புறநானூறு
மண் திணிந்த நிலனும்
நிலம் ஏந்திய விசும்பும்
விசும்பு தைவரு வளியும்
வளித் தலைஇய தீயும்
தீ முரணிய நீரும் என்றாங்கு
ஐம்பெரும் பூதத்து இயற்கை போலப்
போற்றார்ப் பொறுத்தலும் சூழ்ச்சியது அகலமும்
வலியும் தெறலும் அணியும் உடையோய்
நின்கடற் பிறந்த ஞாயிறு பெயர்த்தும்நின்
வெண்தலைப் புணரிக் குடகடல் குளிக்கும்
யாணர் வைப்பின் நன்னாட்டுப் பொருந
வான வரம்பனை நீயோ பெரும
அலங்குளைப் புரவி ஐவரோடு சினைஇ
நிலந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை
ஈரைம்பதின் மரும்பொருது களத்து ஒழியப்
பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்
பாஅல் புளிப்பினும் பகல்இருளினும்
நாஅல் வேதநெறி திரியினும்
திரியாச் சுற்றமொடு முழுதுசேண் விளங்கி
நடுக்கின்றி நிலியரோ வத்தை அடுக்கத்துச்
சிறுதலை நவ்விப் பெருங்கண் மாப்பிணை
அந்தி அந்தணர் அருங்கடன் இறுக்கும்
முத்தீ விளக்கிற் றுஞ்சும்
பொற்கோட்டு இமயமும் பொதியமும் போன்றே
முரஞ்சியூர் முடிநாகராயர்
Leave a Reply Cancel reply