Tag: எட்டுத்தொகை

  • துடி எறியும் புலைய

    புறநானூறு

    துடி எறியும் புலைய
    எறிகோல் கொள்ளும் இழிசின
    கால மாரியின் அம்பு தைப்பினும்
    வயல் கெண்டையின் வேல் பிறழினும்
    பொலம்புனை ஓடை அண்ணல் யானை
    இலங்குவாள் மருப்பின் நுதிமடுத்து ஊன்றினும்
    ஓடல் செல்லாப் பீடுடை யாளர்
    நெடுநீர்ப் பொய்கைப் பிறழிய வாளை
    நெல்லுடை நெடுநகர்க் கூட்டுமுதல் புரளும்
    தண்ணடை பெறுதல் யாவது படினே
    மாசில் மகளிர் மன்றல் நன்றும்
    உயர்நிலை உலகத்து நுகர்ப அதனால்
    வம்ப வேந்தன் தானை
    இம்பர் நின்றும் காண்டிரோ வரவே

    சாத்தந்தையார்

  • வெள்ளை வெள்யாட்டுச் செச்சை போலத்

    புறநானூறு

    வெள்ளை வெள்யாட்டுச் செச்சை போலத்
    தன்னோர் அன்ன இளையர் இருப்பப்
    பலர்மீது நீட்டிய மண்டைஎன் சிறுவனைக்
    கால்வழி கட்டிலிற் கிடப்பித்
    தூவெள் அறுவை போர்ப்பித் திலதே

    ஔவையார்

  • பாசறை யீரே பாசறை யீரே

    புறநானூறு

    பாசறை யீரே பாசறை யீரே
    துடியன் கையது வேலே அடிபுணர்
    வாங்குஇரு மருப்பின் தீந்தொடைச் சீறியாழ்ப்பொருள்
    பாணன் கையது தோலே காண்வரக்
    கடுந்தெற்று மூடையின்
    வாடிய மாலை மலைந்த சென்னியன்
    வேந்துதொழில் அயரும் அருந்தலைச் சுற்றமொடு
    நெடுநகர் வந்தென விடுகணை மொசித்த
    மூரி வேண்டோள்
    சேறுபடு குருதிச் செம்மலுக் கோஒ
    மாறுசெறு நெடுவேல் மார்புஉளம் போக
    நிணம்பொதி கழலொடு நிலம் சேர்ந் தனனெ
    அதுகண்டு பரந்தோர் எல்லாம் புகழத் தலைபணிந்து
    இறைஞ்சி யோனே குருசில் பிணங்குகதிர்
    அலமரும் கழனித் தண்ணடை ஒழிய
    இலம்பாடு ஒக்கல் தலைவற்குஓர்
    கரம்பைச் சீறூர் நல்கினன் எனவே

    அரிசில் கிழார்

  • வருகதில் வல்லே வருகதில் வல்என

    புறநானூறு

    வருகதில் வல்லே வருகதில் வல்என
    வேந்துவிடு விழுத்தூது ஆங்காங்கு இசைப்ப
    நூலரி மாலை சூடிக் காலின்
    தமியன் வந்த மூதி லாளன்
    அருஞ்சமம் தாங்கி முன்னின்று எறிந்த
    ஒருகை இரும்பிணத்து எயிறு மிறையாகத்
    திரிந்த வாய்வாள் திருத்தாத்
    தனக்குஇரிந் தானைப் பெயர்புறம் நகுமே

    ஓரம் போகியார்

  • ஒண்செங் குரலித் தண்கயம் கலங்கி

    புறநானூறு

    ஒண்செங் குரலித் தண்கயம் கலங்கி
    வாளை நீர்நாய் நாள்இரை பெறூஉப்
    பெறாஅ உறையரா வராஅலின் மயங்கி
    மாறுகொள் முதலையடு ஊழ்மாறு பெயரும்
    அழும்பிலன் அடங்கான் தகையும் என்றும்
    வலம்புரி கோசர் அவைக்களத் தானும்
    மன்றுள் என்பது கெட_______னே பாங்கற்கு
    ஆர்சூழ் குவட்டின் வேல்நிறத்து இங்க
    உயிர்புறப் படாஅ அளவைத் தெறுவரத்
    தெற்றிப் பாவை திணிமணல் அயரும்
    மென்தோள் மகளிர் நன்று புரப்ப
    ________________ ண்ட பாசிலைக்
    கமழ்பூந் தும்பை நுதல் அசைத் தோனே

