இருப்புமுகம் செறிந்த ஏந்தொழில் மருப்பின்

புறநானூறு

இருப்புமுகம் செறிந்த ஏந்தொழில் மருப்பின்
கருங்கை யானை கொண்மூவாக
நீண்மொழி மறவர் எறிவனர் உயர்த்த
வாள்மின் நாக வயங்குடிப்பு அமைந்த
குருதிப் பலிய முரசுமுழக் காக
அரசராப் பனிக்கும் அணங்குறு பொழுதின்
வெவ் விசைப் புரவி வீசுவளி யாக
விசைப்புறு வல்வில் வீங்குநாண் உகைத்த
கணைத்துளி பொழிந்த கண்ணகன் கிடக்கை
ஈரச் செறுவயின் தேர்ஏ ராக
விடியல் புக்கு நெடிய நீட்டி நின்
செருப்படை மிளிர்ந்த திருத்துறு பைஞ்சால்
பிடித்தெறி வெள்வேல் கணையமொடு வித்தி
விழுத்தலை சாய்த்த வெருவரு பைங்கூழ்ப்
பேய்மகள் பற்றிய பிணம்பிறங்கு பல்போர்பு
கணநரி யோடு கழுதுகளம் படுப்பப்
பூதங் காப்பப் பொலிகளந் தழீஇப்
பாடுநர்க்கு இருந்த பீடுடை யாள
தேய்வை வெண்காழ் புரையும் விசிபிணி
வேய்வை காணா விருந்தின் போர்வை
அரிக்குரல் தடாரி உருப்ப ஒற்றிப்
பாடி வந்திசின் பெரும பாடான்று
எழிலி தோயும் இமிழிசை யருவிப்
பொன்னுடை நெடுங்கோட்டு இமையத் தன்ன
ஓடைநுதல ஒல்குதல் அறியாத்
துடியடிக் குழவிய பிடியிடை மிடைந்த
வேழ முகவை நல்குமதி
தாழா ஈகைத் தகை வெய் யோயே

பரணர்

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *