Tag: புறநானூறு

  • கீழ் நீரால் மீன் வழங்குந்து

    புறநானூறு

    கீழ் நீரால் மீன் வழங்குந்து
    மீநீரான் கண்ணன்ன மலர்பூக் குந்து
    கழி சுற்றிய விளை கழனி
    அரிப் பறையாற் புள் ளோப்புந்து
    நெடுநீர் தொகூஉம் மணல் தண்கான்
    மென் பறையாற் புள் இரியுந்து
    நனைக் கள்ளின் மனைக் கோசர்
    தீந் தேறல் நறவு மகிழ்ந்து
    தீங் குரவைக் கொளைத்தாங் குந்து
    உள்ளி லோர்க்கு வலியா குவன்
    கேளி லோர்க்குக் கேளா குவன்
    கழுமிய வென்வேல் வேளே
    வளநீர் வாட்டாற்று எழினி யாதன்
    கிணை யேம் பெரும
    கொழுந் தடிய சூடு என்கோ
    வளநனையின் மட்டு என்கோ
    குறு முயலின் நிணம் பெய்தந்த
    நறுநெய்ய சோறு என்கோ
    திறந்து மறந்து கூட்டு முதல்
    முகந்து கொள்ளும் உணவு என்கோ
    அன்னவை பலபல ______________
    _________________________ வருந்திய
    இரும்பேர் ஒக்கல் அருந்தி எஞ்சிய
    அளித்து உவப்ப ஈத்தோன் எந்தை
    எம்மோர் ஆக்கக் கங்கு உண்டே
    மாரி வானத்து மீன் நாப்பண்
    விரி கதிர வெண் திங்களின்
    விளங்கித் தோன்றுக அவன் கலங்கா நல்லிசை
    யாமும் பிறரும் வாழ்த்த நாளும்
    நிரைசால் நன்கலன் நல்கி
    உரைசெலச் சுரக்க அவன் பாடல்சால் வளனே

    மாங்குடி கிழார்

  • உருகெழு ஞாயிற்று ஒண்கதிர் மிசைந்த

    புறநானூறு

    உருகெழு ஞாயிற்று ஒண்கதிர் மிசைந்த
    முளிபுல் கானம் குழைப்பக் கல்லென
    அதிர்குரல் ஏறோடு துளிசொரிந் தாங்குப்
    பசிதினத் திரங்கிய கசிவுடை யாக்கை
    அவிழ்புகுவு அறியா தாகலின் வாடிய
    நெறிகொள் வரிக்குடர் குனிப்பத் தண்ணெனக்
    குய்கொள் கொழுந்துவை நெய்யுடை அடிசில்
    சிறுபொன் நன்கலஞ் சுற்ற இரீஇக்
    கோடின் றாக பாடுநர் கடும்பு என
    அரிதுபெறு பொலங்கலம் எளிதினின் வீசி
    நட்டோர் நட்ட நல்லிசைக் குமணன்
    மட்டார் மறுகின் முதிரத் தோனே
    செல்குவை யாயின் நல்குவை பெரிது எனப்
    பல்புகழ் நுவலுநர் கூற வல் விரைந்து
    உள்ளம் துரப்ப வந்தனென் எள்ளுற்று
    இல்லுளைக் குடுமிப் புதல்வன் பன்மாண்
    பாலில் வறுமுலைசுவைத்தனன்பெறாஅன்
    கூழும் சோறும் கடைஇ ஊழின்
    உள்ளில் வருங்கலம் திறந்து அழக் கண்டு
    மறப்புலி உரைத்தும் மதியங் காட்டியும்
    நொந்தனள் ஆகி நுந்தையை உள்ளிப்
    பொடிந்தநின் செவ்வி காட்டு எனப் பலவும்
    வினவல் ஆனா ளாகி நனவின்
    அல்லல் உழப்போள் மல்லல் சிறப்பச்
    செல்லாச் செல்வம் மிகுந்தனை வல்லே
    விடுதல் வேண்டுவல் அத்தை படுதிரை
    நீர்சூழ் நிலவரை உயர நின்
    சீர்கெழு விழுப்புகழ் ஏத்துகம் பலவே

    பெருஞ்சித்திரனார்

  • மென் புலத்து வயல் உழவர்

    புறநானூறு

    மென் புலத்து வயல் உழவர்
    வன் புலத்துப் பகடு விட்டுக்
    குறு முயலின் குழைச் சூட்டொடு
    நெடு வாளைப் பல் உவியல்
    பழஞ் சோற்றுப் புக வருந்திப்
    புதல் தளவின் பூச் சூடி
    அரில் பறையாற் புள்ளோப்பி
    அவிழ் நெல்லின் அரியலா ருந்து
    மனைக் கோழிப் பைம்பயி ரின்னே
    கானக் கோழிக் கவர் குரலொடு
    நீர்க் கோழிக் கூப்பெயர்க் குந்து
    வே யன்ன மென் தோளால்
    மயில் அன்ன மென் சாயலார்
    கிளிகடி யின்னே
    அகல் அள்ளற் புள்இரீஇ யுந்து
    ஆங்கப் பலநல்ல புலன் அணியும்
    சீர்சான்ற விழுச் சிறப்பின்
    சிறுகண் யானைப் பெறலருந் தித்தன்
    செல்லா நல்லிசை உறந்தைக் குணாது
    நெடுங்கை வேண்மான் அருங்கடிப் பிடவூர்
    அறப்பெயர்ச் சாத்தன் கிளையேம் பெரும
    முன்நாள் நண்பகல் சுரன்உழந்து வருந்திக்
    கதிர்நனி சென்ற கனையிருள் மாலைத்
    தன்கடைத் தோன்றி என் உறவு இசைத்தலின்
    தீங்குரல் கின் அரிக்குரல் தடாரியடு
    ஆங்கு நின்ற எற் கண்டு
    சிறிதும் நில்லான் பெரிதுங் கூறான்
    அருங்கலம் வரவே அருளினன் வேண்டி
    ஐயென உரைத்தன்றி நல்கித் தன்மனைப்
    பொன்போல் மடந்தையைக் காட்டிஇவனை
    என்போல் போற்று என் றோனே அதற்கொண்டு
    அவன்மறவ லேனே பிறர்உள்ள லேனே
    அகன் ஞாலம் பெரிது வெம்பினும்
    மிக வானுள் எரி தோன்றினும்
    குள மீனோடும் தாள் புகையினும்
    பெருஞ்செய் நெல்லின் கொக்குஉகிர் நிமிரல்
    பசுங்கண் கருனைச் சூட்டொடு மாந்த
    விளைவுஒன்றோ வெள்ளம் கொள்க என
    உள்ளதும் இல்லதும் அறியாது
    ஆங்குஅமைந் தன்றால் வாழ்க அவன் தாளே

    மதுரை நக்கீரர்

  • வாழும் நாளொடு யாண்டுபல உண்மையின்

    புறநானூறு

    வாழும் நாளொடு யாண்டுபல உண்மையின்
    தீர்தல்செல் லாது என் உயிர் எனப் பலபுலந்து
    கோல்கால் ஆகக் குறும்பல ஒதுங்கி
    நூல்விரித் தன்ன கதுப்பினள் கண் துயின்று
    முன்றிற் போகா முதுர்வினள் யாயும்
    பசந்த மேனியொடு படர்அட வருந்தி
    மருங்கில் கொண்ட பல்குறு மாக்கள்
    பிசைந்துதின வாடிய முலையள் பெரிது அழிந்து
    குப்பைக் கீரைக் கொய்கண் அகைத்த
    முற்றா இளந்தளிர் கொய்துகொண்டு உப்பின்று
    நீர்உலை யாக ஏற்றி மோரின்று
    அவிழ்பதம் மறந்து பாசடகு மிசைந்து
    மாசொடு குறைந்த உடுக்கையள் அறம் பழியாத்
    துவ்வாள் ஆகிய என்வெய் யோளும்
    என்றாங்கு இருவர் நெஞ்சமும் உவப்பக் கானவர்
    கரிபுனம் மயக்கிய அகன்கண் கொல்லை
    ஐவனம் வித்தி மையுறக் கவினி
    ஈனல் செல்லா ஏனற்கு இழுமெனக்
    கருவி வானம் தலைஇ யாங்கும்
    ஈத்த நின்புகழ் ஏத்தித் தொக்க என்
    பசிதினத் திரங்கிய ஒக்கலும் உவப்ப
    உயர்ந்து ஏந்து மருப்பின் கொல்களிறு பெறினும்
    தவிர்ந்துவிடு பரிசில் கொள்ளலென் உவந்து நீ
    இன்புற விடுதி யாயின் சிறிது
    குன்றியும் கொள்வல் கூர்வேற் குமண
    அதற்பட அருளல் வேண்டுவல் விறற்புகழ்
    வசையில் விழுத்திணைப் பிறந்த
    இசைமேந் தோன்றல் நிற் பாடிய யானே

