Tag: புறம்

  • முற்றிய திருவின் மூவர் ஆயினும்

    புறநானூறு

    முற்றிய திருவின் மூவர் ஆயினும்
    பெட்பின்றி ஈதல் யாம்வேண் டலமே
    விறற்சினம் தணிந்த விரைபரிப் புரவி
    உறுவர் செல்சார்வு ஆகிச் செறுவர்
    தாளுளம் தபுத்த வாள்மிகு தானை
    வெள்வீ வேலிக் கோடைப் பொருந
    சிறியவும் பெரியவும் புழைகெட விலங்கிய
    மான்கணம் தொலைச்சிய கடுவிசைக் கதநாய்
    நோன்சிலை வேட்டுவ நோயிலை யாகுக
    ஆர்கலி யாணர்த் தரீஇய கால் வீழ்த்துக்
    கடல்வயிற் குழீஇய அண்ணலங் கொண்மூ
    நீரின்று பெயரா ஆங்குத் தேரொடு
    ஒளிறுமறுப்பு ஏந்திய செம்மற்
    களிறின்று பெயரல பரிசிலர் கடும்பே

    பெருந்தலைச் சாத்தனார்

  • ஈஎன இரத்தல் இழிந்தன்று அதன்எதிர்

    புறநானூறு

    ஈஎன இரத்தல் இழிந்தன்று அதன்எதிர்
    ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று
    கொள்எனக் கொடுத்தல் உயர்ந்தன்று அதன்எதிர்
    கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று
    தெண்ணீர்ப் பரப்பின் இமிழ்திரைப் பெருங்கடல்
    உண்ணார் ஆகுப நீர்வேட் டோரே
    ஆவும் மாவும் சென்றுஉணக் கலங்கிச்
    சேறோடு பட்ட சிறுமைத்து ஆயினும்
    உண்ணீர் மருங்கின் அதர்பல ஆகும்
    புள்ளும் பொழுதும் பழித்தல் அல்லதை
    உள்ளிச் சென்றோர் பழியலர் அதனாற்
    புலவேன் வாழியர் ஓரி விசும்பின்
    கருவி வானம் போல
    வரையாது சுரக்கும் வள்ளியோய் நின்னே

    கழைதின் யானையார்

  • கழிந்தது பொழிந்ததென வான்கண் மாறினும்

    புறநானூறு

    கழிந்தது பொழிந்ததென வான்கண் மாறினும்
    தொல்லது விளைந்தென நிலம்வளம் கரப்பினும்
    எல்லா உயிர்க்கும் இல்லால் வாழ்க்கை
    இன்னும் தம்மென எம்ம்னோர் இரப்பின்
    முன்னும் கொண்டிர்என நும்மனோர் மறுத்தல்
    இன்னாது அம்ம இயல்தேர் அண்ணல்
    இல்லது நிரப்பல் ஆற்றா தோரினும்
    உள்ளி வருநர் நசையிழப் போரே
    அனையையும் அல்லை நீயே ஒன்னார்
    ஆர்எயில் அவர்கட்கு ஆகவும் நுமது எனப்
    பாண்கடன் இறுக்கும் வள்ளியோய்
    பூண்கடன் எந்தை நீஇரவலர் புரவே

    ஊன்பொதி பசுங்குடையார்

  • வெட்சிக் கானத்து வேட்டுவர் ஆட்டக்

    புறநானூறு

    வெட்சிக் கானத்து வேட்டுவர் ஆட்டக்
    கட்சி காணாக் கடமா நல்லேறு
    கடறுமணி கிளரச் சிதறுபொன் மிளிரக்
    கடிய கதழும் நெடுவரைப் படப்பை
    வென்றி நிலை இய விழுப்புகழ் ஒன்றி
    இருபால் பெயரிய உருகெழு மூதூர்க்
    கோடிபல அடுக்கிய பொருள் நுமக்கு உதவிய
    நீடு நிலை அரையத்துக் கேடும் கேள் இனி
    நுந்தை தாயம் நிறைவுற எய்திய
    ஒலியற் கண்ணிப் புலிகடி மாஅல்
    நும்போல் அறிவின் நுமருள் ஒருவன்
    புகழ்ந்த செய்யுள் கழாஅத் தலையை
    இகழ்ந்ததன் பயனே இயல்தேர் அண்ணல்
    எவ்வி தொல்குடிப் படீஇயர் மற்று இவர்
    கைவண் பாரி மகளிர் என்றஎன்
    தேற்றாப் புன்சொல் நோற்றிசின் பெரும
    விடுத்தனென் வெலீஇயர் நின் வேலே அடுக்கத்து
    அரும்பு அற மலர்ந்த கருங்கால் வேங்கை
    மாத்தகட்டு ஒள்வீ தாய துறுகல்
    இரும்புலி வரிப்புறம் கடுக்கும்
    பெருங்கல் வைப்பின் நாடுகிழ வோயே

    கபிலர்

  • இவர் யார் என்குவை ஆயின் இவரே

    புறநானூறு

    இவர் யார் என்குவை ஆயின் இவரே
    ஊருடன் இரவலர்க்கு அருளித் தேருடன்
    முல்லைக்கு ஈத்த செல்லா நல்லிசை
    படுமணி யானைப்பறம்பின் கோமான்
    நெடுமாப் பாரி மகளிர் யானே
    தந்தை தோழன் இவர்என் மகளிர்
    அந்தணன் புலவன் கொண்டுவந் தனனே
    நீயே வடபால் முனிவன் தடவினுள் தோன்றிச்
    செம்பு புனைந்து இயற்றிய சேண்நெடும் புரிசை
    உவரா ஈகைத் துவரை ஆண்டு
    நாற்பத்து ஒன்பது வழிமுறை வந்த
    வேளிருள் வேளே விறற்போர் அண்ணல்
    தாரணி யானைச் சேட்டிருங் கோவே
    ஆண்கடன் உடைமையின் பாண்கடன் ஆற்றிய
    ஒலியற் கண்ணிப் புலிகடி மா அல்
    யான்தர இவரைக் கொண்மதி வான்கவித்து
    இருங்கடல் உடுத்தஇவ் வையகத்து அருந்திறல்
    பொன்படு மால்வரைக் கிழவ வென்வேல்
    உடலுநர் உட்கும் தானைக்
    கெடல்அருங் குறைய நாடுகிழ வோயே

    கபிலர்

  • பனி வரை நிவந்த பாசிலைப் பலவின்

    புறநானூறு

    பனி வரை நிவந்த பாசிலைப் பலவின்
    கனி கவர்ந்து உண்ட கரு விரல் கடுவன்
    செம் முக மந்தியொடு சிறந்து சேண் விளங்கி
    மழை மிசை அறியா மால் வரை அடுக்கத்து
    கழை மிசைத் துஞ்சும் கல்லக வெற்ப
    நிணம் தின்று செருக்கிய நெருப்புத் தலை நெடு வேல்
    களம் கொண்டு கனலும் கடுங்கண் யானை
    விளங்கு மணிக் கொடும் பூண் விச்சிக் கோவே
    இவரே பூத் தலை அறாஅப் புனை கொடி முல்லை
    நாத் தழும்பு இருப்பப் பாடாது ஆயினும்
    கறங்கு மணி நெடுந் தேர் கொள்க எனக் கொடுத்த
    பரந்து ஓங்கு சிறப்பின் பாரி மகளிர்
    யானே பரிசிலன் மன்னும் அந்தணன் நீயே
    வரிசையில் வணக்கும் வாள் மேம்படுநன்
    நினக்கு யான் கொடுப்பக் கொண்மதி சினப் போர்
    அடங்கா மன்னரை அடக்கும்
    மடங்கா விளையுள் நாடு கிழவோயே

    கபிலர்

  • கடவுள் ஆலத்துத் தடவுச்சினைப் பல்பழம்

    புறநானூறு

    கடவுள் ஆலத்துத் தடவுச்சினைப் பல்பழம்
    நெருநல் உண்டனம் என்னாது பின்னும்
    செலவுஆ னாவே கலிகொள் புள்ளினம்
    அனையர் வாழியோ இரவலர் அவரைப்
    புரவுஎதிர் கொள்ளும் பெருஞ்செய் ஆடவர்
    உடைமை ஆகும் அவர் உடைமை
    அவர் இன்மை ஆகும் அவர் இன்மையே

