உருகெழு ஞாயிற்று ஒண்கதிர் மிசைந்த

புறநானூறு

உருகெழு ஞாயிற்று ஒண்கதிர் மிசைந்த
முளிபுல் கானம் குழைப்பக் கல்லென
அதிர்குரல் ஏறோடு துளிசொரிந் தாங்குப்
பசிதினத் திரங்கிய கசிவுடை யாக்கை
அவிழ்புகுவு அறியா தாகலின் வாடிய
நெறிகொள் வரிக்குடர் குனிப்பத் தண்ணெனக்
குய்கொள் கொழுந்துவை நெய்யுடை அடிசில்
சிறுபொன் நன்கலஞ் சுற்ற இரீஇக்
கோடின் றாக பாடுநர் கடும்பு என
அரிதுபெறு பொலங்கலம் எளிதினின் வீசி
நட்டோர் நட்ட நல்லிசைக் குமணன்
மட்டார் மறுகின் முதிரத் தோனே
செல்குவை யாயின் நல்குவை பெரிது எனப்
பல்புகழ் நுவலுநர் கூற வல் விரைந்து
உள்ளம் துரப்ப வந்தனென் எள்ளுற்று
இல்லுளைக் குடுமிப் புதல்வன் பன்மாண்
பாலில் வறுமுலைசுவைத்தனன்பெறாஅன்
கூழும் சோறும் கடைஇ ஊழின்
உள்ளில் வருங்கலம் திறந்து அழக் கண்டு
மறப்புலி உரைத்தும் மதியங் காட்டியும்
நொந்தனள் ஆகி நுந்தையை உள்ளிப்
பொடிந்தநின் செவ்வி காட்டு எனப் பலவும்
வினவல் ஆனா ளாகி நனவின்
அல்லல் உழப்போள் மல்லல் சிறப்பச்
செல்லாச் செல்வம் மிகுந்தனை வல்லே
விடுதல் வேண்டுவல் அத்தை படுதிரை
நீர்சூழ் நிலவரை உயர நின்
சீர்கெழு விழுப்புகழ் ஏத்துகம் பலவே

பெருஞ்சித்திரனார்

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *