முனைத் தெவ்வர் முரண் அவியப்

புறநானூறு

முனைத் தெவ்வர் முரண் அவியப்
பொர்க் குறுகிய நுதி மருப்பின் நின்
இனக் களிறு செலக் கண்டவர்
மதிற் கதவம் எழுச் செல்லவும்
பிணன் அழுங்கக் களன் உழக்கிச்
செலவு அசைஇய மறுக் குளம்பின் நின்
இன நன்மாச் செயக் கண்டவர்
கவை முள்ளின் புழை யடைப்பவும்
மார்புறச் சேர்ந்து ஒல்காத்
தோல் செறிப்பில் நின்வேல் கண்டவர்
தோள் கழியடு பிடி செறிப்பவும்
வாள் வாய்த்த வடுப் பரந்த நின்
மற மைந்தர் மைந்து கண்டவர்
புண்படு குருதி அம்பு ஒடுக்கவும்
நீயே ஐயவி புகைப்பவும் தாங்காது ஒய்யென
உறுமுறை மரபின் புறம் நின்று உய்க்கும்
சுற்றத்து அனையை ஆகலின்போற்றார்
இரங்க விளிவது கொல்லோ வரம்பு அணைந்து
இறங்குகதிர் அலம்வரு கழனிப்
பெரும்புனல் படப்பை அவர் அகன்றலை நாடே

ஔவையார்

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *