Tag: புறநானூறு

  • செருப்புஇடைச் சிறுபரல் அன்னன் கணைக்கால்

    புறநானூறு

    செருப்புஇடைச் சிறுபரல் அன்னன் கணைக்கால்
    அவ்வயிற்று அகன்ற மார்பின் பைங்கண்
    குச்சின் நிரைத்த குரூஉமயிர் மோவாய்ச்
    செவிஇறந்து தாழ்தரும் கவுளன் வில்லொடு
    யார்கொலோ அளியன் தானே தேரின்
    ஊர்பெரிது இகந்தன்றும் இலனே அரண்எனக்
    காடுகைக் கொண்டன்றும் இலனே காலைப்
    புல்லார் இனநிரை செல்புறம் நோக்கிக்
    கையின் சுட்டிப் பைஎன எண்ணிச்
    சிலையின் மாற்றி யோனே அவைதாம்
    மிகப்பல ஆயினும் என்னாம்-எனைத்தும்
    வெண்கோள் தோன்றாக் குழிசியடு
    நாள்உறை மத்தொலி கேளா தோனே

  • நீலக் கச்சைப் பூவார் ஆடைப்

    புறநானூறு

    நீலக் கச்சைப் பூவார் ஆடைப்
    பீலிக் கண்ணிப் பெருந்தகை மறவன்
    மேல்வரும் களிற்றொடு வேல்துரந்து இனியே
    தன்னும் துரக்குவன் போலும் ஒன்னலர்
    எஃகுடை வலத்தர் மாவொடு பரத்தரக்
    கையின் வாங்கித் தழீஇ
    மொய்ம்பின் ஊக்கி மெய்க்கொண் டனனே

    உலோச்சனார்

  • கலம்செய் கோவே கலம்செய் கோவே

    புறநானூறு

    கலம்செய் கோவே கலம்செய் கோவே
    அச்சுடைச் சாகாட்டு ஆரம் பொருந்திய
    சிறுவெண் பல்லி போலத் தன்னொடு
    சுரம்பல வந்த எமக்கும் அருளி
    வியன்மலர் அகன்பொழில் ஈமத் தாழி
    அகலிது ஆக வனைமோ
    நனந்தலை மூதூர்க் கலம்செய் கோவே

  • மாவா ராதே மாவா ராதே

    புறநானூறு

    மாவா ராதே மாவா ராதே
    எல்லார் மாவும் வந்தன எம்இல்
    புல்லுளைக் குடுமிப் புதல்வற் றந்த
    செல்வன் ஊரும் மாவா ராதே
    இருபேர் யாற்ற ஒருபெருங் கூடல்
    விலங்கிடு பெருமரம் போல
    உலந்தன்று கொல் அவன் மலைந்த மாவே

    எருமை வெளியனார்

  • ஐயோ எனின்யான் புலி அஞ்சுவலே

    புறநானூறு

    ஐயோ எனின்யான் புலி அஞ்சுவலே
    அணைத்தனன் கொளினே அகன்மார்பு எடுக்கல்லேன்
    என்போல் பெருவிதிர்ப்பு உறுக நின்னை
    இன்னாது உற்ற அறனில் கூற்றே
    திரைவளை முன்கை பற்றி
    வரைநிழல் சேர்கம் நடந்திசின் சிறிதே

    வன்பரணர்

  • மணிதுணர்ந் தன்ன மாக்குரல் நொச்சி

    புறநானூறு

    மணிதுணர்ந் தன்ன மாக்குரல் நொச்சி
    போதுவிரி பன்மர னுள்ளும் சிறந்த
    காதல் நன்மரம் நீ நிழற் றிசினே
    கடியுடை வியன்நகர்க் காண்வரப் பொலிந்த
    தொடியுடை மகளிர் அல்குலும் கிடத்தி
    காப்புடைப் புரிசை புக்குமாறு அழித்தலின்
    ஊர்ப்புறம் கொடாஅ நெடுந்தகை
    பீடுகெழு சென்னிக் கிழமையும் நினதே

