Tag: புறநானூறு

  • களிறு முகந்து பெயர்குவம் எனினே

    புறநானூறு

    களிறு முகந்து பெயர்குவம் எனினே
    ஒளிறுமழை தவிர்க்கும் குன்றம் போலக்
    கைம்மா எல்லாம் கணையிடத் தொலைந்தன
    கொடுஞ்சி நெடுந்தேர் முகக்குவம் எனினே
    கடும்பரி நன்மான் வாங்குவயின் ஒல்கி
    நெடும்பீடு அழிந்து நிலம்சேர்ந் தனவே
    கொய்சுவல் புரவி முகக்குவம் எனினே
    மெய்நிறைந்த வடுவொடு பெரும்பிறி தாகி
    வளிவழக் கறுத்த வங்கம் போலக்
    குருதியம் பெரும்புனல் கூர்ந்தனவே ஆங்க
    முகவை இன்மையின் உகவை இன்றி
    இரப்போர் இரங்கும் இன்னா வியன்களத்து
    ஆள்அழிப் படுத்த வாளேர் உழவ
    கடாஅ யானைக் கால்வழி யன்னவென்
    தெடாரித் தெண்கண் தெளிர்ப்ப வொற்றிப்
    பாடி வந்த தெல்லாம் கோடியர்
    முழவுமருள் திருமணி மிடைந்தநின்
    அரவுறழ் ஆரம் முகக்குவம் எனவே

    கழாத் தலையார்

  • நாகத் தன்ன பாகார் மண்டிலம்

    புறநானூறு

    நாகத் தன்ன பாகார் மண்டிலம்
    தமவே யாயினும் தம்மொடு செல்லா
    வெற்றோர் ஆயினும் நோற்றோர்க்கு ஒழியும்
    ஏற்ற பார்ப்பார்க்கு ஈர்ங்கை நிறையப்
    பூவும் பொன்னும் புனல்படச் சொரிந்து
    பாசிழை மகளிர் பொலங்கலத்து ஏந்திய
    நாரறி தேறல் மாந்தி மகிழ் சிறந்து
    இரவலர்க்கு அருங்கலம் அருகாது வீசி
    வாழ்தல் வேண்டும் இவண் வரைந்த வைகல்
    வாழச் செய்த நல்வினை அல்லது
    ஆழுங் காலைப் புணைபிறிது இல்லை
    ஒன்று புரிந்து அடங்கிய இருபிறப் பாளர்
    முத்தீப் புரையக் காண்தக இருந்த
    கொற்ற வெண்குடக் கொடித்தேர் வேந்திர்
    யான் அறி அளவையோ இவ்வே வானத்து
    வயங்கித் தோன்றும் மீனினும் இம்மெனப்
    பரந்து இயங்கும் மாமழை உறையினும்
    உயர்ந்து மேந்தோன்றிப் பொலிக நும் நாளே

    ஔவையார்

  • விழுக்கடிப்பு அறைந்த முழுக்குரல் முரசம்

    புறநானூறு

    விழுக்கடிப்பு அறைந்த முழுக்குரல் முரசம்
    ஒழுக்குடை மருங்கின் ஒருமொழித் தாக
    அரவுஎறி உருமின் உரறுபு சிலைப்ப
    ஒருதா மாகிய பெருமை யோரும்
    தம்புகழ் நிறீஇச் சென்றுமாய்ந் தனரே
    அதனால் அறிவோன் மகனே மறவோர் செம்மால்
    _______________________ உரைப்பக் கேண்மதி
    நின் ஊற்றம் பிறர் அறியாது
    பிறர் கூறிய மொழி தெரியா
    ஞாயிற்று எல்லை ஆள்வினைக்கு உதவி
    இரவின் எல்லை வருவது நாடி
    உரை ________________________________
    உழவொழி பெரும்பகடு அழிதின் றாங்குச்
    செங்கண் மகளிரொடு சிறுதுளி அளைஇ
    அங்கள் தேறல் ஆங்கலத்து உகுப்ப
    கெடல் அருந் திருவ_______________
    மடை வேண்டுநர்க்கு இடை அருகாது
    அவிழ் வேண்டுநர்க்கு இடை அருளி
    விடை வீழ்த்துச் சூடு கிழிப்ப
    நீர்நீலை பெருத்த வார்மணல் அடைகரைக்
    காவு தோறும் ___________________
    மடங்கல் உண்மை மாயமோ அன்றே

    கோதமனார்

  • மயங்குஇருங் கருவிய விசும்புமுக னாக

    புறநானூறு

    மயங்குஇருங் கருவிய விசும்புமுக னாக
    இயங்கிய இருசுடர் கண் எனப் பெயரிய
    வளியிடை வழங்கா வழக்கரு நீத்தம்
    வயிரக் குறட்டின் வயங்குமணி யாரத்து
    பொன்னந் திகிரி முன்சமத்து உருட்டிப்
    பொருநர்க் காணாச் செருமிகு முன்பின்
    முன்னோர் செல்லவும் செல்லாது இன்னும்
    விலைநலப் பெண்டிரிற் பலர்மீக் கூற
    உள்ளேன் வாழியர் யான் எனப் பன்மாண்
    நிலமகள் அழுத காஞ்சியும்
    உண்டென உரைப்பரால் உணர்ந்திசி னோரே

