Tag: எட்டுத்தொகை

  • போற்றுமின் மறவீர் சாற்றுதும் நும்மை

    புறநானூறு

    போற்றுமின் மறவீர் சாற்றுதும் நும்மை
    ஊர்க்குறு மாக்கள் ஆடக் கலங்கும்
    தாள்படு சின்னீர் களிறு அட்டு வீழ்க்கும்
    ஈர்ப்புடைக் கராஅத்து அன்ன என்ஐ
    நுண்பல் கருமம் நினையாது
    இளையன் என்று இகழின் பெறல் அரிது ஆடே

    ஔவையார்

  • வெப்புள் விளைந்த வேங்கைச் செஞ் சுவல்

    புறநானூறு

    வெப்புள் விளைந்த வேங்கைச் செஞ் சுவல்
    கார்ப் பெயர் கலித்த பெரும் பாட்டு ஈரத்துப்
    பூழி மயங்கப் பல உழுது வித்திப்
    பல்லி ஆடிய பல்கிளைச் செவ்விக்
    களை கால் கழாலின் தோடு ஒலிபு நந்தி
    மென் மயிற் புனிற்றுப் பெடை கடுப்ப நீடிக்
    கருந்தாள் போகி ஒருங்கு பீள் விரிந்து
    கீழும் மேலும் எஞ்சாமைப் பல காய்த்து
    வாலிதின் விளைந்த புது வரகு அரியத்
    தினை கொய்யக் கவ்வை கறுப்ப அவரைக்
    கொழுங்கொடி விளர்க் காய் கோட்பதம்ஆக
    நிலம் புதைப் பழுனிய மட்டின் தேறல்
    புல் வேய்க் குரம்பைக் குடிதொறும் பகர்ந்து
    நறுநெய்க் கடலை விசைப்பச் சோறு அட்டுப்
    பெருந் தோள் தாலம் பூசல் மேவர
    வருந்தா யாணர்த்து நந்துங் கொல்லோ
    இரும்பல் கூந்தல் மடந்தையர் தந்தை
    ஆடு கழை நரலும் சேட் சிமைப் புலவர்
    பாடி யானாப் பண்பிற் பகைவர்
    ஓடுகழல் கம்பலை கண்ட
    செருவெஞ் சேஎய் பெருவிறல் நாடே

    கபிலர்

  • ஒருதலைப் பதலை தூங்க ஒருதலைத்

    புறநானூறு

    ஒருதலைப் பதலை தூங்க ஒருதலைத்
    தூம்புஅகச் சிறுமுழாத் தூங்கத் தூக்கிக்
    கவிழ்ந்த மண்டை மலர்க்குநர் யார் எனச்
    சுரன்முதல் இருந்த சில்வளை விறலி
    செல்வை யாயின் சேணோன் அல்லன்
    முனைசுட வெழுந்த மங்குல் மாப்புகை
    மலைசூழ் மஞ்சின் மழ களிறு அணியும்
    பகைப்புலத் தோனே பல் வேல் அஞ்சி
    பொழுது இடைப் படாஅப் புலரா மண்டை
    மெழுகுமெல் அடையிற் கொழுநிணம் பெருப்ப
    வறத்தற் காலை யாயினும்
    புரத்தல் வல்லன் வாழ்க அவன் தாளே

    ஔவையார்

  • கார்ப் பெயல் தலைஇய காண்பு இன் காலைக்

    புறநானூறு

    கார்ப் பெயல் தலைஇய காண்பு இன் காலைக்
    களிற்று முக வரியின் தெறுழ்வீ பூப்பச்
    செம் புற்று ஈயலின் இன்அளைப் புளித்து
    மெந்தினை யாணர்த்து நந்துங் கொல்லோ
    நிழலில் நீளிடைத் தனிமரம் போலப்
    பணைகெழு வேந்தரை இறந்தும்
    இரவலர்க்கு ஈயும் வள்ளியோன் நாடே

