புறநானூறு
ஆடு இயல் அழல் குட்டத்து
ஆர் இருள் அரை இரவில்
முடப் பனையத்து வேர் முதலாக்
கடைக் குளத்துக் கயம் காயப்
பங்குனி உயர் அழுவத்துத்
தலை நாள்மீன் நிலை திரிய
நிலை நாள்மீன் அதன்எதிர் ஏர்தரத்
தொல் நாள்மீன் துறை படியப்
பாசிச் செல்லாது ஊசித் துன்னாது
அளக்கர்த் திணை விளக்காகக்
கனைஎரி பரப்பக் கால்எதிர்பு பொங்கி
ஒருமீன் விழுந்தன்றால் விசும்பி னானே
அதுகண்டு யாமும்பிறரும் பல்வேறு இரவலர்
பறைஇசை அருவி நல்நாட்டுப் பொருநன்
நோயிலன் ஆயின் நன்றுமன் தில் லென
அழிந்த நெஞ்சம் மடியுளம் பரப்ப
அஞ்சினம் எழுநாள் வந்தன்று இன்றே
மைந்துடை யானை கை வைத்து உறங்கவும்
திண்பிணி முரசும் கண்கிழிந்து உருளவும்
காவல் வெண்குடை கால்பரிந்து உலறவும்
கால்இயல் கலிமாக் கதிஇன்றி வைகவும்
மேலோர் உலகம் எய்தினன் ஆகலின்
ஒண்தொடி மகளிர்க்கு உறுதிணை ஆகித்
தன்துணை ஆயம் மறந்தனன் கொல்லோ-
பகைவர்ப் பிணிக்கும் ஆற்றல் நசைவர்க்கு
அளந்து கொடை அறியா ஈகை
மணிவரை அன்ன மாஅ யோனே
கூடலூர் கிழார்
Leave a Reply Cancel reply