புறநானூறு
அருவி தாழ்ந்த பெருவரை போல
ஆரமொடு பொலிந்த மார்பின் தண்டாக்
கடவுள் சான்ற கற்பின் சேயிழை
மடவோள் பயந்த மணிமருள் அவ்வாய்க்
கிண்கிணிப் புதல்வர் பொலிக என்று ஏத்தித்
திண்தேர் அண்ணல் நிற்பா ராட்டிக்
காதல் பெறாமையின் கனவினும் அரற்றும்என்
காமர் நெஞ்சம் ஏமாந்து உவப்ப
ஆல்அமர் கடவுள் அன்னநின் செல்வம்
வேல்கெழு குருசில் கண்டேன் ஆதலின்
விடுத்தனென் வாழ்க நின் கண்ணி தொடுத்த
தண்டமிழ் வரைப்புஅகம் கொண்டி யாகப்
பணிந்துக்கூட் டுண்ணும் மணிப்பருங் கடுந்திறல்
நின்னோ ரன்னநின் புதல்வர் என்றும்
ஒன்னார் வாட அருங்கலம் தந்து நும்
பொன்னுடை நெடுநகர் நிறைய வைத்தநின்
முன்னோர் போல்க இவர் பெருங்கண் ணோட்டம்
யாண்டும் நாளும் பெருகி ஈண்டுதிரைப்
பெருங்கடல் நீரினும் அக்கடல் மணலினும்
நீண்டுஉயர் வானத்து உறையினும் நன்றும்
இவர்பெறும் புதல்வர்க் காண்தொறும் நீயும்
புகன்ற செல்வமொடு புகழ்இனிது விளங்கி
நீடு வாழிய நெடுந்தகை யானும்
கேளில் சேஎய் நாட்டின் எந் நாளும்
துளிநசைப் புள்ளின்நின் அளிநசைக்கு இரங்கி நின்
அடிநிழல் பழகிய வடியுறை
கடுமான் மாற மறவா தீமே
வடமவண்ணக்கண் பேரிசாத்தனார்
Leave a Reply Cancel reply