Tag: புறம்

  • ஒளிறுவாள் மன்னர் ஒண்சுடர் நெடுநகர்

    புறநானூறு

    ஒளிறுவாள் மன்னர் ஒண்சுடர் நெடுநகர்
    வெளிறுகண் போகப் பன்னாள் திரங்கிப்
    பாடிப் பெற்ற பொன்னணி யானை
    தமர்எனின் யாவரும் புகுப அமர்எனின்
    திங்களும் நுழையா எந்திரப் படுபுழைக்
    கண்மாறு நீட்ட நணிநணி இருந்த
    குறும்பல் குறும்பின் ததும்ப வைகிப்
    புளிச்சுவை வேட்ட செங்கண் ஆடவர்
    தீம்புளிக் களாவொடு துடரி முனையின்
    மட்டுஅறல் நல்யாற்று எக்கர் ஏறிக்
    கருங்கனி நாவல் இருந்துகொய்து உண்ணும்
    பெரும்பெயர் ஆதி பிணங்கரில் குடநாட்டு
    எயினர் தந்த எய்ம்மான் எறிதசைப்
    பைஞ்ஞிணம் பெருத்த பசுவெள் அமலை
    வருநர்க்கு வரையாது தருவனர் சொரிய
    இரும்பனங் குடையின் மிசையும்
    பெரும்புலர் வைகறைச் சீர்சா லாதே

    ஆவூர் மூலங்கிழார்

  • ஓரில் நெய்தல் கறங்க ஓர்இல்

    புறநானூறு

    ஓரில் நெய்தல் கறங்க ஓர்இல்
    ஈர்ந்தண் முழவின் பாணி ததும்பப்
    புணர்ந்தோர் பூவணி அணியப் பிரிந்தோர்
    பைதல் உண்கண் பனிவார்பு உறைப்பப்
    படைத்தோன் மன்ற அப் பண்பி லாளன்
    இன்னாது அம்ம இவ் வுலகம்
    இனிய காண்க இதன் இயல்புணர்ந் தோரே

  • ஓரைஆயத்து ஒண்தொடி மகளிர்

    புறநானூறு

    ஓரைஆயத்து ஒண்தொடி மகளிர்
    கேழல் உழுத இருஞ்சேறு கிளைப்பின்
    யாமை ஈன்ற புலவுநாறு முட்டையைத்
    தேன்நாறு ஆம்பல் கிழங்கொடு பெறூஉம்
    இழுமென ஒலிக்கும் புனலம் புதவின்
    பெருமா விலங்கைத் தலைவன் சீறியாழ்
    இல்லோர் சொன்மலை நல்லியக் கோடனை
    உடையை வாழி யெற் புணர்ந்த பாலே
    பாரி பறம்பிற் பனிச்சுனைத் தெண்ணீர்
    ஓரூர் உண்மையின் இகழ்ந்தோர் போலக்
    காணாது கழிந்த வைகல் காணா
    வழிநாட்கு இரங்கும் என் நெஞ்சம் அவன்
    கழிமென் சாயல் காண்தொறும் நினைந்தே

    புறத்திணை நன்னாகனார்

  • அதள்எறிந் தன்ன நெடுவெண் களரின்

    புறநானூறு

    அதள்எறிந் தன்ன நெடுவெண் களரின்
    ஒருவன் ஆட்டும் புல்வாய் போல
    ஓடி உய்தலும் கூடும்மன்
    ஒக்கல் வாழ்க்கை தட்கும்மா காலே

    ஓரேருழவர்

  • எந்தை வாழி ஆதனுங்க என்

    புறநானூறு

    எந்தை வாழி ஆதனுங்க என்
    நெஞ்சம் திறப்போர் நிற்காண் குவரே
    நின்யான் மறப்பின் மறக்குங் காலை
    என்உயிர் யாக்கையிற் பிரியும் பொழுதும்
    என்யான் மறப்பின் மறக்குவென் வென்வேல்
    விண்பொரு நெடுங்குடைக் கொடித்தேர் மோரியர்
    திண்கதிர்த் திகிரி திரிதரக் குறைத்த
    உலக இடைகழி அறைவாய் நிலைஇய
    மலர்வாய் மண்டிலத் தன்ன நாளும்
    பலர்புரவு எதிர்ந்த அறத்துறை நின்னே

    கள்ளில் ஆத்திரையனார்

  • யாண்டுபல வாக நரையில ஆகுதல்

    புறநானூறு

    யாண்டுபல வாக நரையில ஆகுதல்
    யாங்கு ஆகியர் என வினவுதிர் ஆயின்
    மாண்டஎன் மனைவியோடு மக்களும் நிரம்பினர்
    யான்கண் டனையர்என் இளையரும் வேந்தனும்
    அல்லவை செய்யான் காக்க அதன்தலை
    ஆன்றுஅவிந்து அடங்கிய கொள்கைச்
    சான்றோர் பலர் யான் வாழும் ஊரே

