மதிநிலாக் கரப்ப வெள்ளி ஏர்தர

புறநானூறு

மதிநிலாக் கரப்ப வெள்ளி ஏர்தர
வகைமாண் நல்லில்
பொறிமலர் வாரணம் பொழுது அறிந்து இயம்ப
பொய்கைப் பூமுகை மலரப் பாணர்
கைவல் சீறியாழ் கடன் அறிந்து இயக்க
இரவுப் புறம் பெற்ற ஏம வைகறைப்
பரிசிலர் வரையா விரைசெய் பந்தர்
வரிசையின் இறுத்த வாய்மொழி வஞ்சன்
நகைவர் குறுகின் அல்லது பகைவர்க்குப்
புலியினம் மடிந்த கல்லளை போலத்
துன்னல் போகிய பெரும்பெயர் மூதூர்
மதியத்து அன்னஎன் அரிக்குரல் தடாரி
இரவுரை நெடுவார் அரிப்ப வட்டித்து
உள்ளி வருநர் கொள்கலம் நிறைப்போய்
தள்ளா நிலையை யாகியர் எமக்கு என
என்வரவு அறீஇச்
சிறி திற்குப் பெரிது உவந்து
விரும்பிய முகத்த னாகி என் அரைத்
துரும்புபடு சிதாஅர் நீக்கித் தன் அரைப்
புகைவிரிந் தன்ன பொங்குதுகில் உடீஇ
அழல்கான் றன்ன அரும்பெறல் மண்டை
நிழல்காண் தேறல் நிறைய வாக்கி
யான்உண அருளல் அன்றியும் தான்உண்
மண்டைய கண்ட மான்வறைக் கருனை
கொக்குஉகிர் நிமிரல் ஒக்கல் ஆர
வரையுறழ் மார்பின் வையகம் விளக்கும்
விரவுமணி ஒளிர்வரும் அரவுஉறழ் ஆரமொடு
புரையோன் மேனிப் பூந்துகில் கலிங்கம்
உரைசெல அருளி யோனே
பறைஇசை அருவிப் பாயல் கோவே

திருத்தாமனார்

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *