Tag: வெண்பா

  • சிலையுலாய் நிமிர்ந்த சாந்துபடு மார்பின்

    புறநானூறு

    சிலையுலாய் நிமிர்ந்த சாந்துபடு மார்பின்
    ஒலிபுனற் கழனி வெண்குடைக் கிழவோன்
    வலிதுஞ்சு தடக்கை வாய்வாள் குட்டுவன்
    வள்ளிய னாதல் வையகம் புகழினும்
    உள்ளல் ஓம்புமின் உயர்மொழிப் புலவீர்
    யானும் இருள்நிலாக் கழிந்த பகல்செய் வைகறை
    ஒருகண் மாக்கிணை தெளிர்ப்ப ஒற்றிப்
    பாடுஇமிழ் முரசின் இயல்தேர்த் தந்தை
    வாடா வஞ்சி பாடினேன் ஆக
    அகமலி உவகையடு அணுகல் வேண்டிக்
    கொன்றுசினந் தணியாப் புலவுநாறு மருப்பின்
    வெஞ்சின வேழம் நல்கினன் அஞ்சி
    யான்அது பெயர்த்தனென் ஆகத் தான்அது
    சிறிதென உணர்ந்தமை நாணிப் பிறிதும்ஓர்
    பெருங்களிறு நல்கி யோனே அதற்கொண்டு
    இரும்பேர் ஒக்கல் பெரும்புலம்பு உறினும்
    துன்னரும் பரிசில் தரும் என
    என்றும் செல்லேன் அவன் குன்றுகெழு நாட்டே

    கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்

  • பனி பழுநிய பல் யாமத்துப்

    புறநானூறு

    பனி பழுநிய பல் யாமத்துப்
    பாறு தலை மயிர் நனைய
    இனிது துஞ்சும் திருநகர் வரைப்பின்
    இனையல் அகற்ற என் கிணைதொடாக் குறுகி
    அவி உணவினோர் புறங் காப்ப
    அற நெஞ்சத்தோன் வாழ நாள் என்று
    அதற் கொண்டு வரல் ஏத்திக்
    கரவு இல்லாக் கவிவண் கையான்
    வாழ்க எனப் பெயர் பெற்றோர்
    பிறர்க்கு உவமம் பிறர் இல் என
    அது நினைத்து மதி மழுகி
    அங்கு நின்ற எற் காணூஉச்
    சேய் நாட்டுச் செல் கிணைஞனை
    நீபுரவலை எமக்கு என்ன
    மலைபயந்த மணியும் கடறுபயந்த பொன்னும்
    கடல் பயந்த கதிர் முத்தமும்
    வேறுபட்ட உடையும் சேறுபட்ட தசும்பும்
    கனவிற் கண்டாங்கு வருந்தாது நிற்ப
    நனவின் நல்கியோன் நகைசால் தோன்றல்
    நாடுஎன மொழிவோர் அவன் நாடென மொழிவோர்
    வேந்தென மொழிவோர் அவன் வேந்தென மொழிவோர்
    __________ பொற்கோட்டு யானையர்
    கவர் பரிக் கச்சை நன்மான்
    வடி மணி வாங்கு உருள
    __________ நல்தேர்க் குழுவினர்
    கத ழிசை வன்க ணினர்
    வாளின் வாழ்நர் ஆர்வமொடு ஈண்டிக்
    கடல் ஒலி கொண்ட தானை
    அடல்வெங் குருசில் மன்னிய நெடிதே

    உலோச்சனார்

  • மதிஏர் வெண்குடை அதியர் கோமான்

    புறநானூறு

    மதிஏர் வெண்குடை அதியர் கோமான்
    கொடும்பூண் எழினி நெடுங்கடை நின்று யான்
    பசலை நிலவின் பனிபடு விடியல்
    பொருகளிற்று அடிவழி யன்ன என்கை
    ஒருகண் மாக்கிணை ஒற்றுபு கொடாஅ
    உருகெழு மன்னர் ஆர்எயில் கடந்து
    நிணம்படு குருதிப் பெரும்பாட்டு ஈரத்து
    அணங்குடை மரபின் இருங்களந் தோறும்
    வெள்வாய்க் கழுதைப் புல்இனம் பூட்டி
    வெள்ளை வரகும் கொள்ளும் வித்தும்
    வைகல் உழவ வாழிய பெரிது எனச்
    சென்றுயான் நின்றனெ னாக அன்றே
    ஊருண் கேணிப் பகட்டுஇலைப் பாசி
    வேர்புரை சிதாஅர் நீக்கி நேர்கரை
    நுண்ணூற் கலிங்கம் உடீஇ உண்ம் எனத்
    தேட்கடுப்பு அன்ன நாட்படு தேறல்
    கோண்மீன் அன்ன பொலங்கலத்து அளைஇ
    ஊண்முறை ஈத்தல் அன்றியும் கோண்முறை
    விருந்திறை நல்கி யோனே அந்தரத்து
    அரும்பெறல் அமிழ்த மன்ன
    கரும்புஇவண் தந்தோன் பெரும்பிறங் கடையே

    ஔவையார்

  • விசும்பு நீத்தம் இறந்த ஞாயிற்றுப்

    புறநானூறு

    விசும்பு நீத்தம் இறந்த ஞாயிற்றுப்
    பசுங்கதிர் மழுகிய சிவந்துவாங்கு அந்தி
    சிறுநனி பிறந்த பின்றைச் செறிபிணிச்
    சிதாஅர் வள்பின்என் தடாரி தழீஇப்
    பாணர் ஆரும் அளவை யான்தன்
    யாணர் நல்மனைக் கூட்டு முதல் நின்றனென்
    இமைத்தோர் விழித்த மாத்திரை ஞெரேரெனக்
    குணக்கு எழு திங்கள் கனைஇருள் அகற்றப்
    பண்டுஅறி வாரா உருவோடு என் அரைத்
    தொன்றுபடு துளையடு பருஇழை போகி
    நைந்துகரை பறைந்தஎன் உடையும் நோக்கி
    விருந்தினன் அளியன் இவன் எனப் பெருந்தகை
    நின்ற முரற்கை நீக்கி நன்றும்
    அரவுவெகுண் டன்ன தேறலொடு சூடுதருபு
    நிரயத் தன்னஎன் வறன்களைந் தன்றே
    இரவி னானே ஈத்தோன் எந்தை
    அற்றை ஞான்றினோடு இன்றின் ஊங்கும்
    இரப்பச் சிந்தியேன் நிரப்படு புணையின்
    உளத்தின் அளக்கும் மிளிர்ந்த தகையேன்
    நிறைக்குளப் புதவின் மகிழ்ந்தனெ னாகி
    ஒருநாள் இரவலர் வரையா வள்ளியோர் கடைத்தலை
    ஞாங்கர் நெடுமொழி பயிற்றித்
    தோன்றல் செல்லாது என் சிறுகிணைக் குரலே

    புறத்திணை நன்னாகனார்

  • தண்துளி பலபொழிந்து எழிலி இசைக்கும்

    புறநானூறு

    தண்துளி பலபொழிந்து எழிலி இசைக்கும்
    விண்டு அனைய விண்தோய் பிறங்கல்
    முகடுற உயர்ந்த நெல்லின் மகிழ்வரப்
    பகடுதரு பெருவளம் வாழ்த்திப் பெற்ற
    திருந்தா மூரி பரந்துபடக் கெண்டி
    அரியல் ஆர்கையர் உண்டு இனிது உவக்கும்
    வேங்கட வரைப்பின் வடபுலம் பசித்தென
    ஈங்குவந்து இறுத்தஎன் இரும்பேர் ஒக்கல்
    தீர்கை விடுக்கும் பண்பின் முதுகுடி
    நனந்தலை மூதூர் வினவலின்
    முன்னும் வந்தோன் மருங்கிலன் இன்னும்
    அளியன் ஆகலின் பொருநன் இவன் என
    நின்னுணர்ந்து அறியுநர் என்உணர்ந்து கூறக்
    காண்கு வந்திசிற் பெரும மாண்தக
    இருநீர்ப் பெருங்கழி நுழைமீன் அருந்தும்
    ததைந்த தூவியம் புதாஅஞ் சேக்கும்
    துதைந்த புன்னைச் செழுநகர் வரைப்பின்
    நெஞ்சமர் காதல் நின்வெய் யோளடு
    இன்துயில் பெறுகதில் நீயே வளஞ்சால்
    துளிபதன் அறிந்து பொழிய
    வேலி ஆயிரம் விளைக நின் வயலே

    கல்லாடனார்

  • அலங்குகதிர் சுமத்த கலங்கற் சூழி

    புறநானூறு

    அலங்குகதிர் சுமத்த கலங்கற் சூழி
    நிலைதளர்வு தொலைந்த ஒல்குநிலைப் பல்காற்
    பொதியில் ஒருசிறை பள்ளி யாக
    முழாவரைப் போந்தை அரவாய் மாமடல்
    நாரும் போழும் கிணையோடு சுருக்கி
    ஏரின் வாழ்நர் குடிமுறை புகாஅ
    ஊழ் இரந்து உண்ணும் உயவல் வாழ்வைப்
    புரவுஎதிர்ந்து கொள்ளும் சான்றோர் யார் எனப்
    புரசம் தூங்கும் அறாஅ யாணர்
    வரையணி படப்பை நன்னாட்டுப் பொருந
    பொய்யா ஈகைக் கழல்தொடி ஆஅய்
    யாவரும் இன்மையின் கிணைப்பத் தாவது
    பெருமழை கடல்பரந் தாஅங்கு யானும்
    ஒருநின் உள்ளி வந்தனென் அதனால்
    புலவர் புக்கில் ஆகி நிலவரை
    நிலீ இயர் அத்தை நீயே ஒன்றே
    நின்னின்று வறுவிது ஆகிய உலகத்து
    நிலவன் மாரோ புரவலர் துன்னிப்
    பெரிய ஓதினும் சிறிய உணராப்
    பீடின்று பெருகிய திருவின்
    பாடில் மன்னரைப் பாடன்மார் எமரே

    உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்

  • வணர் கோட்டுச் சீறியாழ் வாடுபுடைத் தழீஇ

    புறநானூறு

    வணர் கோட்டுச் சீறியாழ் வாடுபுடைத் தழீஇ
    உணர்வோர் யார் என் இடும்பை தீர்க்கஎனக்
    கிளக்கும் பாண கேள் இனி நயத்தின்
    பாழ்ஊர் நெருஞ்சிப் பசலை வான்பூ
    ஏர்தரு சுடரின் எதிர்கொண்டு ஆஅங்கு
    இலம்படு புலவர் மண்டை விளங்கு புகழ்க்
    கொண்பெருங்காலத்துக் கிழவன்
    தண்தார் அகலம் நோக்கின் மலர்ந்தே

    மோசிகீரனார்

  • திரைபொரு முந்நீர்க் கரைநணிச் செலினும்

    புறநானூறு

    திரைபொரு முந்நீர்க் கரைநணிச் செலினும்
    அறியுநர்க் காணின் வேட்கை நீக்கும்
    சின்னீர் வினவுவர் மாந்தர் அதுபோல்
    அரசர் உழைய ராகவும் புரைதபு
    வள்ளியோர்ப் படர்குவர் புலவர் அதனால்
    யானும்பெற்றது ஊதியம் பேறியாது என்னேன்
    உற்றனென் ஆதலின் உள்ளிவந் தனனே
    ஈயென இரத்தலோ அரிதே நீ அது
    நல்கினும் நல்காய் ஆயினும் வெல்போர்
    எறிபடைக்கு ஓடா ஆண்மை அறுவைத்
    தூவிரி கடுப்பத் துவன்றி மீமிசைத்
    தண்பல இழிதரும் அருவி நின்
    கொண்டுபெருங்கானம் பாடல் எனக்கு எளிதே

    மோசிகீரனார்

  • மழையணி குன்றத்துக் கிழவன் நாளும்

    புறநானூறு

    மழையணி குன்றத்துக் கிழவன் நாளும்
    இழையணி யானை இரப்போர்க்கு ஈயும்
    சுடர்விடு பசும்பூண் சூர்ப்பு அமை முன்கை
    அடுபோர் ஆனா ஆதன் ஓரி
    மாரி வண்கொடை காணிய நன்றும்
    சென்றது மன் எம் கண்ணுளங் கடும்பே
    பனிநீர்ப் பூவா மணிமிடை குவளை
    வால்நார்த் தொடுத்த கண்ணியும் கலனும்
    யானை இனத்தொடு பெற்றனர் நீங்கிப்
    பசியார் ஆகல் மாறுகொல் விசிபிணிக்
    கூடுகொள் இன்னியம் கறங்க
    ஆடலும் ஒல்லார் தம் பாடலும் மறந்தே

    வண்பரணர்

  • வேழம் வீழ்த்த விழுத் தொடைப் பகழி

    புறநானூறு

    வேழம் வீழ்த்த விழுத் தொடைப் பகழி
    பேழ்வாய் உழுவையைப் பெரும்பிறிது உறீஇப்
    புழல்தலை புகர்க்கலை உருட்டி உரல்தலைக்
    கேழற் பன்றி வீழ அயலது
    ஆழற் புற்றத்து உடும்பில் செற்றும்
    வல்வில் வேட்டம் வலம்படுத் திருந்தோன்
    புகழ்சால் சிறப்பின் அம்புமிகத் திளைக்கும்
    கொலைவன் யார்கொலோ கொலைவன் மற்று இவன்
    விலைவன் போலான் வெறுக்கைநன்கு உடையன்
    ஆரம் தாழ்ந்த அம்பகட்டு மார்பின்
    சாரல் அருவிப் பயமலைக் கிழவன்
    ஓரி கொல்லோ அல்லன் கொல்லோ
    பாடுவல் விறலி ஓர் வண்ணம் நீரும்
    மண்முழா அமைமின் பண்யாழ் நிறுமின்
    கண்விடு தூம்பின் களிற்று உயிர் தொடுமின்
    எல்லரி தொடுமின் ஆகுளி தொடுமின்
    பதலை ஒருகண் பையென இயக்குமின்
    மதலை மாக்கோல் கைவலம் தமின் என்று
    இறைவன் ஆகலின் சொல்லுபு குறுகி
    மூவேழ் துறையும் ழுறையுளிக் கழிப்பிக்
    கோவெனப் பெயரிய காலை ஆங்கு அது
    தன்பெயர் ஆகலின் நாணி மற்று யாம்
    நாட்டிடன் நாட்டிடன் வருதும் ஈங்கு ஓர்
    வேட்டுவர் இல்லை நின் ஒப் போர் என
    வேட்டது மொழியவும் விடாஅன் வேட்டத்தில்
    தான் உயிர் செகுத்த மான் நிணப் புழுக்கோடு
    ஆன் உருக்கு அன்ன வேரியை நல்கித்
    தன்மலைப் பிறந்த தாவில் நன்பொன்
    பன்மணிக் கு வையொடும் விரைஇக் கொண்ம் எனச்
    சுரத்துஇடை நல்கி யோனே விடர்ச் சிமை
    ஓங்குஇருங் கொல்லிப் பொருநன்
    ஓம்பா ஈகை விறல்வெய் யோனே

    வண்பரணர்