புறநானூறு
நீண்டொலி அழுவம் குறைய முகந்துகொண்டு
ஈண்டுசெலல் கொண்மூ வேண்டுவயின் குழீஇப்
பெருமலை யன்ன தோன்றுதல் சூன்முதிர்பு
உரும்உரறு கருவியடு பெயல்கடன் இறுத்து
வள்மலை மாறிய என்றூழ்க் காலை
மன்பதை யெல்லாம் சென்றுணர் கங்கைக்
கரைபொரு மலிநீர் நிறைந்து தோன்றியாங்கு
எமக்கும் பிறர்க்கும் செம்மலை யாகலின்
அன்பில் ஆடவர் கொன்று ஆறு கவரச்
சென்று தலைவருந அல்ல அன்பின்று
வன்கலை தெவிட்டும் அருஞ்சுரம் இறந்தோர்க்கு
இற்றை நாளடும் யாண்டுதலைப் பெயர் எனக்
கண் பொறி போகிய கசிவொடு உரன்அழிந்து
அருந்துயர் உழக்கும்என் பெருந்துன் புறுவி நின்
தாள்படு செல்வம் காண்டொறும் மருளப்
பனைமருள் தடக்கை யடு முத்துப்படு முற்றிய
உயர்மருப்பு ஏந்திய வரைமருள் நோன்பகடு
ஒளிதிகழ் ஓடை பொலிய மருங்கில்
படுமணி இரட்ட ஏறிச் செம்மாந்து
செலல்நசைஇ உற்றனென் விறல்மிகு குருசில்
இன்மை துரப்ப இசைதர வந்து நின்
வண்மையில் தொடுத்தஎன் நயந்தினை கேண்மதி
வல்லினும் வல்லேன் ஆயினும் வல்லே
என்அளந்து அறிந்தனை நோக்காது சிறந்த
நின் அளந்து அறிமதி பெரும என்றும்
வேந்தர் நாணப் பெயர்வேன் சாந்தருந்திப்
பல்பொறிக் கொண்ட ஏந்துஎழில் அகலம்
மாண்இழை மகளிர் புல்லுதொறும் புகல
நாள்முரசு இரங்கும் இடனுடை வரைப்பின்நின்
தாள்நிழல் வாழ்நர் நண்கலம் மிகுப்ப
வாள் அமர் உயர்ந்தநின் தானையும்
சீர்மிகு செல்வமும் ஏந்துகம் பலவே
பெருஞ்சித்திரனார்