    பெரும்பதுமனார்

  • கலஞ்செய் கோவே கலங்செய் கோவே

    புறநானூறு

    கலஞ்செய் கோவே கலங்செய் கோவே
    இருள்தினிந் தன்ன குரூஉத்திறள் பருஉப்புகை
    அகல்இரு விசும்பின் ஊன்றுஞ் சூளை
    நனந்தலை மூதூர்க் கலஞ்செய் கோவே
    அளியை நீயே யாங்கு ஆகுவை கொல்
    நிலவரை சூட்டிய நீள்நெடுந் தானைப்
    புலவர் புகழ்ந்த பொய்யா நல்இசை
    விரிகதிர் ஞாயிறு விசும்பு இவர்ந் தன்ன
    சேண்விளங்கு சிறப்பின் செம்பியர் மருகன்
    கொடிநுடங்கு யானை நெடுமா வளவன்
    தேவர் உலகம் எய்தினன் ஆதலின்
    அன்னோர் கவிக்கும் கண்ணகன் தாழி
    வனைதல் வேட்டனை அயின் எனையதூஉம்
    இருநிலம் திகிரியாப் பெருமலை
    மண்ணா வனைதல் ஒல்லுமோ நினக்கே

    ஐயூர் முடவனார்

  • கன்று அமர் ஆயம் கானத்து அல்கவும்

    புறநானூறு

    கன்று அமர் ஆயம் கானத்து அல்கவும்
    வெங்கால் வம்பலர் வேண்டுபுலத்து உறையவும்
    களம்மலி குப்பை காப்பில வைகவும்
    விலங்குபகைகடிந்த கலங்காச் செங்கோல்
    வையகம் புகழ்ந்த வயங்குவினை ஒள்வாள்
    பொய்யா எழினி பொருதுகளம் சேர
    ஈன்றோர் நீத்த குழவி போலத்
    தன்அமர் சுற்றம் தலைத்தலை இனையக்
    கடும்பசி கலக்கிய இடும்பைகூர் நெஞ்சமொடு
    நோய் உழந்து வைகிய உலகிலும் மிக நனி
    நீ இழந் தனையே அறனில் கூற்றம்
    வாழ்தலின் வரூஉம் வயல்வளன் அறியான்
    வீழ்குடி உழவன் உண்ணாய் ஆயின்
    நேரார் பல்லுயிர் பருகி
    ஆர்குவை மன்னோ அவன் அமர்அடு களத்தே

    அரிசில் கிழார்

  • ஆடு இயல் அழல் குட்டத்து

    புறநானூறு

    ஆடு இயல் அழல் குட்டத்து
    ஆர் இருள் அரை இரவில்
    முடப் பனையத்து வேர் முதலாக்
    கடைக் குளத்துக் கயம் காயப்
    பங்குனி உயர் அழுவத்துத்
    தலை நாள்மீன் நிலை திரிய
    நிலை நாள்மீன் அதன்எதிர் ஏர்தரத்
    தொல் நாள்மீன் துறை படியப்
    பாசிச் செல்லாது ஊசித் துன்னாது
    அளக்கர்த் திணை விளக்காகக்
    கனைஎரி பரப்பக் கால்எதிர்பு பொங்கி
    ஒருமீன் விழுந்தன்றால் விசும்பி னானே
    அதுகண்டு யாமும்பிறரும் பல்வேறு இரவலர்
    பறைஇசை அருவி நல்நாட்டுப் பொருநன்
    நோயிலன் ஆயின் நன்றுமன் தில் லென
    அழிந்த நெஞ்சம் மடியுளம் பரப்ப
    அஞ்சினம் எழுநாள் வந்தன்று இன்றே
    மைந்துடை யானை கை வைத்து உறங்கவும்
    திண்பிணி முரசும் கண்கிழிந்து உருளவும்
    காவல் வெண்குடை கால்பரிந்து உலறவும்
    கால்இயல் கலிமாக் கதிஇன்றி வைகவும்
    மேலோர் உலகம் எய்தினன் ஆகலின்
    ஒண்தொடி மகளிர்க்கு உறுதிணை ஆகித்
    தன்துணை ஆயம் மறந்தனன் கொல்லோ-
    பகைவர்ப் பிணிக்கும் ஆற்றல் நசைவர்க்கு
    அளந்து கொடை அறியா ஈகை
    மணிவரை அன்ன மாஅ யோனே

    கூடலூர் கிழார்