Tag: வெண்பா

  • வாடா மாலை பாடினி அணியப்

    புறநானூறு

    வாடா மாலை பாடினி அணியப்
    பாணன் சென்னிக் கேணி பூவா
    எரிமருள் தாமரைப் பெருமலர் தயங்க
    மைவிடை இரும்போத்துச் செந்தீச் சேர்த்திக்
    காயங் கனிந்த கண்ணகன் கொழுங்குறை
    நறவுண் செவ்வாய் நாத்திறம் பெயர்ப்ப
    உண்டும் தின்றும் இரப்போர்க்கு ஈந்தும்
    மகிழ்கம் வம்மோ மறப்போ ரோயே
    அரிய வாகலும் உரிய பெரும
    நிலம்பக வீழ்ந்த அலங்கல் பல்வேர்
    முதுமரப் பொத்தின் கதுமென இயம்பும்
    கூகைக் கோழி ஆனாத்
    தாழிய பெருங்கா டெய்திய ஞான்றே

    கூகைக் கோரியார்

  • இருங்கடல் உடுத்தஇப் பெருங்கண் மாநிலம்

    புறநானூறு

    இருங்கடல் உடுத்தஇப் பெருங்கண் மாநிலம்
    உடைஇலை நடுவணது இடைபிறர்க்கு இன்றித்
    தாமே ஆண்ட ஏமம் காவலர்
    இடுதிரை மணலினும் பலரே சுடுபிணக்
    காடுபதி யாகப் போகித் தத்தம்
    நாடு பிறர்கொளச் சென்றுமாய்ந் தனரே
    அதனால் நீயும் கேண்மதி அத்தை வீயாது
    உடம்பொடு நின்ற உயிரும் இல்லை
    மடங்கல் உண்மை மாயமோ அன்றே
    கள்ளி ஏய்ந்த முள்ளியம் புறங்காட்டு
    வெள்ளில் போகிய வியலுள் ஆங்கண்
    உப்பிலாஅ அவிப் புழுக்கல்
    கைக் கொண்டு பிறக்கு நோக்காது
    இழி பிறப்பினோன் ஈயப் பெற்று
    நிலங்கல னாக இலங்குபலி மிசையும்
    இன்னா வைகல் வாரா முன்னே
    செய்ந்நீ முன்னிய வினையே
    முந்நீர் வரைப்பகம் முழுதுடன் துறந்தே

    ஐயாதிச் சிறுவெண்டேரையார்

  • ஞாயிற்று அன்ன ஆய்மணி மிடைந்த

    புறநானூறு

    ஞாயிற்று அன்ன ஆய்மணி மிடைந்த
    மதியுறழ் ஆரம் மார்பில் புரளப்
    பலிபெறு முரசம் பாசறைச் சிலைப்பப்
    பொழிலகம் பரந்த பெருஞ்செய் ஆடவர்
    செருப்புகன்று எடுக்கும் விசய வெண்கொடி
    அணங்குஉருத் தன்ன கணங்கொள் தானை
    கூற்றத் தன்ன மாற்றரு முன்பன்
    ஆக்குரல் காண்பின் அந்த ணாளர்
    நான்மறை குறித்தன்று அருளாகா மையின்
    அறம்குறித் தன்று பொருளா குதலின்
    மருள் தீர்ந்து மயக்கு ஒரீஇக்
    கைபெய்த நீர் கடற் பரப்ப
    ஆம் இருந்த அடை நல்கிச்
    சோறு கொடுத்து மிகப் பெரிதும்
    வீறுசான் நன்கலம் வீசி நன்றும்
    சிறுவெள் என்பின் நெடுவெண் களரின்
    வாய்வன் காக்கை கூகையடு கூடிப்
    பகலும் கூவும் அகலுள் ஆங்கண்
    காடுகண் மறைத்த கல்லென் சுற்றமொடு
    இல்என்று இல்வயின் பெயர மெல்ல
    இடஞ்சிறிது ஒதுங்கல் அஞ்சி
    உடம்பொடும் சென்மார் உயர்ந்தோர் நாட்டே

