புறநானூறு
பல் சான்றீரே பல் சான்றீரே
குமரி மகளிர் கூந்தல் புரைய
அமரின் இட்ட அருமுள் வேலிக்
கல்லென் பாசறைப் பல்சான் றீரே
முரசுமுழங்கு தானைநும் அரசும் ஓம்புமின்
ஒளிறு ஏந்து மருப்பின்நும் களிறும் போற்றுமின்
எனைநாள் தங்கும்நும் போரே அனைநாள்
எறியர் எறிதல் யாவணது எறிந்தோர்
எதிர்சென்று எறிதலும் செல்லான் அதனால்
அறிந்தோர் யார் அவன் கண்ணிய பொருளே
பலம் என்று இகழ்தல் ஓம்புமின் உதுக்காண்
நிலன்அளப் பன்ன நில்லாக் குறுநெறி
வண்பரிப் புரவிப் பண்புபா ராட்டி
எல்லிடைப் படர்தந் தோனே கல்லென
வேந்தூர் யானைக்கு அல்லது
ஏந்துவன் போலான் தன் இலங்கிலை வேலே
ஆவூர் மூலங்கிழார்