Tag: புறநானூறு

  • நுங்கோ யார் வினவின் எங்கோக்

    புறநானூறு

    நுங்கோ யார் வினவின் எங்கோக்
    களமர்க்கு அரித்த விளையல் வெங்கள்
    யாமைப் புழுக்கின் காமம் வீடஆரா
    ஆரற் கொழுஞ்சூடு அங்கவுள் அடாஅ
    வைகுதொழின் மடியும் மடியா விழவின்
    யாணர் நல்நாட் டுள்ளும் பாணர்
    பைதல் சுற்றத்துப் பசிப்பகை யாகிக்
    கோழி யோனே கோப்பெருஞ் சோழன்
    பொத்தில் நண்பின் பொத்தியடு கெழீஇ
    வாயார் பெருநகை வைகலும் நமக்கே

    பிசிராந்தையார்

  • ஒல்லுவது ஒல்லும் என்றலும் யாவர்க்கும்

    புறநானூறு

    ஒல்லுவது ஒல்லும் என்றலும் யாவர்க்கும்
    ஒல்லாது இல்லென மறுத்தலும் இரண்டும்
    ஆள்வினை மருங்கின் கேண்மைப் பாலே
    ஒல்லாது ஒல்லும் என்றலும் ஒல்லுவது
    இல்லென மறுத்தலும் இரண்டும் வல்லே
    இரப்போர் வாட்டல் அன்றியும் புரப்போர்
    புகழ்குறை படூஉம் வாயில் அத்தை
    அனைத்தா கியர் இனி இதுவே எனைத்தும்
    சேய்த்துக் காணாது கண்டனம் அதனால்
    நோயிலர் ஆகநின் புதல்வர் யானும்
    வெயிலென முனியேன் பனியென மடியேன்
    கல்குயின் றன்னஎன் நல்கூர் வளிமறை
    நாணலது இல்லாக் கற்பின் வாணுதல்
    மெல்லியல் குறுமகள் உள்ளிச்
    செல்வல் அத்தை சிறக்க நின் நாளே

    ஆவூர் மூலங்கிழார்

  • அஞ்சுவரு மரபின் வெஞ்சினப் புயலேறு

    புறநானூறு

    அஞ்சுவரு மரபின் வெஞ்சினப் புயலேறு
    அணங்குடை அரவின் அருந்தலை துமிய
    நின்றுகாண் பன்ன நீள்மலை மிளிரக்
    குன்றுதூவ எறியும் அரவம் போல
    முரசு எழுந்து இரங்கும் தானையோடு தலைச்சென்று
    அரைசுபடக் கடக்கும் உரைசால் தோன்றல் நின்
    உள்ளி வந்த ஓங்குநிலைப் பரிசிலென்
    வள்ளியை ஆதலின் வணங்குவன் இவன் எனக்
    கொள்ளா மாந்தர் கொடுமை கூற நின்
    உள்ளியது முடிந்தோய் மன்ற முன்னாள்
    கையுள் ளதுபோல் காட்டி வழிநாள்
    பொய்யடு நின்ற புறநிலை வருத்தம்
    நாணாய் ஆயினும் நாணக் கூறி என்
    நுணங்கு செந்நா அணங்க ஏத்திப்
    பாடப் பாடப் பாடுபுகழ் கொண்டநின்
    ஆடுகொள் வியன்மார்பு தொழுதெனன் பழிச்சிச்
    செல்வல் அத்தை யானே வைகலும்
    வல்சி இன்மையின் வயின்வயின் மாறி
    இல்எலி மடிந்த தொல்சுவர் வரைப்பின்
    பாஅல் இன்மையின் பல்பாடு சுவைத்து
    முலைக்கோள் மறந்த புதல்வனொடு
    மனைத் தொலைந்திருந் தவென்வாள் நுதற் படர்ந்தே

    பெருங்குன்றூர் கிழார்

  • மன்பதை காக்கும்நின் புரைமை நோக்காது

    புறநானூறு

    மன்பதை காக்கும்நின் புரைமை நோக்காது
    அன்புகண் மாறிய அறனில் காட்சியடு
    நும்ம னோரும்மற்று இனையர் ஆயின்
    எம்மனோர் இவண் பிறவலர் மாதோ
    செயிர்தீர் கொள்கை எம்வெங் காதலி
    உயிர்சிறிது உடையள் ஆயின் எம்வயின்
    உள்ளாது இருத்தலோ அரிதே அதனால்
    அறனில் கூற்றம் திறனின்று துணியப்
    பிறனா யினன்கொல் இறீஇயர் என் உயிர்` என
    நுவல்வுறு சிறுமையள் பலபுலந்து உறையும்
    இடுக்கண் மனையோள் தீரிய இந்நிலை
    விடுத்தேன் வாழியர் குருசில் உதுக்காண்
    அவல நெஞ்சமொடு செல்வல் நிற் கறுத்தோர்
    அருங்கடி முனையரண் போலப்
    பெருங்கை யற்றஎன் புலம்புமுந் துறத்தே

