உவவுமதி உருவின் ஓங்கல் வெண்குடை

புறநானூறு

உவவுமதி உருவின் ஓங்கல் வெண்குடை
நிலவுக்கடல் வரைப்பின் மண்ணகம் நிழற்ற
ஏம முரசம் இழுமென முழங்க
நேமி யுய்த்த நேஎ நெஞ்சின்
தவிரா ஈகைக் கவுரியர் மருக
செயிர்தீர் கற்பின் சேயிழை கணவ
பொன் னோடைப் புகர் அணிநுதல்
துன்னருந் திறல் கமழ்கடா அத்து
எயிரு படையாக எயிற்கதவு இடாஅக்
கயிறுபிணிக் கொண்ட கவிழ்மணி மருங்கில்
பெருங்கை யானை இரும்பிடர்த் தலையிருந்து
மருந்தில் கூற்றத்து அருந்தொழில் சாயாக்
கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி
நிலம் பெயரினும் நின்சொற் பெயரல்
பொலங் கழற்காற்புலர் சாந்தின்
விலங் ககன்ற வியன் மார்ப
ஊர் இல்ல உயவு அரிய
நீர் இல்ல நீள் இடைய
பார்வல் இருக்கைக் கவிகண் நோக்கிற்
செந்தொடை பிழையா வன்கண் ஆடவர்
அம்புவிட வீழ்ந்தோர் வம்பப் பதுக்கைத்
திருந்துசிறை வளைவாய்ப் பருந்திருந்து உயவும்
உன்ன மரத்த துன்னருங் கவலை
நின்நசை வேட்கையின் இரவலர் வருவர் அது
முன்னம் முகத்தின் உணர்ந்து அவர்
இன்மை தீர்த்தல் வன்மை யானே

இரும்பிடர்த் தலையார்

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *