Tag: வெண்பா

  • ஏற்றுக உலையே ஆக்குக சோறே

    புறநானூறு

    ஏற்றுக உலையே ஆக்குக சோறே
    கள்ளும் குறைபடல் ஓம்புக ஒள்ளிழைப்
    பாடுவல் விறலியர் கோதையும் புனைக
    அன்னவை பலவும் செய்க என்னதூஉம்
    பரியல் வெண்டா வருபதம் நாடி
    ஐவனங் காவல் பெய்தீ நந்தின்
    ஒளிதிகழ் திருந்துமணி நளியிருள் அகற்றும்
    வன்புல நாடன் வயமான் பிட்டன்
    ஆரமர் கடக்கும் வேலும் அவனிறை
    மாவள் ஈகைக் கோதையும்
    மாறுகொள் மன்னரும் வாழியர் நெடிதே

    வடமண்ணக்கன் தாமோதரனார்

  • மடத்தகை மாமயில் பனிக்கும் என்று அருளிப்

    புறநானூறு

    மடத்தகை மாமயில் பனிக்கும் என்று அருளிப்
    படாஅம் ஈத்த கெடாஅ நல்லிசைக்
    கடாஅ யானைக் கலிமான் பேக
    பசித்தும் வாரோம் பாரமும் இலமே
    களங்கனி யன்ன கருங்கோட்டுச் சீறியாழ்
    நயம்புரிந் துறையுநர் நடுங்கப் பண்ணி
    அறம்செய் தீமோ அருள்வெய் யோய் என
    இ·தியாம் இரந்த பரிசில் அஃது இருளின்
    இனமணி நெடுந்தேர் ஏறி
    இன்னாது உறைவி அரும்படர் களைமே

    கபிலர்

  • அருவி ஆர்க்குங் கழைபயில் நனந்தலைக்

    புறநானூறு

    அருவி ஆர்க்குங் கழைபயில் நனந்தலைக்
    கறிவளர் அடுக்கத்து மலரந்த காந்தள்
    கொழுங்கிழங்கு மிளிரக் கிண்டிக் கிளையடு
    கடுங்கண் கேழல் உழுத பூழி
    நன்னாள் வருபதம் நோக்கிக் குறவர்
    உழாஅது வித்திய பரூஉக்குரற் சிறுதினை
    முந்துவிளை யாணர் நாள்புதிது உண்மார்
    மரையான் கறந்த நுரைகொள் தீம்பால்
    மான்தடி புழுக்கிய புலவுநாறு குழிசி
    வான்கேழ் இரும்புடை கழாஅது ஏற்றிச்
    சாந்த விறகின் உவித்த புன்கம்
    கூதளங் கவினிய குளவி முன்றில்
    செழுங்கோள் வாழை அகல்இலைப் பகுக்கும்
    ஊராக் குதிரைக் கிழவ கூர்வேல்
    நறைநார்த் தொடுத்த வேங்கையங் கண்ணி
    வடிநவில் அம்பின் வில்லோர் பெரும
    கைவள் ஈகைக் கடுமான் கொற்ற
    வையக வரைப்பில் தமிழகம் கேட்பப்
    பொய்யாச் செந்நா நெளிய ஏத்திப்
    பாடுப என்ப பரிசிலர் நாளும்
    ஈயா மன்னர் நாண
    வீயாது பரந்தநின் வசையில் வான் புகழே

    கருவூர்க் கந்தப்பிள்ளைச் சாத்தனார்

  • அருளா யாகலோ கொடிதே இருள்வரச்

    புறநானூறு

    அருளா யாகலோ கொடிதே இருள்வரச்
    சீறியாழ் செவ்வழி பண்ணி யாழ நின்
    கார்எதிர் கானம் பாடினே மாக
    நீல்நறு நெய்தலிற் பொலிந்த உண்கண்
    கலுழ்ந்து வார் அரிப் பனி பூண்அகம் நனைப்ப
    இனைதல் ஆனா ளாக இளையோய்
    கிளையை மன் எம் கேள்வெய் யோற்குஎன
    யாம்தன் தொழுதனம் வினவக் காந்தள்
    முகைபுரை விரலின் கண்ணீர் துடையா
    யாம் அவன் கிளைஞரேம் அல்லேம் கேள்இனி
    எம்போல் ஒருத்தி நலன்நயந்து என்றும்
    வரூஉம் என்ப வயங்கு புகழ்ப் பேகன்
    ஒல்லென ஒலிக்கும் தேரொடு
    முல்லை வேலி நல்லூ ரானே

    கபிலர்

  • நீயே அமர்காணின் அமர்கடந்து அவர்

    புறநானூறு

    நீயே அமர்காணின் அமர்கடந்து அவர்
    படை விலக்கி எதிர் நிற்றலின்
    வாஅள் வாய்த்த வடுவாழ் யாக்கை யடு
    கேள்விக்கு இனியை கட்கின் னாயே
    அவரே நிற்காணின் புறங் கொடுத்தலின்
    ஊறுஅறியா மெய் யாக்கை யடு
    கண்ணுக்கு இனியர் செவிக்குஇன் னாரே
    அதனால்நீயும் ஒன்று இனியைஅவரும் ஒன்றுஇனியர்
    ஒவ்வா யாவுள மற்றே வெல்போர்க்
    கழல்புனை திருந்தடிக் கடுமான் கிள்ளி
    நின்னை வியக்குமிவ் வுலகம் அஃது
    என்னோ பெரும உரைத்திசின் எமக்கே

    கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார்

  • மலைவான் கொள்க என உயர்பலி தூஉய்

    புறநானூறு

    மலைவான் கொள்க என உயர்பலி தூஉய்
    மாரி ஆன்று மழைமேக்கு உயர்க எனக்
    கடவுட் பேணிய குறவர் மாக்கள்
    பெயல்கண் மாறிய உவகையர் சாரல்
    புனைத்தினை அயிலும் நாட சினப் போர்க்
    கைவள் ஈகைக் கடுமான் பேக
    யார்கொல் அளியள் தானே நெருநல்
    சுரன் உழந்து வருந்திய ஒக்கல் பசித்தெனக்
    குணில்பாய் முரசின் இரங்கும் அருவி
    நளிஇருஞ் சிலம்பின் சீறூர் ஆங்கண்
    வாயில் தோன்றி வாழ்த்தி நின்று
    நின்னும்நின் மலையும் பாட இன்னாது
    இகுத்த கண்ணீர் நிறுத்தல் செல்லாள்
    முலையகம் நனைப்ப விம்மிக்
    குழல்இனை வதுபோல் அழுதனள் பெரிதே

    கபிலர்

  • மரைபிரித்து உண்ட நெல்லி வேலிப்

    புறநானூறு

    மரைபிரித்து உண்ட நெல்லி வேலிப்
    பரலுடை முன்றில் அங்குடிச் சீறூர்
    எல்அடிப் படுத்த கல்லாக் காட்சி
    வில்லுழுது உண்மார் நாப்பண் ஒல்லென
    இழிபிறப் பாளன் கருங்கை சிவப்ப
    வலிதுரந்து சிலைக்கும் வன்கண் கடுந்துடி
    புலிதுஞ்சு நெடுவரைக் குடிஞையோடு இரட்டும்
    மலைகெழு நாடன் கூர்வேல் பிட்டன்
    குறுகல் ஓம்புமின் தெவ்விர் அவனே
    சிறுகண் யானை வெண்கோடு பயந்த
    ஒளிதிகழ் முத்தம் விறலியர்க்கு ஈந்து
    நார்பிழிக் கொண்ட வெங்கள் தேறல்
    பண்அமை நல்யாழ்ப் பாண்கடும்பு அருத்தி
    நசைவர்க்கு மென்மை அல்லது பகைவர்க்கு
    இரும்புபயன் படுக்குங் கருங்கைக் கொல்லன்
    விசைத்துஎறி கூடமொடு பொருஉம்
    உலைக்கல் அன்ன வல்லா ளன்னே

    உறையூர் மருத்துவன் தாமோதரனார்

  • நும்படை செல்லுங் காலை அவர்படை

    புறநானூறு

    நும்படை செல்லுங் காலை அவர்படை
    எறித்தெறி தானை முன்னரை எனாஅ
    அவர்படை வருஉங் காலை நும்படைக்
    கூழை தாங்கிய அகல் யாற்றுக்
    குன்று விலங்கு சிறையின் நின்றனை எனாஅ
    அரிதால் பெரும நின் செவ்வி என்றும்
    பெரிதால் அத்தை என் கடும்பினது இடும்பை
    இன்னே விடுமதி பரிசில் வென்வேல்
    இளம்பல் கோசர் விளங்குபடை கன்மார்
    இகலினர் எறிந்த அகல்இலை முருக்கின்
    பெருமரக் கம்பம் போலப்
    பொருநர்க்கு உலையாநின் வலன் வாழியவே

    காவிரிபூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார்

  • காய்நெல் அறுத்துக் கவளங் கொளினே

    புறநானூறு

    காய்நெல் அறுத்துக் கவளங் கொளினே
    மாநிறைவு இல்லதும் பன்நாட்கு ஆகும்
    நூறுசெறு ஆயினும் தமித்துப்புக்கு உணினே
    வாய்புகு வதனினும் கால்பெரிது கெடுக்கும்
    அறிவுடை வேந்தன் நெறியறிந்து கொளினே
    கோடி யாத்து நாடுபெரிது நந்தும்
    மெல்லியன் கிழவன் ஆகி வைகலும்
    வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு
    பரிவுதப எடுக்கும் பிண்டம் நச்சின்
    யானை புக்க புலம்போலத்
    தானும் உண்ணான் உலகமும் கெடுமே

    பிசிராந்தையார்

  • உண்டால் அம்ம இவ்வுலகம் இந்திரர்

    புறநானூறு

    உண்டால் அம்ம இவ்வுலகம் இந்திரர்
    அமிழ்தம் இயைவ தாயினும் இனிதுஎனத்
    தமியர் உண்டலும் இலரே முனிவிலர்
    துஞ்சலும் இலர் பிறர் அஞ்சுவது அஞ்சிப்
    புகழ்எனின் உயிருங் கொடுக்குவர் பழியெனின்
    உலகுடன் பெறினும் கொள்ளலர் அயர்விலர்
    அன்ன மாட்சி அனைய ராகித்
    தமக்கென முயலா நோன்தாள்
    பிறர்க்கென முயலுநர் உண்மை யானே

    கடலுள் மாய்ந்த இளம்பெரு வழுதி