புறநானூறு
நளிஇரு முந்நீர் ஏணி யாக
வளிஇடை வழங்கா வானம் சூடிய
மண்திணி கிடக்கைத் தண்தமிழ்க் கிழவர்
முரசு முழங்கு தானை மூவர் உள்ளும்
அரசுஎனப் படுவது நினதே பெரும
அலங்குகதிர்க் கனலி நால்வயின் தோன்றினும்
இலங்குகதிர் வெள்ளி தென்புலம் படரினும்
அந்தண் காவிரி வந்து கவர்பு ஊட்டத்
தோடு கொள் வேலின் தோற்றம் போல
ஆடுகண் கரும்பின் வெண்பூ நுடங்கும்
நாடுஎனப் படுவது நினதே அத்தை ஆங்க
நாடுகெழு செல்வத்துப் பீடுகெழு வேந்தே
நினவ கூறுவல் எனவ கேண்மதி
அறம்புரிந் தன்ன செங்கோல் நாட்டத்து
முறைவெண்டு பொழுதின் பதன் எளியோர் ஈண்டு
உறைவேண்டு பொழுதில் பெயல்பெற் றோறே
ஞாயிறு சுமந்த கோடுதிரள் கொண்டுமூ
மாக விசும்பின் நடுவுநின் றாங்குக்
கண்பொர விளங்கும்நின் விண்பொரு வியன்குடை
வெயில்மறைக் கொண்டன்றோ அன்றே வருந்திய
குடிமறைப் பதுவே கூர்வேல் வளவ
வெளிற்றுப்பனந் துணியின் வீற்றுவீற்றுக் கிடப்பக்
களிற்றுக் கணம் பொருத கண்ணகன் பறந்தலை
வருபடை தாங்கிப் பெயர்புறத் தார்த்துப்
பொருபடை தரூஉங் கொற்றமும் உழுபடை
ஊன்றுசால் மருங்கின் ஈன்றதன் பயனே
மாரி பொய்ப்பினும் வாரி குன்றினும்
இயற்கை அல்லன செயற்கையில் தோன்றினும்
காவலர்ப் பழிக்கும் இக் கண்ணகன் ஞாலம்
அதுநற்கு அறிந்தனை யாயின் நீயும்
நொதும லாளர் பொதுமொழி கொள்ளாது
பகடுபுறந் தருநர் பாரம் ஓம்பிக்
குடிபுறம் தருகுவை யாயின் நின்
அடிபுறம் தருகுவர் அடங்கா தேரே
வெள்ளைக்குடி நாகனார்
Leave a Reply Cancel reply