Tag: வெண்பா

  • பருத்திப் பெண்டின் பனுவல் அன்ன

    புறநானூறு

    பருத்திப் பெண்டின் பனுவல் அன்ன
    நெருப்புச் சினந்தணிந்த நிணந்தயங்கு கொழுங்குறை
    பரூஉக் கண் மண்டை யடு ஊழ்மாறு பெயர
    உண்கும் எந்தை நிற் காண்குவந் திசினே
    நள் ளாதார் மிடல் சாய்ந்த
    வல்லாள நின் மகிழிருக் கையே
    உழுத நோன் பகடு அழிதின் றாங்கு
    நல்லமிழ்து ஆக நீ நயந்துண்ணும் நறவே
    குன்றத் தன்ன களிறு பெயரக்
    கடந்தட்டு வென்றோனும் நிற் கூறும்மே
    ‘வெலீஇயோன் இவன்’ எனக்
    ‘கழலணிப் பொலிந்த சேவடி நிலங் கவர்பு
    விரைந்து வந்து சமந் தாங்கிய
    வல்வேல் மலையன் அல்லன் ஆயின்
    நல்லமர் கடத்தல் எளிதுமன் நமக்கு’ எனத்
    தோற்றோன் தானும் நிற்கூ றும்மே
    ‘தொலைஇயோன் அவன்’ என
    ஒருநீ ஆயினை பெரும பெரு மழைக்கு
    இருக்கை சான்ற உயர் மலைத்
    திருத்தகு சேஎய் நிற் பெற்றிசி னோர்க்கே

    வடமவண்ணக்கண் பெருஞ்சாத்தனார்

  • பாணன் சூடிய பசும்பொன் தாமரை

    புறநானூறு

    பாணன் சூடிய பசும்பொன் தாமரை
    மாணிழை விறலி மாலையடு விளங்கக்
    கடும்பரி நெடுந்தேர் பூட்டுவிட்டு அசைஇ
    ஊரீர் போலச் சுரத்திடை இருந்தனிர்
    யாரீ ரோ என வனவல் ஆனாக்
    காரென் ஒக்கல் கடும் பசி இரவல
    வென்வேல் அண்ணல் காணா ஊங்கே
    நின்னினும் புல்லியேம் மன்னே இனியே
    இன்னேம் ஆயினேம் மன்னே என்றும்
    உடாஅ போரா ஆகுதல் அறிந்தும்
    படா அம் மஞ்ஞைக்கு ஈத்த எம் கோ
    கடாஅ யானைக் கலிமான் பேகன்
    எத்துணை ஆயினும் ஈதல் நன்று என
    மறுமை நோக்கின்றோ அன்றே
    பிறர் வறுமை நோக்கின்று அவன் கைவண்மையே

    பரணர்

  • நாளன்று போடிப் புள்ளிடைத் தட்பப்

    புறநானூறு

    நாளன்று போடிப் புள்ளிடைத் தட்பப்
    பதனன்று புக்குத் திறனன்று மொழியினும்
    வறிது பெயர்குநர் அல்லர் நெறி கொளப்
    பாடு ஆன்று இரங்கும் அருவிப்
    பீடு கெழு மலையற் பாடி யோரே

    கபிலர்

  • தடவுநிலைப் பலவின் நாஞ்சில் பொருநன்

    புறநானூறு

    தடவுநிலைப் பலவின் நாஞ்சில் பொருநன்
    மடவன் மன்ற செந்நாப் புலவீர்
    வளைக்கை விறலியர் படப்பைக் கொய்த
    அடகின் கண்ணுறை ஆக யாம் சில
    அரிசி வேண்டினெம் ஆகத் தான் பிற
    வரிசை அறிதலின் தன்னும் தூக்கி
    இருங்கடறு வளைஇய குன்றத் தன்ன ஓர்
    பெருங்களிறு நல்கியோனே அன்னதோர்
    தேற்றா ஈகையும் உளதுகொல்
    போற்றார் அம்ம பெரியோர் தம் கடனே

    ஔவையார்

  • நாட் கள் உண்டு நாள்மகிழ் மகிழின்

    புறநானூறு

    நாட் கள் உண்டு நாள்மகிழ் மகிழின்
    யார்க்கும் எளிதே தேர் ஈதல்லே
    தொலையா நல்லிசை விளங்கு மலயன்
    மகிழாது ஈத்த இழையணி நெடுந்தேர்
    பயன்கிழு முள்ளூர் மீமிசைப்
    பட்ட மாரி உறையினும் பலவே

    கபிலர்

  • சுவல் அழுந்தப் பல காய

    புறநானூறு

    சுவல் அழுந்தப் பல காய
    சில் லோதிப் பல்இளை ஞருமே
    அடி வருந்த நெடிது ஏறிய
    கொடி மருங்குல் விறலிய ருமே
    வாழ்தல் வேண்டிப்
    பொய் கூறேன் மெய் கூறுவல்
    ஓடாப் பூட்கை உரவோர் மருக
    உயர் சிமைய உழாஅ நாஞ்சில் பொருந
    மாயா உள்ளமொடு பரிசில் துன்னிக்
    கனிபதம் பார்க்கும் காலை யன்றே
    ஈதல் ஆனான் வேந்தே வேந்தற்குச்
    சாதல் அஞ்சாய் நீயே ஆயிடை
    இருநிலம் மிளிர்ந்திசின் ஆஅங்கு ஒருநாள்
    அருஞ் சமம் வருகுவ தாயின்
    வருந்தலு முண்டு என் பைதலங் கடும்பே

    மருதன் இளநாகனார்

  • கடல் கொளப் படாஅது உடலுநர் ஊக்கார்

    புறநானூறு

    கடல் கொளப் படாஅது உடலுநர் ஊக்கார்
    கழல்புனை திருந்துஅடிக் காரி நின் நாடே
    அழல் புறம் தரூஉம் அந்தணர் அதுவே
    வீயாத் திருவின் விறல் கெழு தானை
    மூவருள் ஒருவன் ‘துப்பா கியர்’ என
    ஏத்தினர் தரூஉங் கூழே நும்குடி
    வாழ்த்தினர் வரூஉம் இரவலர் அதுவே
    வடமீன் புரையுங் கற்பின் மடமொழி
    அரிவை தோள் அளவு அல்லதை
    நினது என இலைநீ பெருமிதத் தையே

    கபிலர்

  • ஆனினம் கலித்த அதர்பல கடந்து

    புறநானூறு

    ஆனினம் கலித்த அதர்பல கடந்து
    மானினம் கலித்த மலையின் ஒழிய
    மீளினம் கலித்த துறைபல நீந்தி
    உள்ளி வந்த வள்ளுயிர்ச் சீறியாழ்
    சிதாஅர் உடுக்கை முதாஅரிப் பாண
    நீயே பேரெண் ணலையே நின்இறை
    ’மாறி வா’ என மொழியலன் மாதோ
    ஒலியிருங் கதுப்பின் ஆயிழை கணவன்
    கிளி மரீஇய வியன் புனத்து
    மரன் அணி பெருங்குரல் அனையன் ஆதலின்
    நின்னை வருதல் அறிந்தனர் யாரே

    மருதன் இளநாகனார்

  • இரங்கு முரசின் இனம் சால் யானை

    புறநானூறு

    இரங்கு முரசின் இனம் சால் யானை
    முந்நீர் ஏணி விறல்கெழு மூவரை
    இன்னும் ஓர் யான் அவாஅறி யேனே
    நீயே முன்யான் அரியு மோனே துவன்றிய
    கயத்திட்ட வித்து வறத்திற் சாவாது
    கழைக் கரும்பின் ஒலிக்குந்து
    கொண்டல் கொண்டநீர் கோடை காயினும்
    கண் ணன்ன மலர்பூக் குந்து
    கருங்கால் வேங்கை மலரின் நாளும்
    பொன் னன்ன வீ சுமந்து
    மணி யன்ன நீர் கடற் படரும்
    செவ்வரைப் படப்பை நாஞ்சிற் பொருந
    சிறுவெள் ளருவிப் பெருங்கல் நாடனை
    நீவா ழியர் நின் தந்தை
    தாய்வா ழியர் நிற் பயந்திசி னோரே

    ஒருசிறைப் பெரியனார்

  • இரவலர் புரவலை நீயும் அல்லை

    புறநானூறு

    இரவலர் புரவலை நீயும் அல்லை
    புரவலர் இரவலர்க்கு இல்லையும் அல்லர்
    இரவலர் உண்மையும் காண்இனி இரவலர்க்கு
    ஈவோர் உண்மையும் காண் இனி நின்ஊர்க்
    கடுமரம் வருந்தத் தந்து யாம் பிணித்த
    நெடுநல் யானை எம் பரிசில்
    கடுமான் தோன்றல் செல்வல் யானே

    பெருஞ்சித்திரனார்