Tag: புறநானூறு

  • இளையரும் முதியரும் வேறுபுலம் படர

    புறநானூறு

    இளையரும் முதியரும் வேறுபுலம் படர
    எதிர்ப்ப எழாஅய் மார்பமண் புல்ல
    இடைச்சுரத்து இறுத்த மள்ள விளர்த்த
    வளையில் வறுங்கை ஓச்சிக் கிளையுள்
    இன்னன் ஆயினன் இளையோன் என்று
    நின்னுரை செல்லும் ஆயின் மற்று
    முன்ஊர்ப் பழுனிய கோளி ஆலத்துப்
    புள்ளார் யாணர்த் தற்றே என் மகன்
    வளனும் செம்மலும் எமக்கு என நாளும்
    ஆனாது புகழும் அன்னை
    யாங்குஆ குவள்கொல் அளியள் தானே

    கயமனார்

  • நீடுவாழ்க என்று யான் நெடுங்கடை குறுகிப்

    புறநானூறு

    நீடுவாழ்க என்று யான் நெடுங்கடை குறுகிப்
    பாடி நின்ற பசிநாட் கண்ணே
    கோடைக் காலத்துக் கொழுநிழல் ஆகிப்
    பொய்த்தல் அறியா உரவோன் செவிமுதல்
    வித்திய பனுவல் விளைந்தன்று நன்று என
    நச்சி இருந்த நசைபழுது ஆக
    அட்ட குழிசி அழற்பயந் தாஅங்கு
    அளியர் தாமே ஆர்க என்னா
    அறன்இல் கூற்றம் திறனின்று துணிய
    ஊழின் உருப்ப எருக்கிய மகளிர்
    வாழைப் பூவின் வளைமுறி சிதற
    முதுவாய் ஒக்கல் பரிசிலர் இரங்கக்
    கள்ளி போகிய களரியம் பறந்தலை
    வெள்வேல் விடலை சென்றுமாய்ந் தனனே
    ஆங்கு அது நோயின்று ஆக ஓங்குவரைப்
    புலிபார்த்து ஒற்றிய களிற்றுஇரை பிழைப்பின்
    எலிபார்த்து ஒற்றாது ஆகும் மலி திரைக்
    கடல்மண்டு புனலின் இழுமெனச் சென்று
    நனியுடைப் பரிசில் தருகம்
    எழுமதி நெஞ்சே துணிபுமுந் துறுத்தே

    பெருஞ்சித்திரனார்

  • என்திறத்து அவலம் கொள்ளல் இனியே

    புறநானூறு

    என்திறத்து அவலம் கொள்ளல் இனியே
    வல்வார் கண்ணி இளையர் திளைப்ப
    நாகாஅல் என வந்த மாறே எழாநெல்
    பைங்கழை பொதிகளைந்து அன்ன விளர்ப்பின்
    வளைஇல் வறுங்கை ஓச்சிக்
    கிளையுள்ஒய்வலோ கூறுநின் உரையே

    குளம்பாதாயனார்

  • கலைஉணக் கிழிந்த முழவுமருள் பெரும்பழம்

    புறநானூறு

    கலைஉணக் கிழிந்த முழவுமருள் பெரும்பழம்
    சிலைகெழு குறவர்க்கு அல்குமிசைவு ஆகும்
    மலை கெழு நாட மா வண் பாரி
    கலந்த கேண்மைக்கு ஒவ்வாய் நீ எற்
    புலந்தனை யாகுவை புரந்த யாண்டே
    பெருந்தகு சிறப்பின் நட்பிற்கு ஒல்லாது
    ஒருங்குவரல் விடாஅது ஒழிக எனக்கூறி
    இனையை ஆதலின் நினக்கு மற்றுயான்
    மேயினேன் அன்மை யானே ஆயினும்
    இம்மை போலக் காட்டி உம்மை
    இடையில் காட்சி நின்னோடு
    உடன்உறைவு ஆக்குக உயர்ந்த பாலே

    கபிலர்

  • கறங்குவெள் அருவி ஏற்றலின் நிறம் பெயர்ந்து

    புறநானூறு

    கறங்குவெள் அருவி ஏற்றலின் நிறம் பெயர்ந்து
    தில்லை அன்ன புல்லென் சடையோடு
    அள்இலைத் தாளி கொய்யு மோனே
    இல்வழங்கு மடமயில் பிணிக்கும்
    சொல்வலை வேட்டுவன் ஆயினன் முன்னே

    மாற்பித்தியார்

  • சிறியகட் பெறினே எமக்கீயும் மன்னே

    புறநானூறு

    சிறியகட் பெறினே எமக்கீயும் மன்னே
    பெரிய கட் பெறினே
    யாம் பாடத் தான்மகிழ்ந்து உண்ணும் மன்னே
    சிறுசோற் றானும் நனிபல கலத்தன் மன்னே
    பெருஞ்சோற்றானும் நனிபல கலத்தன் மன்னே
    என்பொடு தடிபடு வழியெல்லாம் எமக்கீயும் மன்னே
    அம்பொடு வேல்நுழை வழியெல்லாம் தான்நிற்கும் மன்னே
    நரந்தம் நாறும் தன் கையால்
    புலவு நாறும் என்தலை தைவரும் மன்னே
    அருந்தலை இரும்பாணர் அகன்மண்டைத் துளையுரீஇ
    இரப்போர் புன்கண் பாவை சோர
    அஞ்சொல் நுண்தேர்ச்சிப் புலவர் நாவில்
    சென்றுவீழ்ந் தன்று அவன்
    அருநிறத்து இயங்கிய வேலே
    ஆசாகு எந்தை யாண்டுஉளன் கொல்லோ
    இனிப் பாடுநரும் இல்லை படுநர்க்குஒன்று ஈகுநரும் இல்லை
    பனித்துறைப் பகன்றை நறைக் கொள் மாமலர்
    சூடாது வைகியாங்குப் பிறர்க்கு ஒன்று
    ஈயாது வீயும் உயிர்தவப் பலவே

    ஔவையார்

  • குயில்வாய் அன்ன கூர்முகை அதிரல்

    புறநானூறு

    குயில்வாய் அன்ன கூர்முகை அதிரல்
    பயிலாது அல்கிய பல்காழ் மாலை
    மையிரும் பித்தை பொலியச் சூட்டிப்
    புத்தகல் கொண்ட புலிக்கண் வெப்பர்
    ஒன்றுஇரு முறையிருந்து உண்ட பின்றை
    உவலைக் கண்ணித் துடியன் வந்தெனப்
    பிழிமகிழ் வல்சி வேண்ட மற்றிது
    கொள்ளாய் என்ப கள்ளின் வாழ்த்திக்
    கரந்தை நீடிய அறிந்துமாறு செருவின்
    பல்லான் இனநிரை தழீஇய வில்லோர்க்
    கொடுஞ்சிறைக் குரூஉப்பருந்து ஆர்ப்பத்
    தடிந்துமாறு பெயர்த்தது இக் கருங்கை வாளே

    ஔவையார்

  • பயங்கெழு மாமழை பெய்யாது மாறிக்

    புறநானூறு

    பயங்கெழு மாமழை பெய்யாது மாறிக்
    கயங்களி முளியும் கோடை ஆயினும்
    புழற்கால் ஆம்பல் அகலடை நீழல்
    கதிர்கோட்டு நந்தின் கரிமுக ஏற்றை
    நாகுஇள வளையடு பகல்மணம் புகூஉம்
    நீர்திகழ் கழனி நாடுகெழு பெருவிறல்
    வான்தோய் நீள்குடை வயமான் சென்னி
    சான்றோர் இருந்த அவையத்து உற்றோன்
    ஆசாகு என்னும் பூசல்போல
    வல்லே களைமதி அத்தை உள்ளிய
    விருந்துகண்டு ஒளிக்கும் திருந்தா வாழ்க்கைப்
    பொறிப்புணர் உடம்பில் தோன்றிஎன்
    அறிவுகெட நின்ற நல்கூர் மையே

    பெருங்குன்றூர் கிழார்

  • ஊர்நனி இறந்த பார்முதிர் பறந்தலை

    புறநானூறு

    ஊர்நனி இறந்த பார்முதிர் பறந்தலை
    ஓங்குநிலை வேங்கை ஒள்ளிணர் நறுவீப்
    போந்தை அம் தோட்டின் புனைந்தனர் தொடுத்துப்
    பல்ஆன் கோவலர் படலை சூட்டக்
    கல்ஆ யினையே-கடுமான் தோன்றல்
    வான்ஏறு புரையும்நின் தாள்நிழல் வாழ்க்கைப்
    பரிசிலர் செல்வம் அன்றியும் விரிதார்க்
    கடும்பகட்டு யானை வேந்தர்
    ஒடுங்க வென்றியும் நின்னொடு செலவே

    சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார்

  • பரலுடை மருங்கிற் பதுக்கை சேர்த்தி

    புறநானூறு

    பரலுடை மருங்கிற் பதுக்கை சேர்த்தி
    மரல்வகுந்து தொடுத்த செம்பூங் கண்ணியடு
    அணிமயிற் பீலி சூட்டிப் பெயர்பொறித்து
    இனிநட் டனரே கல்லும் கன்றொடு
    கறவை தந்து பகைவர் ஓட்டிய
    நெடுந்தகை கழிந்தமை அறியாது
    இன்றும் வருங்கொல் பாணரது கடும்பே

    உறையூர் இளம்பொன் வாணிகனார்