    கபிலர்

  • எருதே இளைய நுகம் உணராவே

    புறநானூறு

    எருதே இளைய நுகம் உணராவே
    சகடம் பண்டம் பெரிதுபெய் தன்றே
    அவல் இழியினும் மிசை ஏறினும்
    அவணது அறியுநர் யார் என உமணர்
    கீழ்மரத்து யாத்த சேமஅச்சு அன்ன
    இசை விளங்கு கவிகை நெடியோய் திங்கள்
    நாள்நிறை மதியத்து அனையை இருள்
    யாவண தோ நின் நிழல்வாழ் வோர்க்கே

    ஔவையார்

  • அறையும் பொறையும் மணந்த தலைய

    புறநானூறு

    அறையும் பொறையும் மணந்த தலைய
    எண் நாள் திங்கள் அனைய கொடுங் கரைத்
    தெண் ணீர்ச் சிறுகுளம் கீள்வது மாதோ-
    கூர் வேல் குவைஇய மொய்ம்பின்
    தேர்வண் பாரி தண் பறம்பு நாடே

    கபிலர்

  • ஒருநாள் செல்லலம் இருநாட் செல்லலம்

    புறநானூறு

    ஒருநாள் செல்லலம் இருநாட் செல்லலம்
    பன்னாள் பயின்று பலரொடு செல்லினும்
    தலைநாள் பொன்ற விருப்பினன் மாதோ
    அணிபூண் அணிந்த யானை இயல்தேர்
    அதியமான் பரிசில் பெறூஉங் காலம்
    நீட்டினும் நீட்டா தாயினும் யானைதன்
    கோட்டிடை வைத்த கவளம் போலக்
    கையகத் தது அது பொய்யா காதே
    அருந்தே மாந்த நெஞ்சம்
    வருந்த வேண்டா வாழ்க அவன் தாளே

    ஔவையார்

  • மைம் மீன் புகையினும் தூமம் தோன்றினும்

    புறநானூறு

    மைம் மீன் புகையினும் தூமம் தோன்றினும்
    தென் திசை மருங்கின் வெள்ளி ஓடினும்
    வயல்அகம் நிறையப் புதற்பூ மலர
    மனைத்தலை மகவை ஈன்ற அமர்க்கண்
    ஆமா நெடு நிறை நன்புல் ஆரக்
    கோஒல் செம்மையின் சான்றோர் பல்கிப்
    பெயல் பிழைப்பு அறியாப் புன்புலத் ததுவே
    பிள்ளை வெருகின் முள் லெயிறு புரையப்
    பாசிலை முல்லை முகைக்கும்
    ஆய் தொடி அரிவையர் தந்தை நாடே

    கபிலர்

  • தீநீர்ப் பெருங் குண்டு சுனைப் பூத்த குவளைக்

    புறநானூறு

    தீநீர்ப் பெருங் குண்டு சுனைப் பூத்த குவளைக்
    கூம்பவிழ் முழுநெறி புரள்வரும் அல்குல்
    ஏந்தெழில் மழைக் கண் இன் நகை மகளிர்
    புன் மூசு கவலைய முள் முடை வேலிப்
    பஞ்சி முன்றில் சிற்றில் ஆங்கண்
    பீரை நாறிய சுரை இவர் மருங்கின்
    ஈத்திலைக் குப்பை ஏறி உமணர்
    உப்பு ஓய் ஒழுகை எண்ணுப மாதோ
    நோகோ யானே தேய்கமா காலை
    பயில் இருஞ் சிலம்பிற் கலை பாய்ந்து உகளவும்
    கலையுங் கொள்ளா வாகப்பலவும்
    காலம் அன்றியும் மரம் பயம் பகரும்
    யாணர் அறாஅ வியன்மலை அற்றே
    அண்ணல் நெடுவரை ஏறித் தந்தை
    பெரிய நறவின் கூர் வேற் பாரியது
    அருமை அறியார் போர் எதிர்ந்து வந்த
    வலம் படுதானை வேந்தர்
    பொலம் படைக் கலிமா எண்ணு வோரே

    கபிலர்

  • மழைக் கணஞ் சேக்கும் மாமலைக் கிழவன்

    புறநானூறு

    மழைக் கணஞ் சேக்கும் மாமலைக் கிழவன்
    வழைப் பூங் கண்ணி வாய்வாள் அண்டிரன்
    குன்றம் பாடின கொல்லோ
    களிறு மிக உடைய இக் கவின் பெறு காடே

    உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்