    சிறுவெண்டேரையார்

  • கார் எதிர் உருமின் உரறிக் கல்லென

    புறநானூறு

    கார் எதிர் உருமின் உரறிக் கல்லென
    ஆருயிர்க்கு அலமரும் ஆராக் கூற்றம்
    நின்வரவு அஞ்சலன் மாதோ நன்பல
    கேள்வி முற்றிய வேள்வி அந்தணர்க்கு
    அருங்கலம் நீரொடு சிதறிப் பெருந்தகைத்
    தாயின்நன்று பலர்க்கு ஈத்துத்
    தெருணடை மாகளிறொடு தன்
    அருள் பாடுநர்க்கு நன்கு அருளியும்
    உருள்நடைப் பஃறேர் ஒன்னார்க் கொன்றுதன்
    தாள் சேருநர்க்கு இனிது ஈத்தும்
    புரி மாலையர் பாடி னிக்குப்
    பொலந் தாமரைப் பூம் பாணரொடு
    கலந் தளைஇய நீள் இருக் கையால்
    பொறையடு மலிந்த கற்பின் மான்நோக்கின்
    வில்என விலங்கிய புருவத்து வல்லென
    நல்கின் நாஅஞ்சும் முள்எயிற்று மகளிர்
    அல்குல் தாங்கா அசைஇ மெல்லென
    கலங்கலந் தேறல் பொலங்கலத்து ஏந்தி
    அமிழ்தென மடுப்ப மாந்தி இகழ்விலன்
    நில்லா உலகத்து நிலையாமைநீ
    சொல்லா வேண்டா தோன்றல் முந்துஅறிந்த
    முழுதுஉணர் கேள்வியன் ஆகலின் விரகினானே

  • பெரிது ஆராச் சிறு சினத்தர்

    புறநானூறு

    பெரிது ஆராச் சிறு சினத்தர்
    சில சொல்லால் பல கேள்வியர்
    நுண் ணுணர்வினாற் பெருங் கொடையர்
    கலுழ் நனையால் தண் தேறலர்
    கனி குய்யாற் கொழுந் துவையர்
    தாழ் உவந்து தழூஉ மொழியர்
    பயன் உறுப்பப் பலர்க்கு ஆற்றி
    ஏம மாக இந்நிலம் ஆண்டோர்
    சிலரே பெரும கேள் இனி நாளும்
    பலரே தகை அஃது அறியா தோரே
    அன்னோர் செல்வமும் மன்னி நில்லாது
    இன்னும் அற்று அதன் பண்பே அதனால்
    நிச்சமும் ஒழுக்கம் முட்டிலை பரிசில்
    நச்சுவர் கையின் நிரப்பல் ஓம்புமதி அச்சுவரப்
    பாறுஇறை கொண்ட பறந்தலை மாகத
    கள்ளி போகிய களரி மருங்கின்
    வெள்ளில் நிறுத்த பின்றைக் கள்ளடு
    புல்லகத்து இட்ட சில்லவிழ் வல்சி
    புலையன் ஏவப் புன்மேல் அமர்ந்துண்டு
    அழல்வாய்ப் புக்க பின்னும்
    பலர்வாய்த்து இராஅர் பகுத்துஉண் டோரே

    சங்க வருணர் என்னும் நாகரியர்

  • பாறுபடப் பறைந்த பன்மாறு மருங்கின்

    புறநானூறு

    பாறுபடப் பறைந்த பன்மாறு மருங்கின்
    வேறுபடு குரல வெவ்வாய்க் கூகையடு
    பிணந்தின் குறுநரி நிணம்திகழ் பல்ல
    பேஎய் மகளிர் பிணம்தழூஉப் பற்றி
    விளர்ஊன் தின்ற வெம்புலால் மெய்யர்
    களரி மருங்கில் கால்பெயர்த் தாடி
    ஈம விளக்கின் வெருவரப் பேரும்
    காடுமுன் னினரே நாடுகொண் டோரும்
    நினக்கும் வருதல் வைகல் அற்றே
    வசையும் நிற்கும் இசையும் நிற்கும்
    அதனால் வசைநீக்கி இசைவேண்டியும்
    நசை வேண்டாது நன்று மொழிந்தும்
    நிலவுக் கோட்டுப் பலகளிற் றோடு
    பொலம் படைய மா மயங்கிட
    இழைகிளர் நெடுந்தேர் இரவலர்க்கு அருகாது
    கொள் என விடுவை யாயின் வெள்ளென
    ஆண்டுநீ பெயர்ந்த பின்னும்
    ஈண்டுநீடு விளங்கும் நீ எய்திய புகழே

    கரவட்டனார்

  • அறவை நெஞ்சத்து ஆயர் வளரும்

    புறநானூறு

    அறவை நெஞ்சத்து ஆயர் வளரும்
    மறவை நெஞ்சத்து தாய்இ லாளர்
    அரும்பலர் செருந்தி நெடுங்கான் மலர்கமழ்
    விழவணி வியன்களம் அன்ன முற்றத்து
    ஆர்வலர் குறுகின் அல்லது காவலர்
    கடவிலும் குறுகாக் கடியுடை வியன்நகர்
    மலைக்கணத்து அன்ன மாடம் சிலம்ப வென்
    அரிக்குரல் தடாரி இரிய ஒற்றிப்
    பாடி நின்ற பன்னாள் அன்றியும்
    சென்ற ஞான்றைச் சென்றுபடர் இரவின்
    வந்ததற் கொண்டு நெடுங்கடை நின்ற
    புன்தலைப் பொருநன் அளியன் தான் எனத்
    தன்உழைக் குறுகல் வேண்டி என்அரை
    முதுநீர்ப் பாசி அன்ன உடைகளைந்து
    திருமலர் அன்ன புதுமடிக் கொளீஇ
    மகிழ்தரல் மரபின் மட்டே அன்றியும்
    அமிழ்தன மரபின் ஊன்துவை அடிசில்
    வெள்ளி வெண்கலத்து ஊட்டல் அன்றி
    முன்னூர்ப் பொதியில் சேர்ந்த மென்நடை
    இரும்பேர் ஒக்கல் பெரும்புலம்பு அகற்ற
    அகடுநனை வேங்கை வீகண் டன்ன
    பகடுதரு செந்நெல் போரொடு நல்கிக்
    கொண்டி பெறுக என் றோனே உண்துறை
    மலைஅலர் அணியும் தலைநீர் நாடன்
    கண்டார் கொண்டுமனை திருந்தடி வாழ்த்தி
    _______________________________________
    வான்அறி யலவென் பாடுபசி போக்கல்
    அண்ணல் யானை வேந்தர்
    உண்மையோ அறியலர் காண்பறி யலரே

    ஔவையார்

  • கானல் மேய்ந்து வியன்புலத் தல்கும்

    புறநானூறு

    கானல் மேய்ந்து வியன்புலத் தல்கும்
    புல்வாய் இரலை நெற்றி யன்ன
    பொலம் இலங்கு சென்னிய பாறுமயிர் அவியத்
    தண்பனி உறைக்கும் புலரா ஞாங்கர்
    மன்றப் பலவின் மால்வரைப் பொருந்தி என்
    தெண்கண் மாக்கிணை தெளிர்ப்ப ஒற்றி
    இருங்கலை ஓர்ப்ப இசைஇக் காண்வரக்
    கருங்கோற் குறிஞ்சி அடுக்கம் பாடப்
    புலிப்பற் றாலிப் புன்றலைச் சிறா அர்
    மான்கண் மகளிர் கான்தேர் அகன்று உவா
    சிலைப்பாற் பட்ட முளவுமான் கொழுங்குறை
    விடர்முகை அடுக்கத்துச் சினைமுதிர் சாந்தம்
    புகர்முக வேழத்து முருப்பொடு மூன்றும்
    இருங்கேழ் வயப்புலி வரி அதள் குவைஇ
    விரிந்து இறை நல்கும் நாடன் எங்கோன்
    கழல்தொடி ஆஅய் அண்டிரன் போல
    வண்மையும் உடையையோ ஞாயிறு
    கொன்விளங் குதியால் விசும்பி னானே

    உறையூர் ஏணிச்சேர் முடமோசியார்

  • நீர் நுங்கின் கண் வலிப்பக்

    புறநானூறு

    நீர் நுங்கின் கண் வலிப்பக்
    கான வேம்பின் காய் திரங்கக்
    கயங் களியும் கோடை ஆயினும்
    ஏலா வெண்பொன் போகுறு காலை
    எம்மும் உள்ளுமோ பிள்ளைஅம் பொருநன்
    என்றுஈத் தனனே இசைசால் நெடுந்தகை
    இன்றுசென்று எய்தும் வழியனும் அல்லன்
    செலினே காணா வழியனும் அல்லன்
    புன்தலை மடப்பிடி இனையக் கன்றுதந்து
    குன்றக நல்லூர் மன்றத்துப் பிணிக்கும்
    கல்லிழி அருவி வேங்கடங் கிழவோன்
    செல்வுழி எழாஅ நல்லேர் முதியன்
    ஆத னுங்கன் போல நீயும்
    பசித்த ஒக்கல் பழங்கண் வீட
    வீறுசால் நன்கலம் நல்குமதி பெரும
    ஐதுஅகல் அல்குல் மகளிர்
    நெய்தல் கேளன்மார் நெடுங்கடை யானே

    கள்ளில் ஆத்திரையனார்

  • வெள்ளி தென்புலத்து உறைய விளைவயல்

    புறநானூறு

    வெள்ளி தென்புலத்து உறைய விளைவயல்
    பள்ளம் வாடிய பயன்இல் காலை
    இரும்பறைக் கிணைமகன் சென்றவன் பெரும்பெயர்
    சிறுகுடி கிழான் பண்ணன் பொருந்தித்
    தன்நிலை அறியுநன் ஆக அந்நிலை
    இடுக்கண் இரியல் போக உடைய
    கொடுத்தோன் எந்தை கொடைமேந் தோன்றல்
    நுண்ணூல் தடக்கையின் நாமருப் பாக
    வெல்லும் வாய்மொழிப் புல்லுடை விளைநிலம்
    பெயர்க்கும் பண்ணற் கேட்டிரோ அவன்
    வினைப்பகடு ஏற்ற மேழிக் கிணைத்தொடா
    நாடொறும் பாடேன் ஆயின் ஆனா
    மணிகிளர் முன்றில் தென்னவன் மருகன்
    பிணிமுரசு இரங்கும் பீடுகெழு தானை
    அண்ணல் யானை வழுதி
    கண்மா றிலியர்என் பெருங்கிளைப் புரவே

    மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார்