வள் உகிர வயல் ஆமை

புறநானூறு

வள் உகிர வயல் ஆமை
வெள் அகடு கண் டன்ன
வீங்கு விசிப் புதுப் போர்வைத்
தெண்கண் மாக்கிணை இயக்கி என்றும்
மாறு கொண்டோர் மதில் இடறி
நீறு ஆடிய நறுங் கவுள
பூம்பொறிப் பணை எருத்தின
வேறு வேறு பரந்து இயங்கி
வேந்துடை மிளை அயல் பரக்கும்
ஏந்து கோட்டு இரும்பிணர்த் தடக்கைத்
திருந்து தொழிற் பல பகடு
பகைப்புல மன்னர் பணிதிறை தந்து நின்
நசைப்புல வாணர் நல்குரவு அகற்றி
மிகப்பொலியர் தன் சேவடியத்தை என்று
யாஅன் இசைப்பின் நனிநன்று எனாப்
பலபிற வாழ்த்த இருந்தோர் தங்கோன்
மருவ இன்நகர் அகன் கடைத்தலைத்
திருந்துகழல் சேவடி குறுகல் வேண்டி
வென் றிரங்கும் விறன் முரசினோன்
என் சிறுமையின் இழித்து நோக்கான்
தன் பெருமையின் தகவு நோக்கிக்
குன்று உறழ்ந்த களி றென்கோ
கொய் யுளைய மா என்கோ
மன்று நிறையும் நிரை என்கோ
மனைக் களமரொடு களம் என்கோ
ஆங்கவை கனவுஎன மருள வல்லே நனவின்
நல்கி யோனே நகைசால் தோன்றல்
ஊழி வாழி பூழியர் பெருமகன்
பிணர் மருப்பு யானைச் செருமிகு நோன்தாள்
செல்வக் கடுங்கோ வாழி யாதன்
ஒன்னாத் தெவ்வர் உயர்குடை பணிந்து இவன்
விடுவர் மாதோ நெடிதோ நில்லாப்
புல்லிளை வஞ்சிப் புறமதில் அலைக்கும்
கல்லென் பொருநை மணலினும் ஆங்கண்
பல்லூர் சுற்றிய கழனி
எல்லாம் விளையும் நெல்லினும் பலவே

குண்டுகட் பாலியாதனார்

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *