கவின் சாபத்து
    மா மறுத்த மலர் மார்பின்
    தோல் பெயரிய எறுழ் முன்பின்
    எல்லையும் இரவும் எண்ணாய் பகைவர்
    ஊர்சுடு விளக்கத்து அழுவிளிக் கம்பலைக்
    கொள்ளை மேவலை ஆகலின் நல்ல
    இல்ல ஆகுபவால் இயல்தேர் வளவ
    தண்புனல் பரந்த பூசல் மண் மறுத்து
    மீனின் செறுக்கும் யாணர்ப்
    பயன்திகழ் வைப்பின் பிறர் அகன்றலை நாடே

    கருங்குழல் ஆதனார்

  • வையம் காவலர் வழிமொழிந்து ஒழுகப்

    புறநானூறு

    வையம் காவலர் வழிமொழிந்து ஒழுகப்
    போகம் வேண்டிப் பொதுச்சொல் பொறாஅது
    இடம் சிறிது என்னும் ஊக்கம் துரப்ப
    ஒடுங்கா உள்ளத்து ஓம்பா ஈகைக்
    கடந்து அடு தானைச் சேரலாதனை
    யாங்கனம் ஒத்தியோ வீங்குசெலல் மண்டிலம்
    பொழுதுஎன வரைதி புறக்கொடுத்து இறத்தி
    மாறி வருதி மலைமறைந்து ஒளித்தி
    அகல்இரு விசும்பி னானும்
    பகல்விளங் குதியால் பல்கதிர் விரித்தே

    கபிலர்

  • ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும்

    புறநானூறு

    ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும்
    பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித்
    தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்
    பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்
    எம்அம்பு கடிவிடுதும் நுன்அரண் சேர்மின் என
    அறத்துஆறு நுவலும் பூட்கை மறத்தின்
    கொல்களிற்று மீமிசைக் கொடிவிசும்பு நிழற்றும்
    எங்கோ வாழிய குடுமி தங் கோச்
    செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க்கு ஈத்த
    முந்நீர் விழவின் நெடியோன்
    நன்னீர்ப் பறுளி மணலினும் பலவே

    நெட்டிமையார்

  • வழிபடு வோரை வல்லறி தீயே

    புறநானூறு

    வழிபடு வோரை வல்லறி தீயே
    பிறர்பழி கூறுவோர் மொழிதே றலையே
    நீமெய் கண்ட தீமை காணின்
    ஒப்ப நாடி அத்தக ஒறுத்தி
    வந்து அடி பொருந்தி முந்தை நிற்பின்
    தண்டமும் தணிதி நீ பண்டையிற் பெரிதே
    அமிழ்துஅட்டு ஆனாக் கமழ்குய் அடிசில்
    வருநர்க்கு வரையா வசையில் வாழ்க்கை
    மகளிர் மலைத்தல் அல்லது மள்ளர்
    மலைத்தல் போகிய சிலைத்தார் மார்ப
    செய்து இரங்காவினைச் சேண்விளங் கும்புகழ்
    நெய்தருங் கானல் நெடியோய்
    எய்த வந்தனம்யாம் ஏத்துகம் பலவே

    ஊன் பொதி பசுங் குடையார்

  • அரி மயிர்த் திரள் முன்கை

    புறநானூறு

    அரி மயிர்த் திரள் முன்கை
    வால் இழை மட மங்கையர்
    வரி மணற் புனை பாவைக்குக்
    குலவுச் சினைப் பூக் கொய்து
    தண் பொருநைப் புனல் பாயும்
    விண் பொருபுகழ் விறல்வஞ்சிப்
    பாடல் சான்ற விறல்வேந் தனும்மே
    வெப் புடைய அரண் கடந்து
    துப்புறுவர் புறம்பெற் றிசினே
    புறம் பொற்ற வய வேந்தன்
    மறம் பாடிய பாடினி யும்மே
    ஏர் உடைய விழுக் கழஞ்சின்
    சீர் உடைய இழை பெற்றிசினே
    இழை பெற்ற பாடி னிக்குக்
    குரல் புணர்சீர்க் கொளைவல்பாண் மகனுமே
    என ஆங்கு ஒள்அழல் புரிந்த தாமரை
    வெள்ளி நாரால் பூப்பெற் றிசினே

    பேய்மகள் இளவெயினியார்

  • பாணர் தாமரை மலையவும் புலவர்

    புறநானூறு

    பாணர் தாமரை மலையவும் புலவர்
    பூநுதல் யானையோடு புனைதேர் பண்ணவும்
    அறனோ மற்றஇது விறல்மாண் குடுமி
    இன்னா ஆகப் பிறர் மண் கொண்டு
    இனிய செய்தி நின் ஆர்வலர் முகத்தே

    நெட்டிமையார்

  • இவன் யார் என்குவை ஆயின் இவனே

    புறநானூறு

    இவன் யார் என்குவை ஆயின் இவனே
    புலிநிறக் கவசம் பூம்பொறி சிதைய
    எய்கணை கிழித்த பகட்டுஎழில் மார்பின்
    மறலி அன்ன களிற்றுமிசை யோனே
    களிறே முந்நீர் வழங்கு நாவாய் போலவும்
    பன்மீன் நாப்பண் திங்கள் போலவும்
    சுறவு இனத்து அன்ன வாளோர் மொய்ப்ப
    மரீஇயோர் அறியாது மைந்துபட் டன்றே
    நோயிலன் ஆகிப் பெயர்கதில் அம்ம
    பழன மஞ்ஞை உகுத்த பீலி
    கழனி உழவர் சூட்டொடு தொகுக்கும்
    கொழுமீன் விளைந்த கள்ளின்
    விழுநீர் வேலி நாடுகிழ வோனே

    உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்