Tag: புறநானூறு

  • பூவற் படுவிற் கூவல் தோண்டிய

    புறநானூறு

    பூவற் படுவிற் கூவல் தோண்டிய
    செங்கண் சின்னீர் பெய்த சீறில்
    முன்றில் இருந்த முதுவாய்ச் சாடி
    யாம் க·டு உண்டென வறிது மாசின்று
    படலை முன்றிற் சிறுதினை உணங்கல்
    புறவும் இதலும் அறவும் உண்கெனப்
    பெய்தற்கு எல்லின்று பொழுதே அதனால்
    முயல்சுட்ட வாயினும் தருகுவேம் புகுதந்து
    ஈங்குஇருந் தீமோ முதுவாய்ப் பாண
    கொடுங்கோட்டு ஆமான் நடுங்குதலைக் குழவி
    புன்றலைச் சிறாஅர் கன்றெனப் பூட்டும்
    சீறூர் மன்னன் நெருநை ஞாங்கர்
    வேந்துவிடு தொழிலொடு சென்றனன் வந்து நின்
    பாடினி மாலை யணிய
    வாடாத் தாமரை சூட்டுவன் நினக்கே

    ஆலங்குடி வங்கனார்

  • இரும்புமுகம் சிதைய நூறி ஒன்னார்

    புறநானூறு

    இரும்புமுகம் சிதைய நூறி ஒன்னார்
    இருஞ்சமம் கடத்தல் ஏனோர்க்கும் எளிதே
    நல்லரா உறையும் புற்றம் போலவும்
    கொல்ஏறு திரிதரு மன்றம் போலவும்
    மாற்றருந் துப்பின் மாற்றோர் பாசறை
    உளன் என வெரூஉம் ஓர்ஒளி
    வலன்உயர் நெடுவேல் என்னைகண் ணதுவே

    மதுரை இளங்கண்ணிக் கௌசிகனார்

  • கொய்யடகு வாடத் தருவிறகு உணங்க

    புறநானூறு

    கொய்யடகு வாடத் தருவிறகு உணங்க
    மயில்அம் சாயல் மாஅ யோளடு
    பசித்தன்று அம்ம பெருந்தகை ஊரே
    மனைஉறை குரீஇக் கறையணற் சேவல்
    பாணர் நரம்பின் சுகிரொடு வயமான்
    குரல்செய் பீலியின் இழைத்த குடம்பைப்
    பெருஞ்செய் நெல்லின் அரிசி ஆர்ந்து தன்
    புன்புறப் பெடையடு வதியும்
    யாணர்த்து ஆகும் வேந்துவிழு முறினே

    பெருங்குன்றூர் கிழார்

  • அத்தம் நண்ணிய நாடுகெழு பெருவிறல்

    புறநானூறு

    அத்தம் நண்ணிய நாடுகெழு பெருவிறல்
    கைப்பொருள் யாதொன்றும் இலனே நச்சிக்
    காணிய சென்ற இரவன் மாக்கள்
    களிறொடு நெடுந்தேர் வேண்டினும் கடவ
    உப்பொய் சாகாட்டு உமணர் காட்ட
    கழிமுரி குன்றத்து அற்றே
    எள் அமைவு இன்று அவன் உள்ளிய பொருளே

    மாங்குடி மருதனார்

  • மெல்லியல் விறலி நீ நல்லிசை செவியிற்

    புறநானூறு

    மெல்லியல் விறலி நீ நல்லிசை செவியிற்
    கேட்பின் அல்லது காண்பறி யலையே
    காண்டல் சால வேண்டினை யாயின்- மாண்ட நின்
    விரை வளர் கூந்தல் வரைவளி உளரக்
    கலவ மஞ்ஞையின் காண்வர இயலி
    மாரி யன்ன வண்மைத்
    தேர்வேள் ஆயைக் காணிய சென்மே

    உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்

  • போர்க்கு உரைஇப் புகன்று கழித்த வாள்

    புறநானூறு

    போர்க்கு உரைஇப் புகன்று கழித்த வாள்
    உடன்றவர் காப்புடை மதில் அழித்தலின்
    ஊனுற மூழ்கி உருவிழந் தனவே
    வேலே குறும்படைந்த அரண் கடந்தவர்
    நறுங் கள்ளின் நாடு நைத்தலின்
    சுரை தழீஇய இருங் காழொடு
    மடை கலங்கி நிலைதிரிந் தனவே
    களிறே எழூஉத் தாங்கிய கதவம் மலைத்து அவர்
    குழூஉக் களிற்றுக் குறும்பு உடைத்தலின்
    பரூஉப் பிணிய தொடிகழிந் தனவே
    மாவே பரந்தொருங்கு மலைந்த மறவர்
    பொலம் பைந்தார் கெடப் பரிதலின்
    களன் உழந்து அசைஇய மறுக்குளம் பினவே
    அவன் தானும் நிலம் திரைக்கும் கடல் தானைப்
    பொலந் தும்பைக் கழல் பாண்டில்
    கணை பொருத துளைத்தோ லன்னே
    ஆயிடை உடன்றோர் உய்தல் யாவது தடந்தாள்
    பிணிக் கதிர் நெல்லின் செம்மல் மூதூர்
    நுமக்குஉரித்து ஆகல் வேண்டின் சென்றவற்கு
    இறுக்கல் வேண்டும் திறையே மறிப்பின்
    ஒல்வான் அல்லன் வெல்போ ரான் எனச்
    சொல்லவும் தேறீர் ஆயின் மெல்லியல்
    கழற் கனி வகுத்த துணைச் சில் ஓதிக்
    குறுந்தொடி மகளிர் தோள்விடல்
    இறும்பூது அன்று அஃது அறிந்துஆ டுமினே