    பெருஞ்சித்திரனார்

  • பதிமுதற் பழகாப் பழங்கண் வாழ்க்கைக்

    புறநானூறு

    பதிமுதற் பழகாப் பழங்கண் வாழ்க்கைக்
    குறுநெடுந் துணையடும் கூமை வீதலிற்
    குடிமுறை பாடி ஒய்யென வருந்தி
    அடல்நசை மறந்தஎம் குழிசி மலர்க்கும்
    கடனறி யாளர் பிறநாட்டு இன்மையின்
    வள்ளன் மையின்எம் வரைவோர் யார் என
    உள்ளிய உள்ளமொடு உலைநசை துணையா
    உலகம் எல்லாம் ஒருபாற் பட்டென
    மலர்தார் அண்ணல்நின் நல்லிசை உள்ளி
    ஈர்ங்கை மறந்தஎன் இரும்பேர் ஒக்கல்
    கூர்ந்தஎவ் வம்வீடக் கொழுநிணம் கிழிப்பக்
    கோடைப் பருத்தி வீடுநிறை பெய்த
    மூடைப் பண்டம் மிடைநிறைந் தன்ன
    வெண்நிண மூரி அருள நாளுற
    ஈன்ற அரவின் நாவுருக் கடுக்கும்என்
    தொன்றுபடு சிதாஅர் துவர நீக்கிப்
    போதுவிரி பகன்றைப் புதுமலர் அன்ன
    அகன்றுமடி கலிங்கம் உடீஇச் செல்வமும்
    கேடின்று நல்குமதி பெரும மாசில்
    மதிபுரை மாக்கிணை தெளிர்ப்ப ஒற்றி
    ஆடுமகள் அல்குல் ஒப்ப வாடிக்
    கோடை யாயினும் கோடி _____________
    காவிரி புரக்கும் நன்னாட்டுப் பொருந
    வாய்வாள் வளவன் வாழ்க எனப்
    பீடுகெழு நோன்தாள் பாடுகம் பலவே

    நல்லிறையனார்

  • முரசுகடிப்பு இகுப்பவும் வால்வளை துவைப்பவும்

    புறநானூறு

    முரசுகடிப்பு இகுப்பவும் வால்வளை துவைப்பவும்
    அரசுடன் பொருத அண்ணல் நெடுவரைக்
    கறங்குவெள் அருவி கல் அலைத்து ஒழுகும்
    பறம்பின் கோமான் பாரியும் பிறங்கு மிசைக்
    கொல்லி ஆண்ட வல்வில் ஓரியும்
    காரி ஊர்ந்து பேரமர்க் கடந்த
    மாரி ஈகை மறப்போர் மலையனும்
    ஊராது ஏந்திய குதிரைக் கூர்வேல்
    கூவிளங் கண்ணிக் கொடும்பூண் எழினியும்
    ஈர்ந்தண் சிலம்பின் இருள் தூங்கும் நளிமுழை
    அருந்திறல் கடவுள் காக்கும் உயர்சிமைப்
    பெருங்கல் நாடன் பேகனும் திருந்து மொழி
    மோசி பாடிய ஆயும் ஆர்வமுற்று
    உள்ளி வருநர் உலைவுநனி தீரத்
    தள்ளாது ஈயும் தகைசால் வண்மைக்
    கொள்ளார் ஓட்டிய நள்ளையும் என ஆங்கு
    எழுவர் மாய்ந்த பின்றை அழி வரப்
    பாடி வருநரும் பிறருங் கூடி
    இரந்தோர் அற்றம் தீர்க்கென விரைந்து இவண்
    உள்ளி வந்தனென் யானே விசும்புஉறக்
    கழைவளர் சிலம்பின் வழையொடு நீடி
    ஆசினிக் கவினிய பலவின் ஆர்வுற்று
    முட்புற முதுகனி பெற்ற கடுவன்
    துய்த்தலை மந்தியைக் கையிடூஉப் பயிரும்
    அதிரா யாணர் முதிரத்துக் கிழவ
    இவண்விளங்கு சிறப்பின் இயல்தேர்க் குமண
    இசைமேந் தோன்றிய வண்மையொடு
    பகைமேம் படுக நீ ஏந்திய வேலே

