புறநானூறு
கொடுவரி வழங்கும் கோடுயர் நெடுவரை
அருளிடர்ச் சிறுநெறி ஏறலின் வருந்தித்
தடவரல் கொண்ட தகைமெல் ஒதுக்கின்
வளைக்கை விறலியென் பின்னள் ஆகப்
பொன்வார்ந் தன்ன புரிஅடங்கு நரம்பின்
வரிநவில் பனுவல் புலம்பெயர்ந்து இசைப்பப்
படுமலை நின்ற பயங்கெழு சீறியாழ்
ஒல்கல் உள்ளமொடு ஒருபுடைத் தழீஇப்
புகழ்சால் சிறப்பின்நின் நல்லிசை உள்ளி
வந்தெனன் எந்தை யானே யென்றும்
மன்றுபடு பரிசிலர்க் காணின் கன்றொடு
கறையடி யானை இரியல் போக்கும்
மலைகெழு நாடன் மாவேள் ஆஅய்
களிறும் அன்றே மாவும் அன்றே
ஒளிறுபடைப் புரவிய தேரும் அன்றே
பாணர் படுநர்பரிசிலர் ஆங்கவர்
தமதெனத் தொடுக்குவர் ஆயின் எமதெனப்
பற்றல் தேற்றாப் பயங்கெழு தாயமொடு
அன்ன வாக நின் ஊழி நின்னைக்
காண்டல் வேண்டிய அளவை வேண்டார்
உறுமுரண் கடந்த ஆற்றல்
பொதுமீக் கூற்றத்து நாடுகிழ வோயே
உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்