புறநானூறு
நெல் அரியும் இருந் தொழுவர்
செஞ் ஞாயிற்று வெயில் முனையின்
தென் கடல்திரை மிசைப்பா யுந்து
திண் திமில் வன் பரதவர்
வெப் புடைய மட் டுண்டு
தண் குரவைச் சீர்தூங் குந்து
தூவற் கலித்த தேம்பாய் புன்னை
மெல்லிணர்க் கன்ணி மிலைந்த மைந்தர்
எல்வளை மகளிர்த் தலைக்கை தரூஉந்து
வண்டுபட மலர்ந்த தண்ணறுங் கானல்
முண்டகக் கோதை ஒண்டொடி மகளிர்
இரும் பனையின் குரும்பை நீரும்
பூங் கரும்பின் தீஞ் சாறும்
ஓங்கு மணற் குலவுத் தாழைத்
தீ நீரோடு உடன் விராஅய்
முந்நீர் உண்டு முந்நீர்ப் பாயும்
தாங்கா உறையுள் நல்லூர் கெழீஇய
ஒம்பா ஈகை மாவேள் எவ்வி
புனலம் புதவின் மிழலையடு_ கழனிக்
கயலார் நாரை போர்வில் சேக்கும்
பொன்னணி யானைத் தொன்முதிர் வேளிர்
குப்பை நெல்லின் முத்தூறு தந்த
கொற்ற நீள்குடைக் கொடித்தேர்ச் செழிய
நின்று நிலைஇயர் நின் நாண்மீன் நில்லாது
படாஅச் செலீஇயர் நின்பகைவர் மீனே
நின்னொடு தொன்றுமூத்த உயிரினும் உயிரொடு
நின்று மூத்த யாக்கை யன்ன நின்
ஆடுகுடி மூத்த விழுத்திணைச் சிறந்த
வாளின் வாழ்நர் தாள்வலம் வாழ்த்த
இரவன் மாக்கள் ஈகை நுவல
ஒண்டொடி மகளிர் பொலங்கலத்து ஏந்திய
தண்கமழ் தேறல் மடுப்ப மகிழ்சிறந்து
ஆங்குஇனிது ஒழுகுமதி பெரும ஆங்கது
வல்லுநர் வாழ்ந்தோர் என்ப தொல்லிசை
மலர்தலை உலகத்துத் தோன்றிப்
பலர்செலச் செல்லாது நின்று விளிந் தோரே
மாங்குடி கிழவர்
Leave a Reply Cancel reply