    அடை நெடுங் கல்வியார்

  • எஃகுஉளம் கழிய இருநில மருங்கின்

    புறநானூறு

    எஃகுஉளம் கழிய இருநில மருங்கின்
    அருங்கடன் இறுத்த பெருஞ்செ யாளனை
    யாண்டுளனோவென வினவுதி ஆயின்
    வருபடை தாங்கிக் கிளர்தார் அகலம்
    அருங்கடன் இறுமார் வயவர் எறிய
    உடம்பும் தோன்றா உயிர்கெட் டன்றே
    மலையுநர் மடங்கி மாறுஎதிர் கழியத்
    அலகை போகிச் சிதைந்து வேறு ஆகிய
    பலகை அல்லது களத்துஒழி யதே
    சேண்விளங்கு நல்லிசை நிறீஇ
    நாநவில் புலவர் வாய் உளானே

    பெருங்கடுங்கோ

  • மனைக்கு விளக்காகிய வாள்நுதல் கணவன்

    புறநானூறு

    மனைக்கு விளக்காகிய வாள்நுதல் கணவன்
    முனைக்கு வரம்பாகிய வென்வேல் நெடுந்தகை
    நடுகல் பிறங்கிய உவல்இடு பறந்தலைப்
    புன்காழ் நெல்லி வன்புலச் சீறூர்க்
    குடியும் மன்னுந் தானே கொடியெடுத்து
    நிறையழிந்து எழுதரு தானைக்குச்
    சிறையும் தானே தன் இறைவிழு முறினே

    ஐயூர் முடவனார்

  • பெருநீர் மேவல் தண்ணடை எருமை

    புறநானூறு

    பெருநீர் மேவல் தண்ணடை எருமை
    இருமருப்பு உறழும் நெடுமாண் நெற்றின்
    பைம்பயறு உதிர்த்த கோதின் கோல்அணைக்
    கன்றுடை மரையாத் துஞ்சும் சீறூர்க்
    கோள்இவண் வேண்டேம் புரவே நார்அரி
    நனைமுதிர் சாடிநறவின் வாழ்த்தித்
    துறைநனி கெழீஇக் கம்புள் ஈனும்
    தண்ணடை பெறுதலும் உரித்தே வைந்நுதி
    நெடுவேல் பாய்ந்த மார்பின்
    மடல்வன் போந்தையின் நிற்கு மோர்க்கே

  • முன்றில் முஞ்ஞையொடு முசுண்டை பம்பிப்

    புறநானூறு

    முன்றில் முஞ்ஞையொடு முசுண்டை பம்பிப்
    பந்தர் வேண்டாப் பலர்தூங்கு நீழல்
    கைம்மான் வேட்டுவன் கனைதுயில் மடிந்தெனப்
    பார்வை மடப்பிணை தழீஇப் பிறிதோர்
    தீர்தொழில் தனிக்கலை திளைத்துவிளை யாட
    இன்புறு புணர்நிலை கண்ட மனையோள்
    கணவன் எழுதலும் அஞ்சிக் கலையே
    பிணைவயின் தீர்தலும் அஞ்சி யாவதும்
    இவ்வழங் காமையின் கல்லென ஒலித்து
    மான்அதட் பெய்த உணங்குதினை வல்சி
    கானக் கோழியொடு இதல்கவர்ந்து உண்டென
    ஆர நெருப்பின் ஆரல் நாறத்
    தடிவுஆர்ந் திட்ட முழுவள் ளூரம்
    இரும்பேர் ஒக்கலொடு ஒருங்குஇனிது அருந்தித்
    தங்கினை சென்மோ பாண தங்காது
    வேந்துதரு விழுக்கூழ் பரிசிலர்க்கு என்றும்
    அருகாது ஈயும் வண்மை
    உரைசால் நெடுந்தகை ஓம்பும் ஊரே

    வீரை வெளியனார்

  • ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே

    புறநானூறு

    ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே
    சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே
    வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே
    நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே
    ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக்
    களிறுஎறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே

    பொன்முடியார்