    பெருஞ்சித்திரனார்

  • தமர்தன் தப்பின் அதுநோன் றல்லும்

    புறநானூறு

    தமர்தன் தப்பின் அதுநோன் றல்லும்
    பிறர்கை யறவு தான்நா ணுதலும்
    படைப்பழி தாரா மைந்தினன் ஆகலும்
    வேந்துடை அவையத்து ஓங்குபு நடத்தலும்
    நும்மோர்க்குத் தகுவன அல்ல எம்மோன்
    சிலைசெல மலர்ந்த மார்பின் கொலைவேல்
    கோடல் கண்ணிக் குறவர் பெருமகன்
    ஆடு மழை தவிர்க்கும் பயங்கெழு மீமிசை
    எற்படு பொழுதின் இனம்தலை மயங்கிக்
    கட்சி காணாக் கடமான் நல்லேறு
    மடமான் நாகுபிணை பயிரின் விடர்முழை
    இரும்புலிப் புகர்ப்போத்து ஓர்க்கும்
    பெருங்கல் நாடன்-எம் ஏறைக்குத் தகுமே

    குறமகள் இளவெயினி

  • ஒன்றுநன் குடைய பிறர் குன்றம் என்றும்

    புறநானூறு

    ஒன்றுநன் குடைய பிறர் குன்றம் என்றும்
    இரண்டுநன் குடைத்தே கொண்பெருங் கானம்
    நச்சிச் சென்ற இரவலர்ச் சுட்டித்
    தொடுத்துணக் கிடப்பினும் கிடக்கும் அதான்று
    நிறையருந் தானை வேந்தரைத்
    திறைகொண்டு பெயர்க்குஞ் செம்மலும் உடைத்தே

    மோசிகீரனார்

  • வணர் கோட்டுச் சீறியாழ் வாடுபுடைத் தழீஇ

    புறநானூறு

    வணர் கோட்டுச் சீறியாழ் வாடுபுடைத் தழீஇ
    உணர்வோர் யார் என் இடும்பை தீர்க்கஎனக்
    கிளக்கும் பாண கேள் இனி நயத்தின்
    பாழ்ஊர் நெருஞ்சிப் பசலை வான்பூ
    ஏர்தரு சுடரின் எதிர்கொண்டு ஆஅங்கு
    இலம்படு புலவர் மண்டை விளங்கு புகழ்க்
    கொண்பெருங்காலத்துக் கிழவன்
    தண்தார் அகலம் நோக்கின் மலர்ந்தே

    மோசிகீரனார்

  • திரைபொரு முந்நீர்க் கரைநணிச் செலினும்

    புறநானூறு

    திரைபொரு முந்நீர்க் கரைநணிச் செலினும்
    அறியுநர்க் காணின் வேட்கை நீக்கும்
    சின்னீர் வினவுவர் மாந்தர் அதுபோல்
    அரசர் உழைய ராகவும் புரைதபு
    வள்ளியோர்ப் படர்குவர் புலவர் அதனால்
    யானும்பெற்றது ஊதியம் பேறியாது என்னேன்
    உற்றனென் ஆதலின் உள்ளிவந் தனனே
    ஈயென இரத்தலோ அரிதே நீ அது
    நல்கினும் நல்காய் ஆயினும் வெல்போர்
    எறிபடைக்கு ஓடா ஆண்மை அறுவைத்
    தூவிரி கடுப்பத் துவன்றி மீமிசைத்
    தண்பல இழிதரும் அருவி நின்
    கொண்டுபெருங்கானம் பாடல் எனக்கு எளிதே

    மோசிகீரனார்