    ஔவையார்

  • வேந்துகுறை யுறவுங் கொடாஅன் ஏந்துகோட்டு

    புறநானூறு

    வேந்துகுறை யுறவுங் கொடாஅன் ஏந்துகோட்டு
    அம்பூந் தொடலை அணித்தழை அல்குல்
    செம்பொறிச் சிலம்பின் இளையோள் தந்தை
    எழுவிட்டு அமைத்த திண்நிலைக் கதவின்
    அனரமண் இஞ்சி நாட்கொடி நுடங்கும்
    ________________________________________________
    புலிக்கணத் தன்ன கடுங்கண் சுற்றமொடு
    மாற்றம் மாறான் மறலிய சினத்தன்
    பூக்கோள் என ஏஎய்க் கயம்புக் கனனே
    விளங்குஇழைப் பொலிந்த வேளா மெல்லியல்
    சுணங்கணி வனமுலை அவளடு நாளை
    மணம்புகு வைகல் ஆகுதல் ஒன்றோ
    ஆரமர் உழக்கிய மறம்கிளர் முன்பின்
    நீள்இலை எஃகம் மறுத்த உடம்பொடு
    வாரா உலகம் புகுதல் ஒன்று எனப்
    படைதொட் டனனே குருசில் ஆயிடைக்
    களிறுபொரக் கலங்கிய தண்கயம் போலப்
    பெருங்கவின் இழப்பது கொல்லோ
    மென்புனல் வைப்பின்இத் தண்பணை ஊரே

    பரணர்

  • அணித்தழை நுடங்க ஓடி மணிப்பொறிக்

    புறநானூறு

    அணித்தழை நுடங்க ஓடி மணிப்பொறிக்
    குரலம் குன்றி கொள்ளும் இளையோள்
    மாமகள் __________________
    ________லென வினவுதி கேள் நீ
    எடுப்பவெ ________________
    ___________________ மைந்தர் தந்தை
    இரும்பனை அன்ன பெருங்கை யானை
    கரந்தையஞ் செறுவின் பெயர்க்கும்
    பெருந்தகை மன்னர்க்கு வரைந்திருந் தன்னே

  • வியன்புலம் படர்ந்த பல்ஆ நெடுஏறு

    புறநானூறு

    வியன்புலம் படர்ந்த பல்ஆ நெடுஏறு
    மடலை மாண்நிழல் அசைவிடக் கோவலர்
    வீததை முல்லைப் பூப்பறிக் குந்து
    குறுங்கோல் எறிந்த நெடுஞ்செவிக் குறுமுயல்
    நெடுநீர்ப் பரப்பின் வாளையடு உகளுந்து
    தொடலை அல்குல் தொடித்தோள் மகளிர்
    கடல் ஆடிக் கயம் பாய்ந்து
    கழி நெய்தற் பூக் குறூஉந்து
    பைந்தழை துயல்வருஞ் செறுவிறற்
    _______________________________ லத்தி
    வளர வேண்டும் அவளே என்றும்
    ஆரமர் உழப்பதும் அமரிய ளாகி
    முறஞ்செவி யானை வேந்தர்
    மறங்கெழு நெஞ்சங் கொண்டொளித் தோளே

  • ஏர் பரந்த வயல் நீர் பரந்த செறுவின்

    புறநானூறு

    ஏர் பரந்த வயல் நீர் பரந்த செறுவின்
    நெல் மலிந்த மனைப் பொன் மலிந்த மறுகின்
    படுவண்டு ஆர்க்கும் பன்மலர்க் காவின்
    நெடுவேள் ஆதன் போந்தை அன்ன
    பெருஞ்சீர் அருங்கொண் டியளே கருஞ்சினை
    வேம்பும் ஆரும் போந்தையும் மூன்றும்
    மலைந்த சென்னியர் அணிந்த வில்லர்
    கொற்ற வேந்தர் தரினும் தன்தக
    வணங்கார்க்கு ஈகுவன் அல்லன் வண் தோட்டுப்
    பிணங்கு கதிர்க் கழனி நாப்பண் ஏமுற்று
    உணங்குகலன் ஆழியின் தோன்றும்
    ஓர்எயில் மன்னன் ஒருமட மகளே

    குன்றூர் கிழார் மகனார்