வெள்ளியும் இருவிசும்பு ஏர்தரும் புள்ளும்

புறநானூறு

வெள்ளியும் இருவிசும்பு ஏர்தரும் புள்ளும்
உயர்சினைக் குடம்பைக் குரல்தோற் றினவே
பொய்கையும் போடுகண் விழித்தன பையச்
சுடரும் சுருங்கின்று ஒளியே பாடெழுந்து
இரங்குகுரல் முரசமொடு வலம்புரி ஆர்ப்ப
இரவுப் புறங்கண்ட காலைத் தோன்றி
எஃகுஇருள் அகற்றும் ஏமப் பாசறை
வைகறை அரவம் கேளியர் பலகோள்
செய்தார் மார்ப எழுமதி துயில் எனத்
தெண்கண் மாக்கிணை தெளிர்ப்ப ஒற்றி
நெடுங்கடைத் தோன்றி யேனே அது நயந்து
உள்ளி வந்த பரிசிலன் இவன் என
நெய்யுறப் பொரித்த குய்யுடை நெடுஞ்சூடு
மணிக்கலன் நிறைந்த மணநாறு தேறல்
பாம்புரித் தன்ன வான்பூங் கலிங்கமொடு
மாரி யன்ன வண்மையின் சொரிந்து
வேனில் அன்ன என் வெப்பு நீங்க
அருங்கலம் நல்கி யோனே என்றும்
செறுவிற் பூத்த சேயிதழ்த் தாமரை
அறுதொழில் அந்தணர் அறம்புரிந்து எடுத்த
தீயடு விளங்கும் நாடன் வாய்வாள்
வலம்படு தீவிற் பொலம்பூண் வளவன்
எறிதிரைப் பெருங்கடல் இறுதிக்கண் செலினும்
தெறுகதிர்க் கனலி தென்திசைத் தோன்றினும்
என்னென்று அஞ்சலம் யாமே வென்வெல்
அருஞ்சமம் கடக்கும் ஆற்றல் அவன்
திருந்துகழல் நோன்தாள் தண்நிழ லேமே

எருக்காட்டூர்த் தாயங் கண்ணனார்

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *