Tag: புறம்

  • கலம்செய் கோவே கலம்செய் கோவே

    புறநானூறு

    கலம்செய் கோவே கலம்செய் கோவே
    அச்சுடைச் சாகாட்டு ஆரம் பொருந்திய
    சிறுவெண் பல்லி போலத் தன்னொடு
    சுரம்பல வந்த எமக்கும் அருளி
    வியன்மலர் அகன்பொழில் ஈமத் தாழி
    அகலிது ஆக வனைமோ
    நனந்தலை மூதூர்க் கலம்செய் கோவே

  • மாவா ராதே மாவா ராதே

    புறநானூறு

    மாவா ராதே மாவா ராதே
    எல்லார் மாவும் வந்தன எம்இல்
    புல்லுளைக் குடுமிப் புதல்வற் றந்த
    செல்வன் ஊரும் மாவா ராதே
    இருபேர் யாற்ற ஒருபெருங் கூடல்
    விலங்கிடு பெருமரம் போல
    உலந்தன்று கொல் அவன் மலைந்த மாவே

    எருமை வெளியனார்

  • ஐயோ எனின்யான் புலி அஞ்சுவலே

    புறநானூறு

    ஐயோ எனின்யான் புலி அஞ்சுவலே
    அணைத்தனன் கொளினே அகன்மார்பு எடுக்கல்லேன்
    என்போல் பெருவிதிர்ப்பு உறுக நின்னை
    இன்னாது உற்ற அறனில் கூற்றே
    திரைவளை முன்கை பற்றி
    வரைநிழல் சேர்கம் நடந்திசின் சிறிதே

    வன்பரணர்

  • மணிதுணர்ந் தன்ன மாக்குரல் நொச்சி

    புறநானூறு

    மணிதுணர்ந் தன்ன மாக்குரல் நொச்சி
    போதுவிரி பன்மர னுள்ளும் சிறந்த
    காதல் நன்மரம் நீ நிழற் றிசினே
    கடியுடை வியன்நகர்க் காண்வரப் பொலிந்த
    தொடியுடை மகளிர் அல்குலும் கிடத்தி
    காப்புடைப் புரிசை புக்குமாறு அழித்தலின்
    ஊர்ப்புறம் கொடாஅ நெடுந்தகை
    பீடுகெழு சென்னிக் கிழமையும் நினதே

    மோசிசாத்தனார்

  • நீரறவு அறியா நிலமுதற் கலந்த

    புறநானூறு

    நீரறவு அறியா நிலமுதற் கலந்த
    கருங்குரல் நொச்சிக் கண்ணார் குரூஉத்தழை
    மெல்இழை மகளிர் ஐதகல் அல்குல்
    தொடலை ஆகவும் கண்டனம் இனியே
    வெருவரு குருதியடு மயங்கி உருவுகரந்து
    ஒறுவாய்ப் பட்ட தெரியல் ஊன்செத்துப்
    பருந்துகொண்டு உகப்பயாம் கண்டனம்
    மறம்புகல் மைந்தன் மலைந்த மாறே

    காமக்கண்ணியார்

  • பன்மீன் இமைக்கும் மாக விசும்பின்

    புறநானூறு

    பன்மீன் இமைக்கும் மாக விசும்பின்
    இரங்கு முரசின் இனம்சால் யானை
    நிலந்தவ உருட்டிய நேமி யோரும்
    சமங்கண் கூடித் தாம்வேட் பவ்வே
    நறுவிரை துறந்த நாறா நரைத்தலைச்
    சிறுவர் தாயே பேரிற் பெண்டே
    நோகோ யானே நோக்குமதி நீயே
    மறப்படை நுவலும் அரிக்குரல் தண்ணுமை
    இன்னிசை கேட்ட துன்னரும் மறவர்
    வென்றிதரு வேட்கையர் மன்றம் கொண்மார்
    பேரமர் உழந்த வெருவரு பறந்தலை
    விழுநவி பாய்ந்த மரத்தின்
    வாண்மிசைக் கிடந்த ஆண்மையோன் திறத்தே

    கழாத்தலையார்

  • பாசறை யீரே பாசறை யீரே

    புறநானூறு

    பாசறை யீரே பாசறை யீரே
    துடியன் கையது வேலே அடிபுணர்
    வாங்குஇரு மருப்பின் தீந்தொடைச் சீறியாழ்ப்பொருள்
    பாணன் கையது தோலே காண்வரக்
    கடுந்தெற்று மூடையின்
    வாடிய மாலை மலைந்த சென்னியன்
    வேந்துதொழில் அயரும் அருந்தலைச் சுற்றமொடு
    நெடுநகர் வந்தென விடுகணை மொசித்த
    மூரி வேண்டோள்
    சேறுபடு குருதிச் செம்மலுக் கோஒ
    மாறுசெறு நெடுவேல் மார்புஉளம் போக
    நிணம்பொதி கழலொடு நிலம் சேர்ந் தனனெ
    அதுகண்டு பரந்தோர் எல்லாம் புகழத் தலைபணிந்து
    இறைஞ்சி யோனே குருசில் பிணங்குகதிர்
    அலமரும் கழனித் தண்ணடை ஒழிய
    இலம்பாடு ஒக்கல் தலைவற்குஓர்
    கரம்பைச் சீறூர் நல்கினன் எனவே

    அரிசில் கிழார்

  • வருகதில் வல்லே வருகதில் வல்என

    புறநானூறு

    வருகதில் வல்லே வருகதில் வல்என
    வேந்துவிடு விழுத்தூது ஆங்காங்கு இசைப்ப
    நூலரி மாலை சூடிக் காலின்
    தமியன் வந்த மூதி லாளன்
    அருஞ்சமம் தாங்கி முன்னின்று எறிந்த
    ஒருகை இரும்பிணத்து எயிறு மிறையாகத்
    திரிந்த வாய்வாள் திருத்தாத்
    தனக்குஇரிந் தானைப் பெயர்புறம் நகுமே

    ஓரம் போகியார்

  • ஒண்செங் குரலித் தண்கயம் கலங்கி

    புறநானூறு

    ஒண்செங் குரலித் தண்கயம் கலங்கி
    வாளை நீர்நாய் நாள்இரை பெறூஉப்
    பெறாஅ உறையரா வராஅலின் மயங்கி
    மாறுகொள் முதலையடு ஊழ்மாறு பெயரும்
    அழும்பிலன் அடங்கான் தகையும் என்றும்
    வலம்புரி கோசர் அவைக்களத் தானும்
    மன்றுள் என்பது கெட_______னே பாங்கற்கு
    ஆர்சூழ் குவட்டின் வேல்நிறத்து இங்க
    உயிர்புறப் படாஅ அளவைத் தெறுவரத்
    தெற்றிப் பாவை திணிமணல் அயரும்
    மென்தோள் மகளிர் நன்று புரப்ப
    ________________ ண்ட பாசிலைக்
    கமழ்பூந் தும்பை நுதல் அசைத் தோனே

    அடை நெடுங் கல்வியார்

  • எஃகுஉளம் கழிய இருநில மருங்கின்

    புறநானூறு

    எஃகுஉளம் கழிய இருநில மருங்கின்
    அருங்கடன் இறுத்த பெருஞ்செ யாளனை
    யாண்டுளனோவென வினவுதி ஆயின்
    வருபடை தாங்கிக் கிளர்தார் அகலம்
    அருங்கடன் இறுமார் வயவர் எறிய
    உடம்பும் தோன்றா உயிர்கெட் டன்றே
    மலையுநர் மடங்கி மாறுஎதிர் கழியத்
    அலகை போகிச் சிதைந்து வேறு ஆகிய
    பலகை அல்லது களத்துஒழி யதே
    சேண்விளங்கு நல்லிசை நிறீஇ
    நாநவில் புலவர் வாய் உளானே

    பெருங்கடுங்கோ