    மார்க்கண்டேயனார்

  • வாடா மாலை பாடினி அணியப்

    புறநானூறு

    வாடா மாலை பாடினி அணியப்
    பாணன் சென்னிக் கேணி பூவா
    எரிமருள் தாமரைப் பெருமலர் தயங்க
    மைவிடை இரும்போத்துச் செந்தீச் சேர்த்திக்
    காயங் கனிந்த கண்ணகன் கொழுங்குறை
    நறவுண் செவ்வாய் நாத்திறம் பெயர்ப்ப
    உண்டும் தின்றும் இரப்போர்க்கு ஈந்தும்
    மகிழ்கம் வம்மோ மறப்போ ரோயே
    அரிய வாகலும் உரிய பெரும
    நிலம்பக வீழ்ந்த அலங்கல் பல்வேர்
    முதுமரப் பொத்தின் கதுமென இயம்பும்
    கூகைக் கோழி ஆனாத்
    தாழிய பெருங்கா டெய்திய ஞான்றே

    கூகைக் கோரியார்

  • இருங்கடல் உடுத்தஇப் பெருங்கண் மாநிலம்

    புறநானூறு

    இருங்கடல் உடுத்தஇப் பெருங்கண் மாநிலம்
    உடைஇலை நடுவணது இடைபிறர்க்கு இன்றித்
    தாமே ஆண்ட ஏமம் காவலர்
    இடுதிரை மணலினும் பலரே சுடுபிணக்
    காடுபதி யாகப் போகித் தத்தம்
    நாடு பிறர்கொளச் சென்றுமாய்ந் தனரே
    அதனால் நீயும் கேண்மதி அத்தை வீயாது
    உடம்பொடு நின்ற உயிரும் இல்லை
    மடங்கல் உண்மை மாயமோ அன்றே
    கள்ளி ஏய்ந்த முள்ளியம் புறங்காட்டு
    வெள்ளில் போகிய வியலுள் ஆங்கண்
    உப்பிலாஅ அவிப் புழுக்கல்
    கைக் கொண்டு பிறக்கு நோக்காது
    இழி பிறப்பினோன் ஈயப் பெற்று
    நிலங்கல னாக இலங்குபலி மிசையும்
    இன்னா வைகல் வாரா முன்னே
    செய்ந்நீ முன்னிய வினையே
    முந்நீர் வரைப்பகம் முழுதுடன் துறந்தே

    ஐயாதிச் சிறுவெண்டேரையார்

  • தென் பரதவர் மிடல் சாய

    புறநானூறு

    தென் பரதவர் மிடல் சாய
    வட வடுகர் வாள் ஓட்டிய
    தொடையமை கண்ணித் திருந்துவேல் தடக்கைக்
    கடுமா கடை இய விடுபரி வடிம்பின்
    நற்றார்க் கள்ளின் சோழன் கோயில்
    புதுப்பிறை யன்ன சுதைசெய் மாடத்துப்
    பனிக்கயத் தன்ன நீள்நகர் நின்று என்
    அரிக்கூடு மாக்கிணை இரிய ஒற்றி
    எஞ்சா மரபின் வஞ்சி பாட
    எமக்கென வகுத்த அல்ல மிகப்பல
    மேம்படு சிறப்பின் அருங்கல வெறுக்கை
    தாங்காது பொழிதந் தோனே அது கண்டு
    இலம்பாடு உழந்தஎன் இரும்பேர் ஒக்கல்
    விரல்செறி மரபின செவித்தொடக் குநரும்
    செவித்தொடர் மரபின விரற்செறிக் குநரும்
    அரைக்கமை மரபின மிடற்றியாக் குநரும்
    கடுந்தெறல் இராமன் உடன்புணர் சீதையை
    வலித்தகை அரக்கன் வெளவிய ஞான்றை
    நிலஞ்சேர் மதர் அணி கண்ட குரங்கின்
    செம்முகப் பெருங்கிளை இழைப்பொலிந் தா அங்கு
    அறாஅ அருநகை இனிதுபெற் றிகுமே
    இருங்குளைத் தலைமை எய்தி
    அரும்படர் எவ்வம் உழந்ததன் தலையே

