புறநானூறு
பொய்கை நாரை போர்வில் சேக்கும்
நெய்தல்அம் கழனி நெல்அரி தொழுவர்
கூம்புவிடு மெய்பிணி அவிழ்ந்த ஆம்பல்
அகல் அடை அரியல் மாந்திக் தெண்கடல்
படுதிரை இன்சீர்ப் பாணி தூங்கும்
மென்புல வைப்பின் நன்னாட்டுப் பொருந
பல்கனி நசைஇ அல்கு விசும்பு உகத்து
பெருமலை விடர்அகம் சிலம்ப முன்னிப்
பழனுடைப் பெருமரம் தீர்ந்தெனக் கையற்றுப்
பெறாது பெயரும் புள்ளினம் போல நின்
நசைதர வந்து நின்இசை நுவல் பரிசிலென்
வறுவியேன் பெயர்கோ வாள்மேம் படுந
ஈயாய் ஆயினும் இரங்குவென் அல்லேன்
நோயிலை ஆகுமதி பெரும நம்முள்
குறுநணி காண்குவ தாக நாளும்
நறும்பல் ஒலிவரும் கதுப்பின் தேமொழித்
தெரியிழை அன்ன மார்பின்
செருவெம் சேஎய் நின் மகிழ்இரு க்கையே
பெருந்தலைச் சாத்தனார்