புறநானூறு
நன் றாய்ந்த நீள் நிமிர்சடை
முது முதல்வன் வாய் போகாது
ஒன்று புரிந்த ஈரி ரண்டின்
ஆறுணர்ந்த ஒரு முதுநூல்
இகல் கண்டோர் மிகல் சாய்மார்
மெய் அன்ன பொய் உணர்ந்து
பொய் ஓராது மெய் கொளீஇ
மூவேழ் துறைபும் முட்டின்று போகிய
உரைசால் சிறப்பின் உரவோர் மருக
வினைக்கு வேண்டி நீ பூண்ட
புலப் புல்வாய்க் கலைப் பச்சை
சுவல் பூண்ஞான் மிசைப் பொலிய
மறம் கடிந்த அருங் கற்பின்
அறம் புகழ்ந்த வலை சூடிச்
சிறு நுதல் பேர் அகல் அல்குல்
சில சொல்லின் பல கூந்தல் நின்
நிலைக் கொத்தநின் துணைத் துணைவியர்
தமக்கு அமைந்த தொழில் கேட்பக்
காடு என்றா நாடுஎன்று ஆங்கு
ஈரேழின் இடம் முட்டாது
நீர் நாண நெய் வழங்கியும்
எண் நாணப் பல வேட்டும்
மண் நாணப் புகழ் பரப்பியும்
அருங் கடிப் பெருங் காலை
விருந்து உற்றநின் திருந்து ஏந்துநிலை
என்றும் காண்கதில் அம்ம யாமே குடாஅது
பொன்படு நெடுவரைப் புயல்ஏறு சிலைப்பின்
பூவிரி புதுநீர்க் காவிரி புரக்கும்
தண்புனற் படப்பை எம்மூர் ஆங்கண்
உண்டும் தின்றும் ஊர்ந்தும் ஆடுகம்
செல்வல் அத்தை யானே செல்லாது
மழைஅண் ணாப்ப நீடிய நெடுவரைக்
கழைவளர் இமயம்போல
நிலீஇயர் அத்தை நீ நிலமிசை யானே
ஆவூர் மூலங் கிழார்