    மோசிசாத்தனார்

  • நீரறவு அறியா நிலமுதற் கலந்த

    புறநானூறு

    நீரறவு அறியா நிலமுதற் கலந்த
    கருங்குரல் நொச்சிக் கண்ணார் குரூஉத்தழை
    மெல்இழை மகளிர் ஐதகல் அல்குல்
    தொடலை ஆகவும் கண்டனம் இனியே
    வெருவரு குருதியடு மயங்கி உருவுகரந்து
    ஒறுவாய்ப் பட்ட தெரியல் ஊன்செத்துப்
    பருந்துகொண்டு உகப்பயாம் கண்டனம்
    மறம்புகல் மைந்தன் மலைந்த மாறே

    காமக்கண்ணியார்

  • பன்மீன் இமைக்கும் மாக விசும்பின்

    புறநானூறு

    பன்மீன் இமைக்கும் மாக விசும்பின்
    இரங்கு முரசின் இனம்சால் யானை
    நிலந்தவ உருட்டிய நேமி யோரும்
    சமங்கண் கூடித் தாம்வேட் பவ்வே
    நறுவிரை துறந்த நாறா நரைத்தலைச்
    சிறுவர் தாயே பேரிற் பெண்டே
    நோகோ யானே நோக்குமதி நீயே
    மறப்படை நுவலும் அரிக்குரல் தண்ணுமை
    இன்னிசை கேட்ட துன்னரும் மறவர்
    வென்றிதரு வேட்கையர் மன்றம் கொண்மார்
    பேரமர் உழந்த வெருவரு பறந்தலை
    விழுநவி பாய்ந்த மரத்தின்
    வாண்மிசைக் கிடந்த ஆண்மையோன் திறத்தே

    கழாத்தலையார்

  • குயில்வாய் அன்ன கூர்முகை அதிரல்

    புறநானூறு

    குயில்வாய் அன்ன கூர்முகை அதிரல்
    பயிலாது அல்கிய பல்காழ் மாலை
    மையிரும் பித்தை பொலியச் சூட்டிப்
    புத்தகல் கொண்ட புலிக்கண் வெப்பர்
    ஒன்றுஇரு முறையிருந்து உண்ட பின்றை
    உவலைக் கண்ணித் துடியன் வந்தெனப்
    பிழிமகிழ் வல்சி வேண்ட மற்றிது
    கொள்ளாய் என்ப கள்ளின் வாழ்த்திக்
    கரந்தை நீடிய அறிந்துமாறு செருவின்
    பல்லான் இனநிரை தழீஇய வில்லோர்க்
    கொடுஞ்சிறைக் குரூஉப்பருந்து ஆர்ப்பத்
    தடிந்துமாறு பெயர்த்தது இக் கருங்கை வாளே

    ஔவையார்

  • பயங்கெழு மாமழை பெய்யாது மாறிக்

    புறநானூறு

    பயங்கெழு மாமழை பெய்யாது மாறிக்
    கயங்களி முளியும் கோடை ஆயினும்
    புழற்கால் ஆம்பல் அகலடை நீழல்
    கதிர்கோட்டு நந்தின் கரிமுக ஏற்றை
    நாகுஇள வளையடு பகல்மணம் புகூஉம்
    நீர்திகழ் கழனி நாடுகெழு பெருவிறல்
    வான்தோய் நீள்குடை வயமான் சென்னி
    சான்றோர் இருந்த அவையத்து உற்றோன்
    ஆசாகு என்னும் பூசல்போல
    வல்லே களைமதி அத்தை உள்ளிய
    விருந்துகண்டு ஒளிக்கும் திருந்தா வாழ்க்கைப்
    பொறிப்புணர் உடம்பில் தோன்றிஎன்
    அறிவுகெட நின்ற நல்கூர் மையே

    பெருங்குன்றூர் கிழார்