மண்டுஅமர் அட்ட மதனுடை நோன்தாள்

புறநானூறு

மண்டுஅமர் அட்ட மதனுடை நோன்தாள்
வெண்குடை விளக்கும் விறல்கெழு வேந்தே
பொங்குநீர் உடுத்தஇம் மலர்தலை உலகத்து
நின்தலை வந்த இருவரை நினைப்பின்
தொன்றுறை துப்பின்நின் பகைஞரும் அல்லர்
அமர்வெங் காட்சியடு மாறுஎதிர்பு எழுந்தவர்
நினையுங் காலை நீயும் மற்றவர்க்கு
அனையை அல்லை அடுமான் தோன்றல்
பரந்துபடு நல்லிசை எய்தி மற்று நீ
உயர்ந்தோர் உலகம் எய்திப் பின்னும்
ஒழித்த தாயும் அவர்க்குஉரித்து அன்றே
அதனால் அன்னது ஆதலும் அறிவோய் நன்றும்
இன்னும் கேண்மதி இசைவெய் யோயே
நின்ற துப்பொடு நின்குறித்து எழுந்த
எண்ணில் காட்சி இளையோர் தோற்பின்
நின்பெரும் செல்வம் யார்க்கும்எஞ் சுவையே
அமர்வெஞ் செல்வ நீ அவர்க்கு உலையின்
இகழுநர் உவப்பப் பழியெஞ் சுவையே
அதனால்ஒழிகதில் அத்தைநின் மறனேவல்விரைந்து
எழுமதி வாழ்க நின் உள்ளம் அழிந்தோர்க்கு
ஏமம் ஆகும்நின் தாள்நிழல் மயங்காது
செய்தல் வேண்டுமால் நன்றோ வானோர்
அரும்பெறல் உலகத்து ஆன்றவர்
விதும்புறு விருப்பொடு விருந்தெதிர் கொளற்கே

புல்லாற்றூர் எயிற்றியனார்

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *