Tag: வெண்பா

  • அளிய தாமே சிறுவெள் ளாம்பல்

    புறநானூறு

    அளிய தாமே சிறுவெள் ளாம்பல்
    இளையம் ஆகத் தழையா யினவே இனியே
    பெருவளக் கொழுநன் மாய்ந்தெனப் பொழுது மறுத்து
    இன்னா வைகல் உண்ணும்
    அல்லிப் படுஉம் புல் ஆயினவே

    ஒக்கூர் மாசாத்தனார்

  • யானை தந்த முளிமர விறகின்

    புறநானூறு

    யானை தந்த முளிமர விறகின்
    கானவர் பொத்திய ஞெலிதீ விளக்கத்து
    மடமான் பெருநிரை வைகுதுயில் எடுப்பி
    மந்தி சீக்கும் அணங்குடை முன்றிலில்
    நீர்வார் கூந்தல் இரும்புறம் தாழப்
    பேரஞர்க் கண்ணள் பெருங்காடு நோக்கித்
    தெருமரும் அம்ம தானே தன் கொழுநன்
    முழுவுகண் துயிலாக் கடியுடை வியனகர்ச்
    சிறுநனி தமியள் ஆயினும்
    இன்னுயிர் நடுங்குந்தன் இளமைபுறங் கொடுத்தே

    மதுரைப் பேராலவாயர்

  • யங்குப் பெரிது ஆயினும் நோய்அளவு எனைத்தே

    புறநானூறு

    யங்குப் பெரிது ஆயினும் நோய்அளவு எனைத்தே
    உயிர்செகுக் கல்லா மதுகைத்து அன்மையின்
    கள்ளி போகிய களரியம் பறந்தலை
    வெள்ளிடைப் பொத்திய விளைவிறகு ஈமத்து
    ஒள்ளழற் பள்ளிப் பாயல் சேர்த்தி
    ஞாங்கர் மாய்ந்தனள் மடந்தை
    இன்னும் வாழ்வல் என்இதன் பண்பே

    சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை

  • பாணர் சென்னியும் வண்டுசென்று ஊதா

    புறநானூறு

    பாணர் சென்னியும் வண்டுசென்று ஊதா
    விறலியர் முன்கையும் தொடியிற் பொலியா
    இரவல் மாக்களும்

  • இனிநினைந்து இரக்கம் ஆகின்று திணிமணல்

    புறநானூறு

    இனிநினைந்து இரக்கம் ஆகின்று திணிமணல்
    செய்வுறு பாவைக்கு கொய்பூத் தைஇத்
    தண்கயம் ஆடும் மகளிரொடு கைபிணைந்து
    தழுவுவழித் தழீஇத் தூங்குவழித் தூங்கி
    மறைஎனல் அறியா மாயமில் ஆயமொடு
    உயர்சினை மருதத் துறையுறத் தாழ்ந்து
    நீர்நணிப் படிகோடு ஏறிச் சீர்மிகக்
    கரையவர் மருளத் திரையகம் பிதிர
    நெடுநீர்க் குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து
    குளித்துமணற் கொண்ட கல்லா இளமை
    அளிதோ தானே யாண்டுண்டு கொல்லோ-
    தொடித்தலை விழுத்தண்டு ஊன்றி நடுக்குற்று
    இருமிடை மிடைந்த சிலசொல்
    பெருமூ தாளரோம் ஆகிய எமக்கே

    தொடித்தலை விழுத்தண்டினார்

  • இளையோர் சூடார் வளையோர் கொய்யார்

    புறநானூறு

    இளையோர் சூடார் வளையோர் கொய்யார்
    நல்யாழ் மருப்பின் மெல்ல வாங்கிப்
    பாணன் சூடான் பாடினி அணியாள்
    ஆண்மை தோன்ற ஆடவர்க் கடந்த
    வல்வேற் சாத்தன் மாய்ந்த பின்றை
    முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே

    குடவாயிற் தீரத்தனார்

  • திண்தேர் இரவலர்க்கு ஈத்த தண்தார்

    புறநானூறு

    திண்தேர் இரவலர்க்கு ஈத்த தண்தார்
    அண்டிரன் வரூஉம் என்ன ஒண்தொடி
    வச்சிரத் தடக்கை நெடியோன் கோயிலுள்
    போர்ப்புறு முரசும் கறங்க
    ஆர்ப்புஎழுந் தன்றால் விசும்பி னானே

    உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்

  • ஆடு நடைப் புரவியும் களிறும் தேரும்

    புறநானூறு

    ஆடு நடைப் புரவியும் களிறும் தேரும்
    வாடா யாணர் நாடும் ஊரும்
    பாடுநர்க்கு அருகா ஆஅய் அண்டிரன்
    கோடுஏந்து அல்குல் குறுந்தொடி மகளிரொடு
    காலன் என்னும் கண்ணிலி உய்ப்ப
    மேலோர் உலகம் எய்தினன் எனாஅப்
    பொத்த அறையுள் போழ்வாய்க் கூகை
    சுட்டுக் குவி எனச் செத்தோர்ப் பயிரும்
    கள்ளியம் பறந்தலை ஒருசிறை அல்கி
    ஒள்ளெரி நைப்ப உடம்பு மாய்ந்தது
    புல்லென் கண்ணர் புரவலர்க் காணாது
    கல்லென் சுற்றமொடு கையழிந்து புலவர்
    வாடிய பசியர் ஆகிப் பிறர்
    நாடுபடு செலவினர் ஆயினர் இனியே

    குட்டுவன் கீரனார்

  • தொடி யுடைய தோள் மணந்தணன்

    புறநானூறு

    தொடி யுடைய தோள் மணந்தணன்
    கடி காவிற் பூச் சூடினன்
    தண் கமழுஞ் சாந்து நீவினன்
    செற் றோரை வழி தபுத்தனன்
    நட் டோரை உயர்பு கூறினன்
    வலியரென வழி மொழியலன்
    மெலியரென மீக் கூறலன்
    பிறரைத் தான் இரப் பறியலன்
    இரந் தோர்க்கு மறுப் பறியலன்
    வேந்துடை அவையத்து ஓங்குபுகழ் தோற்றினன்
    வருபடை எதிர் தாங்கினன்
    பெயர் படை புறங் கண்டனன்
    கடும் பரிய மாக் கடவினன்
    நெடுந் தெருவில் தேர் வழங்கினன்
    ஓங்கு இயற் களிறு ஊர்ந்தனன்
    தீஞ் செறி தசும்பு தொலைச்சினன்
    பாண் உவப்பப் பசி தீர்த்தனன்
    மயக்குடைய மொழி விடுத்தனன் ஆங்குச்
    செய்ப எல்லாம் செய்தனன் ஆகலின்
    இடுக ஒன்றோ சுடுக ஒன்றோ
    படுவழிப் படுக இப் புகழ்வெய்யோன் தலையே

    பேரெயின் முறுவலார்

  • கவிசெந் தாழிக் குவிபுறத்து இருந்த

    புறநானூறு

    கவிசெந் தாழிக் குவிபுறத்து இருந்த
    செவிசெஞ் சேவலும் பொகுவலும் வெருவா
    வாய் வன் காக்கையும் கூகையும் கூடிப்
    பேஎய் ஆயமொடு பெட்டாங்கு வழங்கும்
    காடுமுன் னினனே கட்கா முறுநன்
    தொடிகழி மகளிரின் தொல்கவின் வாடிப்
    பாடுநர் கடும்பும் பையென் றனவே
    தோடுகொள் முரசும் கிழிந்தன கண்ணே
    ஆள்இல் வரைபோல் யானையும் மருப்புஇழந் தனவே
    வெந்திறல் கூற்றம் பெரும்பேது உறுப்ப
    எந்தை ஆகுல அதற்படல் அறியேன்
    அந்தோ அளியேன் வந்தனென் மன்ற
    என்ஆ குவர்கொல் என் துன்னி யோரே
    மாரி இரவின் மரங்கவிழ் பொழுதின்
    ஆரஞர் உற்ற நெஞ்சமொடு ஓராங்குக்
    கண்இல் ஊமன் கடற்பட் டாங்கு
    வரையளந்து அறியாத் திரையரு நீத்தத்து
    அவல மறுசுழி மறுகலின்
    தவலே நன்றுமன் தகுதியும் அதுவே

    பெருஞ்சித்திரனார்