புறநானூறு
விசும்பு நீத்தம் இறந்த ஞாயிற்றுப்
பசுங்கதிர் மழுகிய சிவந்துவாங்கு அந்தி
சிறுநனி பிறந்த பின்றைச் செறிபிணிச்
சிதாஅர் வள்பின்என் தடாரி தழீஇப்
பாணர் ஆரும் அளவை யான்தன்
யாணர் நல்மனைக் கூட்டு முதல் நின்றனென்
இமைத்தோர் விழித்த மாத்திரை ஞெரேரெனக்
குணக்கு எழு திங்கள் கனைஇருள் அகற்றப்
பண்டுஅறி வாரா உருவோடு என் அரைத்
தொன்றுபடு துளையடு பருஇழை போகி
நைந்துகரை பறைந்தஎன் உடையும் நோக்கி
விருந்தினன் அளியன் இவன் எனப் பெருந்தகை
நின்ற முரற்கை நீக்கி நன்றும்
அரவுவெகுண் டன்ன தேறலொடு சூடுதருபு
நிரயத் தன்னஎன் வறன்களைந் தன்றே
இரவி னானே ஈத்தோன் எந்தை
அற்றை ஞான்றினோடு இன்றின் ஊங்கும்
இரப்பச் சிந்தியேன் நிரப்படு புணையின்
உளத்தின் அளக்கும் மிளிர்ந்த தகையேன்
நிறைக்குளப் புதவின் மகிழ்ந்தனெ னாகி
ஒருநாள் இரவலர் வரையா வள்ளியோர் கடைத்தலை
ஞாங்கர் நெடுமொழி பயிற்றித்
தோன்றல் செல்லாது என் சிறுகிணைக் குரலே
புறத்திணை நன்னாகனார்