Tag: புறம்

  • பண்டும் பண்டும் பாடுநர் உவப்ப

    புறநானூறு

    பண்டும் பண்டும் பாடுநர் உவப்ப
    விண்தோய் சிமைய விறல்வரைக் கவாஅன்
    கிழவன் சேட்புலம் படரின் இழை அணிந்து
    புன்தலை மடப்பிடி பரிசிலாகப்
    பெண்டிரும் தம்பதம் கொடுக்கும் வண்புகழ்க்
    கண்டீ ரக்கோன் ஆகலின் நன்றும்
    முயங்கல் ஆன்றிசின் யானே பொலந்தேர்
    நன்னன் மருகன் அன்றியும் நீயும்
    முயங்கற்கு ஒத்தனை மன்னே வயங்கு மொழிப்
    பாடுநர்க்கு அடைத்த கதவின் ஆடு மழை
    அணங்குசால் அடுக்கம் பொழியும் நும்
    மணங்கமழ் மால்வரை வரைந்தனர் எமரே

    பெருந்தலைச் சாத்தனார்

  • சேயிழை பெறுகுவை வாள் நுதல் விறலி

    புறநானூறு

    சேயிழை பெறுகுவை வாள் நுதல் விறலி
    தடவுவாய்க் கலித்த மாஇதழ்க் குவளை
    வண்டுபடு புதுமலர்த் தண் சிதர் கலாவப்
    பெய்யினும் பெய்யா தாயினும் அருவி
    கொள்ளுழு வியன்புலத்து உழைகால் ஆட
    மால்புஉடை நெடுவரைக் கோடுதொறு இழிதரும்
    நீரினும் இனிய சாயல்
    பாரி வேள்பால் பாடினை செலினே

    கபிலர்

  • மாசு விசும்பின் வெண் திங்கள்

    புறநானூறு

    மாசு விசும்பின் வெண் திங்கள்
    மூ வைந்தான் முறை முற்றக்
    கடல் நடுவண் கண்டன்ன என்
    இயம் இசையா மரபு ஏத்திக்
    கடைத் தோன்றிய கடைக் கங்குலான்
    பலர் துஞ்சவும் தான் துஞ்சான்
    உலகு காக்கும் உயர் கொள்கை
    கேட்டோன் எந்தை என் தெண்கிணைக் குரலே
    கேட்டற் கொண்டும் வேட்கை தண்டாது
    தொன்றுபடு சிதாஅர் மருங்கு நீக்கி
    மிகப் பெருஞ் சிறப்பின் வீறுசால் நன்கலம்
    _____________________________லவான
    கலிங்கம் அளித்திட்டு என்அரை நோக்கி
    நாரரி நறவின் நாள்மகிழ் தூங்குந்து
    போ தறியேன் பதிப் பழகவும்
    தன்பகை கடிதல் அன்றியும் சேர்ந்தோர்
    பசிப்பகை கடிதலும் வல்லன் மாதோ
    மறவர் மலிந்ததன் ________________
    கேள்வி மலிந்த வேள்வித் தூணத்து
    இருங்கழி இழிதரும் ஆர்கலி வங்கம்
    தேறுநீர்ப் பரப்பின் யாறுசீத்து உய்த்துத்
    துறைதொறும் பிணிக்கும் நல்லூர்
    உறைவின் யாணர் நாடுகிழ வோனே

    கோவூர் கிழார்

  • அடுமகள் முகந்த அளவா வெண்ணெல்

    புறநானூறு

    அடுமகள் முகந்த அளவா வெண்ணெல்
    தொடிமாண் உலக்கைப் பருஉக்குற் றரிசி
    காடி வெள்ளுலைக் கொளீஇ நீழல்
    ஓங்குசினை மாவின் தீங்கனி நறும்புளி
    மோட்டிவரு வராஅல் கோட்டுமீன் கொழுங்குறை
    செறுவின் வள்ளை சிறுகொடிப் பாகல்
    பாதிரி யூழ்முகை அவிழ்விடுத் தன்ன
    மெய்களைந்து இன்னொடு விரைஇ
    மூழ்ப்பப் பெய்த முழுஅவிழ்ப் புழுக்கல்
    அழிகளிற் படுநர் களியட வைகின்
    பழஞ்சோறு அயிலும் முழங்குநீர்ப் படப்பைக்
    காவிரிக் கிழவன் மாயா நல்லிசைக்
    கிள்ளி வளவன் உள்ளி அவன்படர்தும்
    செல்லேன் செல்லேன் பிறர்முகம் நோக்கேன்
    நெடுங்கழைத் தூண்டில் விடுமீன் நொடுத்துக்
    கிணைமகள் அட்ட பாவற் புளிங்கூழ்
    பொழுதுமறுத் துண்ணும் உண்டியேன் அழிவுகொண்டு
    ஒருசிறை இருந்தேன் என்னே இனியே
    அறவர் அறவன் மறவர் மறவன்
    மள்ளர் மள்ளன்தொல்லோர் மருகன்
    இசையிற் கொண்டான் நசையமுது உண்க என
    மீப்படர்ந்து இறந்து வன்கோல் மண்ணி
    வள்பரிந்து கிடந்தஎன் தெண்கண் மாக்கிணை
    விசிப்புறுத்து அமைந்த புதுக்காழ்ப் போர்வை
    அலகின் மாலை ஆர்ப்ப வட்டித்துக்
    கடியும் உணவென்ன கடவுட்கும் தொடேன்
    கடுந்தேர் அள்ளற்கு அசாவா நோன்சுவல்
    பகடே அத்தை யான் வேண்டிவந் தது என
    ஒன்றியான் பெட்டா அளவை அன்றே
    ஆன்று விட்டனன் அத்தை விசும்பின்
    மீன்பூத் தன்ன உருவப் பன்னிரை
    ஊர்தியடு நல்கி யோனே சீர்கொள
    இழுமென இழிதரும் அருவி
    வான்தோய் உயர்சிமைத் தோன்றிக் கோவே

    ஐயூற் முடவனார்

  • மதிநிலாக் கரப்ப வெள்ளி ஏர்தர

    புறநானூறு

    மதிநிலாக் கரப்ப வெள்ளி ஏர்தர
    வகைமாண் நல்லில்
    பொறிமலர் வாரணம் பொழுது அறிந்து இயம்ப
    பொய்கைப் பூமுகை மலரப் பாணர்
    கைவல் சீறியாழ் கடன் அறிந்து இயக்க
    இரவுப் புறம் பெற்ற ஏம வைகறைப்
    பரிசிலர் வரையா விரைசெய் பந்தர்
    வரிசையின் இறுத்த வாய்மொழி வஞ்சன்
    நகைவர் குறுகின் அல்லது பகைவர்க்குப்
    புலியினம் மடிந்த கல்லளை போலத்
    துன்னல் போகிய பெரும்பெயர் மூதூர்
    மதியத்து அன்னஎன் அரிக்குரல் தடாரி
    இரவுரை நெடுவார் அரிப்ப வட்டித்து
    உள்ளி வருநர் கொள்கலம் நிறைப்போய்
    தள்ளா நிலையை யாகியர் எமக்கு என
    என்வரவு அறீஇச்
    சிறி திற்குப் பெரிது உவந்து
    விரும்பிய முகத்த னாகி என் அரைத்
    துரும்புபடு சிதாஅர் நீக்கித் தன் அரைப்
    புகைவிரிந் தன்ன பொங்குதுகில் உடீஇ
    அழல்கான் றன்ன அரும்பெறல் மண்டை
    நிழல்காண் தேறல் நிறைய வாக்கி
    யான்உண அருளல் அன்றியும் தான்உண்
    மண்டைய கண்ட மான்வறைக் கருனை
    கொக்குஉகிர் நிமிரல் ஒக்கல் ஆர
    வரையுறழ் மார்பின் வையகம் விளக்கும்
    விரவுமணி ஒளிர்வரும் அரவுஉறழ் ஆரமொடு
    புரையோன் மேனிப் பூந்துகில் கலிங்கம்
    உரைசெல அருளி யோனே
    பறைஇசை அருவிப் பாயல் கோவே

    திருத்தாமனார்

  • உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்

    புறநானூறு

    உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
    பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே
    பிறப்பு ஓர் அன்ன உடன்வயிற்று உள்ளும்
    சிறப்பின் பாலால் தாயும் மனம் திரியும்
    ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும்
    மூத்தோன் வருக என்னாது அவருள்
    அறிவுடை யோன் ஆறு அரசும் செல்லும்
    வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும்
    கீழ்ப்பால் ஒருவன் கற்பின்
    மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே

    ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன்

  • வெள்ளியும் இருவிசும்பு ஏர்தரும் புள்ளும்

    புறநானூறு

    வெள்ளியும் இருவிசும்பு ஏர்தரும் புள்ளும்
    உயர்சினைக் குடம்பைக் குரல்தோற் றினவே
    பொய்கையும் போடுகண் விழித்தன பையச்
    சுடரும் சுருங்கின்று ஒளியே பாடெழுந்து
    இரங்குகுரல் முரசமொடு வலம்புரி ஆர்ப்ப
    இரவுப் புறங்கண்ட காலைத் தோன்றி
    எஃகுஇருள் அகற்றும் ஏமப் பாசறை
    வைகறை அரவம் கேளியர் பலகோள்
    செய்தார் மார்ப எழுமதி துயில் எனத்
    தெண்கண் மாக்கிணை தெளிர்ப்ப ஒற்றி
    நெடுங்கடைத் தோன்றி யேனே அது நயந்து
    உள்ளி வந்த பரிசிலன் இவன் என
    நெய்யுறப் பொரித்த குய்யுடை நெடுஞ்சூடு
    மணிக்கலன் நிறைந்த மணநாறு தேறல்
    பாம்புரித் தன்ன வான்பூங் கலிங்கமொடு
    மாரி யன்ன வண்மையின் சொரிந்து
    வேனில் அன்ன என் வெப்பு நீங்க
    அருங்கலம் நல்கி யோனே என்றும்
    செறுவிற் பூத்த சேயிதழ்த் தாமரை
    அறுதொழில் அந்தணர் அறம்புரிந்து எடுத்த
    தீயடு விளங்கும் நாடன் வாய்வாள்
    வலம்படு தீவிற் பொலம்பூண் வளவன்
    எறிதிரைப் பெருங்கடல் இறுதிக்கண் செலினும்
    தெறுகதிர்க் கனலி தென்திசைத் தோன்றினும்
    என்னென்று அஞ்சலம் யாமே வென்வெல்
    அருஞ்சமம் கடக்கும் ஆற்றல் அவன்
    திருந்துகழல் நோன்தாள் தண்நிழ லேமே

    எருக்காட்டூர்த் தாயங் கண்ணனார்

  • தூர்ந்த கிடங்கின் சோர்ந்த ஞாயில்

    புறநானூறு

    தூர்ந்த கிடங்கின் சோர்ந்த ஞாயில்
    சிதைந்த இஞ்சிக் கதுவாய் மூதூர்
    யாங்கா வதுகொல் தானே தாங்காது
    படுமழை உருமின் இறங்கு முரசின்
    கடுமான் வேந்தர் காலை வந்து எம்
    நெடுநிலை வாயில் கொட்குவர் மாதோ
    பொருதாது அமருவர் அல்லர் போர் உழந்து
    அடுமுரண் முன்பின் தன்னையர் ஏந்திய
    வடிவேல் எ·கின் சிவந்த உண்கண்
    தொடியுறழ் முன்கை இளையோள்
    அணிநல் லாகத்து அரும்பிய சுணங்கே