    பெருங்குன்றூர் கிழார்

  • பொய்கை நாரை போர்வில் சேக்கும்

    புறநானூறு

    பொய்கை நாரை போர்வில் சேக்கும்
    நெய்தல்அம் கழனி நெல்அரி தொழுவர்
    கூம்புவிடு மெய்பிணி அவிழ்ந்த ஆம்பல்
    அகல் அடை அரியல் மாந்திக் தெண்கடல்
    படுதிரை இன்சீர்ப் பாணி தூங்கும்
    மென்புல வைப்பின் நன்னாட்டுப் பொருந
    பல்கனி நசைஇ அல்கு விசும்பு உகத்து
    பெருமலை விடர்அகம் சிலம்ப முன்னிப்
    பழனுடைப் பெருமரம் தீர்ந்தெனக் கையற்றுப்
    பெறாது பெயரும் புள்ளினம் போல நின்
    நசைதர வந்து நின்இசை நுவல் பரிசிலென்
    வறுவியேன் பெயர்கோ வாள்மேம் படுந
    ஈயாய் ஆயினும் இரங்குவென் அல்லேன்
    நோயிலை ஆகுமதி பெரும நம்முள்
    குறுநணி காண்குவ தாக நாளும்
    நறும்பல் ஒலிவரும் கதுப்பின் தேமொழித்
    தெரியிழை அன்ன மார்பின்
    செருவெம் சேஎய் நின் மகிழ்இரு க்கையே

    பெருந்தலைச் சாத்தனார்

  • குன்றும் மலையும் பலபின் ஒழிய

    புறநானூறு

    குன்றும் மலையும் பலபின் ஒழிய
    வந்தனென் பரிசில் கொண்டனென் செலற்கு என
    நின்ற என்நயந்து அருளி ஈது கொண்டு
    ஈங்கனம் செல்க தான் என என்னை
    யாங்குஅறிந் தனனோ தாங்கரும் காவலன்
    காணாது ஈத்த இப்பொருட்கு யானோர்
    வாணிகப் பரிசிலன் அல்லேன் பேணித்
    தினை அனைத்து ஆயினும் இனிதுஅவர்
    துணை அளவு அறிந்து நல்கினர் விடினே

    பெருஞ்சித்திரனார்

  • எழுஇனி நெஞ்சம் செல்கம் யாரோ

    புறநானூறு

    எழுஇனி நெஞ்சம் செல்கம் யாரோ
    பருகு அன்ன வேட்கை இல்அழி
    அருகிற் கண்டும் அறியார் போல
    அகம்நக வாரா முகன்அழி பரிசில்
    தாள்இலாளர் வேளார் அல்லர்
    வருகென வேண்டும் வரிசை யோர்க்கே
    பெரிதே உலகம் பேணுநர் பலரே
    மீளி முன்பின் ஆளி போல
    உள்ளம் உள்அவிந்து அடங்காது வெள்ளென
    நோவா தோன்வயின் திரங்கி
    வாயா வன்கனிக்கு உலமரு வோரே

    பெருஞ்சித்திரனார்

  • அழல் அவிர் வயங்கிழைப் பொலிந்த மேனி

    புறநானூறு

    அழல் அவிர் வயங்கிழைப் பொலிந்த மேனி
    நிழலினும் போகா நின் வெய்யோள் பயந்த
    புகழ்சால் புதல்வன் பிறந்தபின் வா என
    என்இவண் ஒழித்த அன்பி லாள
    எண்ணாது இருக்குவை அல்லை
    என்னிடம் யாது மற்று இசைவெய் யோயே

    பொத்தியார்

  • பாடுநர்க்கு ஈத்த பல்புக ழன்னே

    புறநானூறு

    பாடுநர்க்கு ஈத்த பல்புக ழன்னே
    ஆடுநர்க்கு ஈத்த பேரன் பினனே
    அறவோர் புகழ்ந்த ஆய்கோ லன்னே
    திறவோர் புகழ்ந்த தின்நண் பினனே
    மகளிர் சாயல் மைந்தர்க்கு மைந்து
    துகளறு கேள்வி உயர்ந்தோர் புக்கில்
    அனையன் என்னாது அத்தக் கோனை
    நினையாக் கூற்றம் இன்னுயிர் உய்த்த்ன்று
    பைதல் ஒக்கல் தழீஇ அதனை
    வைகம் வம்மோ வாய்மொழிப் புலவீர்
    நனந்தலை உலகம் அரந்தை தூங்கக்
    கெடுவில் நல்லிசை சூடி
    நடுகல் ஆயினன் புரவலன் எனவே

    பொத்தியார்

  • பெருங்சோறு பயந்து பல்யாண்டு புரந்த

    புறநானூறு

    பெருங்சோறு பயந்து பல்யாண்டு புரந்த
    பெருங்களிறு இழந்த பைதற் பாகன்
    அதுசேர்ந்து அல்கிய அழுங்கல் ஆலை
    வெளில்பாழ் ஆகக் கண்டு கலுழ்ந்தாங்குக்
    கலங்கினேன் அல்லனோ யானே-பொலந்தார்த்
    தேர்வண் கிள்ளி போகிய
    பேரிசை மூதூர் மன்றங் கண்டே

    பொத்தியார்