புறநானூறு
வாழும் நாளொடு யாண்டுபல உண்மையின்
தீர்தல்செல் லாது என் உயிர் எனப் பலபுலந்து
கோல்கால் ஆகக் குறும்பல ஒதுங்கி
நூல்விரித் தன்ன கதுப்பினள் கண் துயின்று
முன்றிற் போகா முதுர்வினள் யாயும்
பசந்த மேனியொடு படர்அட வருந்தி
மருங்கில் கொண்ட பல்குறு மாக்கள்
பிசைந்துதின வாடிய முலையள் பெரிது அழிந்து
குப்பைக் கீரைக் கொய்கண் அகைத்த
முற்றா இளந்தளிர் கொய்துகொண்டு உப்பின்று
நீர்உலை யாக ஏற்றி மோரின்று
அவிழ்பதம் மறந்து பாசடகு மிசைந்து
மாசொடு குறைந்த உடுக்கையள் அறம் பழியாத்
துவ்வாள் ஆகிய என்வெய் யோளும்
என்றாங்கு இருவர் நெஞ்சமும் உவப்பக் கானவர்
கரிபுனம் மயக்கிய அகன்கண் கொல்லை
ஐவனம் வித்தி மையுறக் கவினி
ஈனல் செல்லா ஏனற்கு இழுமெனக்
கருவி வானம் தலைஇ யாங்கும்
ஈத்த நின்புகழ் ஏத்தித் தொக்க என்
பசிதினத் திரங்கிய ஒக்கலும் உவப்ப
உயர்ந்து ஏந்து மருப்பின் கொல்களிறு பெறினும்
தவிர்ந்துவிடு பரிசில் கொள்ளலென் உவந்து நீ
இன்புற விடுதி யாயின் சிறிது
குன்றியும் கொள்வல் கூர்வேற் குமண
அதற்பட அருளல் வேண்டுவல் விறற்புகழ்
வசையில் விழுத்திணைப் பிறந்த
இசைமேந் தோன்றல் நிற் பாடிய யானே
பெருஞ்சித்திரனார்
Leave a Reply Cancel reply