புறநானூறு
முழங்கு முந்நீர் முழுவதும் வளைஇப்
பரந்து பட்ட வியன் ஞாலம்
தாளின் தந்து தம்புகழ் நிறீஇ
ஒருதாம் ஆகிய உரவோர் உம்பல்
ஒன்றுபத்து அடுக்கிய கோடிகடை இரீஇய
பெருமைத்து ஆக நின் ஆயுள் தானே
நீர்த் தாழ்ந்த குறுங் காஞ்சிப்
பூக் கதூஉம் இன வாளை
நுண் ஆரல் பரு வரால்
குரூஉக் கெடிற்ற குண்டு அகழி
வான் உட்கும் வடிநீண் மதில்
மல்லல் மூதூர் வய வேந்தே
செல்லும் உலகத்துச் செல்வம் வேண்டினும்
ஞாலம் காவலர் தோள்வலி முருக்கி
ஒருநீ ஆகல் வேண்டினும் சிறந்த
நல்இசை நிறுத்தல் வேண்டினும் மற்றதன்
தகுதி கேள் இனி மிகுதியாள
நீர்இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே
உண்டி முதற்றே உணவின் பிண்டம்
உணவெனப் படுவது நிலத்தோடு நீரே
நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு
உடம்பும் உயிரும் படைத்திசி னோரே
வித்திவான் நோக்கும் புன்புலம் கண்ணகன்
வைப்புற்று ஆயினும் நண்ணி ஆளும்
இறைவன் தாட்குஉத வாதே அதனால்
அடுபோர்ச் செழிய இகழாது வல்லே
நிலன்நெளி மருங்கின் நீர்நிலை பெருகத்
தட்டோர் அம்ம இவண்தட் டோரே
தள்ளா தோர்இவண் தள்ளா தோரே
குடபுலவியனார்
Leave a Reply Cancel reply