Tag: புறநானூறு

  • கெடுக சிந்தை கடிதுஇவள் துணிவே

    புறநானூறு

    கெடுக சிந்தை கடிதுஇவள் துணிவே
    மூதின் மகளிர் ஆதல் தகுமே
    மேல்நாள் உற்ற செருவிற்கு இவள்தன்னை
    யானை எறிந்து களத்துஒழிந் தன்னே
    நெருநல் உற்ற செருவிற்கு இவள்கொழுநன்
    பெருநிரை விலக்கி ஆண்டுப்பட் டனனே
    இன்றும் செருப்பறை கேட்டு விருப்புற்று மயங்கி
    வேல்கைக் கொடுத்து வெளிதுவிரித்து உடீஇப்
    பாறுமயிர்க் குடுமி எண்ணெய் நீவி
    ஒருமகன் அல்லது இல்லோள்
    செருமுக நோக்கிச் செல்க என விடுமே

    ஒக்கூர் மாசாத்தியார்

  • வெண்குடை மதியம் மேல்நிலாத் திகழ்தரக்

    புறநானூறு

    வெண்குடை மதியம் மேல்நிலாத் திகழ்தரக்
    கண்கூடு இறுத்த கடல்மருள் பாசறைக்
    குமரிப்படை தழீஇய கூற்றுவினை ஆடவர்
    தமர்பிறர் அறியா அமர்மயங்கு அழுவத்து
    இறையும் பெயரும் தோற்றி நுமருள்
    நாள்முறை தபுத்தீர் வம்மின் ஈங்கு எனப்
    போர்மலைந்து ஒருசிறை நிற்ப யாவரும்
    அரவுஉமிழ் மணியின் குறுகார்
    நிரைதார் மார்பின்நின் கேள்வனைப் பிறரே

    பெருந்தலைச் சாத்தனார்

  • நரம்புஎழுந்து உலறிய நிரம்பா மென்தோள்

    புறநானூறு

    நரம்புஎழுந்து உலறிய நிரம்பா மென்தோள்
    முளரி மருங்கின் முதியோள் சிறுவன்
    படைஅழிந்து மாறினன் என்று பலர் கூற
    மண்டுஅமர்க்கு உடைந்தனன் ஆயின் உண்டஎன்
    முலைஅறுத் திடுவென் யான் எனச் சினைஇக்
    கொண்ட வாளடு படுபிணம் பெயராச்
    செங்களம் துழவுவோள் சிதைந்துவே றாகிய
    படுமகன் கிடக்கை காணூஉ
    ஈன்ற ஞான்றினும் பெரிதுஉவந் தனளே

    காக்கைபாடினியார்

  • நிறப்புடைக்கு ஒல்கா யானை மேலோன்

    புறநானூறு

    நிறப்புடைக்கு ஒல்கா யானை மேலோன்
    குறும்பர்க்கு எறியும் ஏவல் தண்ணுமை
    நாண்உடை மாக்கட்கு இரங்கும் ஆயின்
    எம்மினும் பேர்எழில் இழந்து வினை எனப்
    பிறர்மனை புகுவள் கொல்லோ
    அளியள் தானே பூவிலைப் பெண்டே

    நொச்சி நியமங்கிழார்

  • மீன்உண் கொக்கின் தூவி அன்ன

    புறநானூறு

    மீன்உண் கொக்கின் தூவி அன்ன
    வால்நரைக் கூந்தல் முதியோள் சிறுவன்
    களிறுஎறிந்து பட்டனன் என்னும் உவகை
    ஈன்ற ஞான்றினும் பெரிதே கண்ணீர்
    நோன்கழை துயல்வரும் வெதிரத்து
    வான்பெயத் தூங்கிய சிதரினும் பலவே

    பூங்கணுத்திரையார்

  • வேந்தற்கு ஏந்திய தீந்தண் நறவம்

    புறநானூறு

    வேந்தற்கு ஏந்திய தீந்தண் நறவம்
    யாம்தனக்கு உறுமறை வளாவ விலக்கி
    வாய்வாள் பற்றி நின்றனென் என்று
    சினவல் ஓம்புமின் சிறுபுல் லாளர்
    ஈண்டே போல வேண்டுவன் ஆயின்
    என்முறை வருக என்னான் கம்மென
    எழுதரு பெரும்படை விலக்கி
    ஆண்டு நிற்கும் ஆண்தகை யன்னே

    விரிச்சியூர் நன்னாகனார்

  • சிறாஅஅர் துடியர் பாடுவல் மகாஅஅர்

    புறநானூறு

    சிறாஅஅர் துடியர் பாடுவல் மகாஅஅர்
    தூவெள் அறுவை மாயோற் குறுகி
    இரும்புள் பூசல் ஓம்புமின் யானும்
    விளரிக் கொட்பின் வெண்ணரி கடிகுவென்
    என்போற் பெருவிதுப்பு உறுக வேந்தே
    கொன்னும் சாதல் வெய்யோற்குத் தன்தலை
    மணிமருள் மாலை சூட்டி அவன் தலை
    ஒருகாழ் மாலை தான்மலைந் தனனே

    நெடுங்கழுத்துப் பரணர்

  • இவற்குஈந்து உண்மதி கள்ளே சினப்போர்

    புறநானூறு

    இவற்குஈந்து உண்மதி கள்ளே சினப்போர்
    இனக்களிற்று யானை இயல்தேர்க் குருசில்
    நுந்தை தந்தைக்கு இவன்தந்தை தந்தை
    எடுத்துஎறி ஞாட்பின் இமையான் தச்சன்
    அடுத்துஎறி குறட்டின் நின்று மாய்ந் தனனே
    மறப்புகழ் நிறைந்த மைந்தினோன் இவனும்
    உறைப்புழி ஓலை போல
    மறைக்குவன் பெரும நிற் குறித்துவரு வேலே

    ஔவையார்

  • ஈரச் செவ்வி உதவின ஆயினும்

    புறநானூறு

    ஈரச் செவ்வி உதவின ஆயினும்
    பல்எருத் துள்ளும் நல் எருது நோக்கி
    வீறுவீறு ஆயும் உழவன் போலப்
    பீடுபெறு தொல்குடிப் பாடுபல தங்கிய
    மூதி லாளர் உள்ளும் காதலின்
    தனக்கு முகந்து ஏந்திய பசும்பொன் மண்டை
    இவற்கு ஈக என்னும் அதுவும்அன் றிசினே
    கேட்டியோ வாழி பாண பாசறைப்
    பூக்கோள் இன்று என்று அறையும்
    மடிவாய்த் தண்ணுமை இழிசினன் குரலே

    கழாத்தலையார்

  • மண்கொள வரிந்த வைந்நுதி மறுப்பின்

    புறநானூறு

    மண்கொள வரிந்த வைந்நுதி மறுப்பின்
    அண்ணல் நல்ஏறு இரண்டு உடன் மடுத்து
    வென்றதன் பச்சை சீவாது போர்த்த
    திண்பிணி முரசம் இடைப்புலத்து இரங்க
    ஆர்அமர் மயங்கிய ஞாட்பின் தெறுவர
    நெடுவேல் பாய்ந்த நாணுடை நெஞ்சத்து
    அருகுகை மன்ற
    குருதியடு துயல்வரும் மார்பின்
    முயக்கிடை ஈயாது மொய்த்தன பருந்தே

    கழாத்தலையார்