    மதுரை ஓலைக்கடைக் கண்ணம் புகுந்தார் ஆயத்தனார்

  • கீழ் நீரால் மீன் வழங்குந்து

    புறநானூறு

    கீழ் நீரால் மீன் வழங்குந்து
    மீநீரான் கண்ணன்ன மலர்பூக் குந்து
    கழி சுற்றிய விளை கழனி
    அரிப் பறையாற் புள் ளோப்புந்து
    நெடுநீர் தொகூஉம் மணல் தண்கான்
    மென் பறையாற் புள் இரியுந்து
    நனைக் கள்ளின் மனைக் கோசர்
    தீந் தேறல் நறவு மகிழ்ந்து
    தீங் குரவைக் கொளைத்தாங் குந்து
    உள்ளி லோர்க்கு வலியா குவன்
    கேளி லோர்க்குக் கேளா குவன்
    கழுமிய வென்வேல் வேளே
    வளநீர் வாட்டாற்று எழினி யாதன்
    கிணை யேம் பெரும
    கொழுந் தடிய சூடு என்கோ
    வளநனையின் மட்டு என்கோ
    குறு முயலின் நிணம் பெய்தந்த
    நறுநெய்ய சோறு என்கோ
    திறந்து மறந்து கூட்டு முதல்
    முகந்து கொள்ளும் உணவு என்கோ
    அன்னவை பலபல ______________
    _________________________ வருந்திய
    இரும்பேர் ஒக்கல் அருந்தி எஞ்சிய
    அளித்து உவப்ப ஈத்தோன் எந்தை
    எம்மோர் ஆக்கக் கங்கு உண்டே
    மாரி வானத்து மீன் நாப்பண்
    விரி கதிர வெண் திங்களின்
    விளங்கித் தோன்றுக அவன் கலங்கா நல்லிசை
    யாமும் பிறரும் வாழ்த்த நாளும்
    நிரைசால் நன்கலன் நல்கி
    உரைசெலச் சுரக்க அவன் பாடல்சால் வளனே

    மாங்குடி கிழார்

  • உருகெழு ஞாயிற்று ஒண்கதிர் மிசைந்த

    புறநானூறு

    உருகெழு ஞாயிற்று ஒண்கதிர் மிசைந்த
    முளிபுல் கானம் குழைப்பக் கல்லென
    அதிர்குரல் ஏறோடு துளிசொரிந் தாங்குப்
    பசிதினத் திரங்கிய கசிவுடை யாக்கை
    அவிழ்புகுவு அறியா தாகலின் வாடிய
    நெறிகொள் வரிக்குடர் குனிப்பத் தண்ணெனக்
    குய்கொள் கொழுந்துவை நெய்யுடை அடிசில்
    சிறுபொன் நன்கலஞ் சுற்ற இரீஇக்
    கோடின் றாக பாடுநர் கடும்பு என
    அரிதுபெறு பொலங்கலம் எளிதினின் வீசி
    நட்டோர் நட்ட நல்லிசைக் குமணன்
    மட்டார் மறுகின் முதிரத் தோனே
    செல்குவை யாயின் நல்குவை பெரிது எனப்
    பல்புகழ் நுவலுநர் கூற வல் விரைந்து
    உள்ளம் துரப்ப வந்தனென் எள்ளுற்று
    இல்லுளைக் குடுமிப் புதல்வன் பன்மாண்
    பாலில் வறுமுலைசுவைத்தனன்பெறாஅன்
    கூழும் சோறும் கடைஇ ஊழின்
    உள்ளில் வருங்கலம் திறந்து அழக் கண்டு
    மறப்புலி உரைத்தும் மதியங் காட்டியும்
    நொந்தனள் ஆகி நுந்தையை உள்ளிப்
    பொடிந்தநின் செவ்வி காட்டு எனப் பலவும்
    வினவல் ஆனா ளாகி நனவின்
    அல்லல் உழப்போள் மல்லல் சிறப்பச்
    செல்லாச் செல்வம் மிகுந்தனை வல்லே
    விடுதல் வேண்டுவல் அத்தை படுதிரை
    நீர்சூழ் நிலவரை உயர நின்
    சீர்கெழு விழுப்புகழ் ஏத்துகம் பலவே

    பெருஞ்சித்திரனார்