புறநானூறு
கையது கடன் நிறை யாழே மெய்யது
புரவலர் இன்மையின் பசியே அரையது
வேற்றிழை நுழைந்த வேர்நனை சிதாஅர்
ஓம்பி உடுத்த உயவற் பாண
பூட்கை இல்லோன் யாக்கை போலப்
பெரும்புல் என்ற இரும் பேர் ஒக்கலை
வையகம் முழுவதுடன் வளைப் பையென
என்னை வினவுதி ஆயின் மன்னர்
அடுகளிறு உயவும் கொடிகொள் பாசறைக்
குருதிப் பரப்பின் கோட்டுமா தொலைச்சிப்
புலாக் களம் செய்த கலாஅத் தானையன்
பிறங்கு நிலை மாடத்து உறந்தை யோனே
பொருநர்க்கு ஓங்கிய வேலன் ஒரு நிலைப்
பகைப் புலம் படர்தலும் உரியன் தகைத் தார்
ஒள்ளெரி புரையும் உருகெழு புசும்பூண்
கிள்ளி வளவற் படர்குவை ஆயின்
நெடுங் கடை நிற்றலும் இலையே கடும் பகல்
தேர்வீசு இருக்கை ஆர நோக்கி
நீ அவற் கண்ட பின்றைப் பூவின்
ஆடுவண்டு இமிராத் தாமரை
சூடாய் ஆதல் அதனினும் இலையே
ஆலந்தூர் கிழார்
Leave a Reply Cancel reply