    பிசிராந்தையர்

  • அணங்குடை அவுணர் கணம்கொண்டு ஒளித்தெனச்

    புறநானூறு

    அணங்குடை அவுணர் கணம்கொண்டு ஒளித்தெனச்
    சேண்விளங்கு சிறப்பின் ஞாயிறு காணாது
    இருள்கண் கெடுத்த பருதி ஞாலத்து
    இடும்பைகொள் பருவரல் தீரக் கடுந்திறல்
    அஞ்சன் உருவன் தந்து நிறுத்தாங்கு
    அர சிழந்து இருந்த அல்லற் காலை
    முரசுஎழுந்து இரங்கும் முற்றமொடு கரைபொருது
    இரங்குபுனல் நெரிதரு மிகுபெருங் காவிரி
    மல்லல் நன்னாட்டு அல்லல் தீரப்
    பொய்யா நாவிற் கபிலன் பாடிய
    மையணி நெடுவரை ஆங்கண் ஒய்யெனச்
    செருப்புகல் மறவர் செல்புறம் கண்ட
    எள்ளறு சிறப்பின் முள்ளூர் மீமிசை
    அருவழி இருந்த பெருவிறல் வளவன்
    மதிமருள் வெண்குடை காட்டி அக்குடை
    புதுமையின் நிறுத்த புகழ்மேம் படுந
    விடர்ப்புலி பொறித்த கோட்டைச் சுடர்ப் பூண்
    சுரும்பார் கண்ணிப் பெரும்பெயர் நும்முன்
    ஈண்டுச்செய் நல்வினை யாண்டுச்சென்று உணீஇயர்
    உயர்ந்தோர் உலகத்துப் பெயர்ந்தனன் ஆகலின்
    ஆறுகொள் மருங்கின் மாதிரம் துழவும்
    கவலை நெஞ்சத்து அவலந் தீர
    நீதோன் றினையே நிரைத்தார் அண்ணல்
    கல்கண் பொடியக் கானம் வெம்ப
    மல்குநீர் வரைப்பில் கயம்பல உணங்கக்
    கோடை நீடிய பைதறு காலை
    இருநிலம் நெளிய ஈண்டி
    உரும்உரறு கருவிய மழைபொழிந் தாங்கே

    மாறோக்கத்து நப்பசலையார்

  • விளைபதச் சீறிடம் நோக்கி வளைகதிர்

    புறநானூறு

    விளைபதச் சீறிடம் நோக்கி வளைகதிர்
    வல்சி கொண்டு அளை மல்க வைக்கும்
    எலிமுயன் றனைய ராகி உள்ளதம்
    வளன்வலி உறுக்கும் உளம் இலாளரோடு
    இயைந்த கேண்மை இல்லா கியரோ
    கடுங்கண் கேழல் இடம்பட வீழ்ந்தென
    அன்று அவண் உண்ணா தாகி வழிநாள்
    பெருமலை விடரகம் புலம்ப வேட்டெழுந்து
    இருங்களிற்று ஒருத்தல் நல்வலம் படுக்கும்
    புலிபசித் தன்ன மெலிவில் உள்ளத்து
    உரனுடை யாளர் கேண்மையடு
    இயைந்த வைகல் உளவா கியரோ

    சோழன் நல்லுருத்திரன்

  • யான்வாழும் நாளும் பண்ணன் வாழிய

    புறநானூறு

    யான்வாழும் நாளும் பண்ணன் வாழிய
    பாணர் காண்க இவன் கடும்பினது இடும்பை
    யாணர்ப் பழுமரம் புள்இமிழ்ந் தன்ன
    ஊணொலி அரவந் தானும் கேட்கும்
    பொய்யா எழிலி பெய்விடம் நோக்கி
    முட்டை கொண்டு வற்புலம் சேரும்
    சிறுநுண் எறும்பின் சில்லொழுக்கு ஏய்ப்பச்
    சோறுடைக் கையர் வீறுவீறு இயங்கும்
    இருங்கிளைச் சிறாஅர்க் காண்டும் கண்டும்
    மற்றும் மற்றும் வினவுதும் தெற்றெனப்
    பசிப்பிணி மருத்துவன் இல்லம்
    அணித்தோ சேய்த்தோ கூறுமின் எமக்கே

    சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்

  • தெண்கடல் வளாகம் பொதுமை இன்றி

    புறநானூறு

    தெண்கடல் வளாகம் பொதுமை இன்றி
    வெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும்
    நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்
    கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்
    உண்பது நாழி உடுப்பவை இரண்டே
    பிறவும் எல்லாம் ஓரொக் குமே
    அதனால் செல்வத்துப் பயனே ஈதல்
    துய்ப்பேம் எனினே தப்புந பலவே

    மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்