    ஊன்பொதி பசுங்குடையார்

  • சிலையுலாய் நிமிர்ந்த சாந்துபடு மார்பின்

    புறநானூறு

    சிலையுலாய் நிமிர்ந்த சாந்துபடு மார்பின்
    ஒலிபுனற் கழனி வெண்குடைக் கிழவோன்
    வலிதுஞ்சு தடக்கை வாய்வாள் குட்டுவன்
    வள்ளிய னாதல் வையகம் புகழினும்
    உள்ளல் ஓம்புமின் உயர்மொழிப் புலவீர்
    யானும் இருள்நிலாக் கழிந்த பகல்செய் வைகறை
    ஒருகண் மாக்கிணை தெளிர்ப்ப ஒற்றிப்
    பாடுஇமிழ் முரசின் இயல்தேர்த் தந்தை
    வாடா வஞ்சி பாடினேன் ஆக
    அகமலி உவகையடு அணுகல் வேண்டிக்
    கொன்றுசினந் தணியாப் புலவுநாறு மருப்பின்
    வெஞ்சின வேழம் நல்கினன் அஞ்சி
    யான்அது பெயர்த்தனென் ஆகத் தான்அது
    சிறிதென உணர்ந்தமை நாணிப் பிறிதும்ஓர்
    பெருங்களிறு நல்கி யோனே அதற்கொண்டு
    இரும்பேர் ஒக்கல் பெரும்புலம்பு உறினும்
    துன்னரும் பரிசில் தரும் என
    என்றும் செல்லேன் அவன் குன்றுகெழு நாட்டே

    கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்

  • பனி பழுநிய பல் யாமத்துப்

    புறநானூறு

    பனி பழுநிய பல் யாமத்துப்
    பாறு தலை மயிர் நனைய
    இனிது துஞ்சும் திருநகர் வரைப்பின்
    இனையல் அகற்ற என் கிணைதொடாக் குறுகி
    அவி உணவினோர் புறங் காப்ப
    அற நெஞ்சத்தோன் வாழ நாள் என்று
    அதற் கொண்டு வரல் ஏத்திக்
    கரவு இல்லாக் கவிவண் கையான்
    வாழ்க எனப் பெயர் பெற்றோர்
    பிறர்க்கு உவமம் பிறர் இல் என
    அது நினைத்து மதி மழுகி
    அங்கு நின்ற எற் காணூஉச்
    சேய் நாட்டுச் செல் கிணைஞனை
    நீபுரவலை எமக்கு என்ன
    மலைபயந்த மணியும் கடறுபயந்த பொன்னும்
    கடல் பயந்த கதிர் முத்தமும்
    வேறுபட்ட உடையும் சேறுபட்ட தசும்பும்
    கனவிற் கண்டாங்கு வருந்தாது நிற்ப
    நனவின் நல்கியோன் நகைசால் தோன்றல்
    நாடுஎன மொழிவோர் அவன் நாடென மொழிவோர்
    வேந்தென மொழிவோர் அவன் வேந்தென மொழிவோர்
    __________ பொற்கோட்டு யானையர்
    கவர் பரிக் கச்சை நன்மான்
    வடி மணி வாங்கு உருள
    __________ நல்தேர்க் குழுவினர்
    கத ழிசை வன்க ணினர்
    வாளின் வாழ்நர் ஆர்வமொடு ஈண்டிக்
    கடல் ஒலி கொண்ட தானை
    அடல்வெங் குருசில் மன்னிய நெடிதே

    உலோச்சனார்

  • மதிஏர் வெண்குடை அதியர் கோமான்

    புறநானூறு

    மதிஏர் வெண்குடை அதியர் கோமான்
    கொடும்பூண் எழினி நெடுங்கடை நின்று யான்
    பசலை நிலவின் பனிபடு விடியல்
    பொருகளிற்று அடிவழி யன்ன என்கை
    ஒருகண் மாக்கிணை ஒற்றுபு கொடாஅ
    உருகெழு மன்னர் ஆர்எயில் கடந்து
    நிணம்படு குருதிப் பெரும்பாட்டு ஈரத்து
    அணங்குடை மரபின் இருங்களந் தோறும்
    வெள்வாய்க் கழுதைப் புல்இனம் பூட்டி
    வெள்ளை வரகும் கொள்ளும் வித்தும்
    வைகல் உழவ வாழிய பெரிது எனச்
    சென்றுயான் நின்றனெ னாக அன்றே
    ஊருண் கேணிப் பகட்டுஇலைப் பாசி
    வேர்புரை சிதாஅர் நீக்கி நேர்கரை
    நுண்ணூற் கலிங்கம் உடீஇ உண்ம் எனத்
    தேட்கடுப்பு அன்ன நாட்படு தேறல்
    கோண்மீன் அன்ன பொலங்கலத்து அளைஇ
    ஊண்முறை ஈத்தல் அன்றியும் கோண்முறை
    விருந்திறை நல்கி யோனே அந்தரத்து
    அரும்பெறல் அமிழ்த மன்ன
    கரும்புஇவண் தந்தோன் பெரும்பிறங் கடையே

    ஔவையார்